Tuesday, January 26, 2010

சூரிய ஒளி


சூரிய ஒளியை 
கருப்பு உள்வாங்கி இழுக்கும் 
வெள்ளை வெளித்தள்ளும் 
நேசத்தில் நான் கருப்பும் 
நீ வெள்ளையுமாய்.. 

கவிதை கருவுற்றது..


புதிதாய் 
பிறந்த கவிதையொன்றை 
உனக்குத் தர 
காத்திருந்தேன் 
கவிதையும் காத்திருந்தது 
வெகுநேரம் 
கண்ணைய்ர்வதும் 
திடுக்கிட்டு எழுவதுமாய் 
உறங்கியிருந்தேன் 
கவிதை உறங்கவில்லை.. 
உன் நுழைந்து 
என்னோடு பகிர்ந்தாய் 
உன்னை 
காத்திருந்த கவிதை 
கருவுற்றது.. 

வெள்ளை நிழல்


நீண்ட இரவில் 
உன்னோடு பயணம் 
கண்ணாடிகளில் 
பார்வை பகிர்ந்து 
வேகத்தடைகளில் 
நிதானம் மீறி 
இயல்பாக எழும் பெருமூச்சு 
உன் எல்லை வந்ததும் 
இறங்கி ஏதோ பேச 
ஏறியதென் கோபம் 
திரும்பிப் பார்க்காமல் 
முன்னேறுகிறேன் 
எதையனுப்பி 
இந்த முறை 
சமாதனப்படுத்தப்போகிறாய்? 
நினைத்தபடியே 
உறங்கிப் போனேன்.. 
நள்ளிரவில் சத்தமிட்டு 
எனதறைக்குள் 
சமாதானம் பேச வந்தது.. 
உனது வெள்ளை நிழல்..

நேசக்கிடங்கு


என் சிந்தனைகளை 
சேமிக்கவும் 
செலவு செய்யவும் 
இயற்கை எனக்களித்த 
நேசக்கிடங்கும் 
அறிவும் அழகும் நிறைந்த 
பெட்டகமும் நீ 

அசைவு


எப்படி 
கண்டுகொள்கிறாய்
பேசாத போதும் 
பார்க்காத போதும் 
துயருறும் 
என் மனதின் அசைவுகளை..  

காலணி


கட்டிலுக்கடியில் 
கழற்றிப் போடப்பட்டிருந்த 
என் காலணியில்
கண்ணாடி மின்னியபடியிருந்தது    
விளக்குகளை அணைத்த பின்னும் 
என் கண்களிலிருந்து 
கசியும் ஒளியும் 
காலணியின் கல்லிலிருந்து 
வெளியாகும் ஒளியும் 
இருளை ஊடுருவி 
வெளிச்சமான நுலிழை அளவிலான 
மெல்லிய ஒளிப்பாதையை 
சமைக்க 
அதிலேறிப் பயணப்பட்டது 
எனக்கான கனவுகள் 
தன் அத்தனை தடைகளையும் 
உடைத்தபடி.. 

நிலவெது நீயெது


நிலவிருக்கும் திசைநோக்கி 
அழைக்கிறேன்
வந்தபின் 
நிலவெது நீயெது 
அறியாமல் 
குழம்பினேன் 
சற்று நேர தடுமாற்றத்திற்குப் பின் 
கண்டுகொண்டேன் 
பிரகாசமேறியிருக்கும் 
உன் கண்களையும் 
அது சிந்தும் புன்னகையையும்  வைத்து.. 

எதை கைக்கொள்ள?


உன்னை 
எனக்குள்ளிருந்து 
இறக்கிவிட சொல்கிறாய் 
கால் வைத்து நுழைந்திருந்தால் 
கோல் வைத்து விரட்டியிருப்பேன் 
கண் வைத்தல்லவா 
நுழைந்திருக்கிறாய்..
அங்குள்ள அறைகளை 
உருட்டியிருக்கிறாய்.. 
மலர் கொடுத்து வரவேற்றிருந்தால் 
காம்போடு கிள்ளி  எறிந்திருப்பேன்.. 
மணம் கொடுத்தல்லவா 
வரவேற்றேன் 
சுவாசத்தில் ஒளித்து வைத்தேன்..
எதை புறம் தள்ள? 
எதை கைக்கொள்ள? 

ஒளி உமிழ் ..இருள் குடி


பின்னிரவில் 
பதற்றத்துடன்
விழிப்பு வருகிறது 
கைப்பேசியை 
அழுத்தி மணி பார்க்கையில் 
உனது ஐந்து குறுஞ்செய்திகளும் 
இரண்டு தவறிய அழைப்புகளும் 
வந்திருக்க 
உன்னை அப்போதே 
தொடர்பு கொள்ளும்பொருட்டு 
குறுஞ்செய்திகளையும் 
அழைப்புகளையும் செய்கிறேன் 
பதிலிறுக்காத நிலையில் 
நீ உறங்கி போயிருப்பாயென 
உணர்ந்து இருள் மேய்கிறேன்.. 
அந்த பின்னிரவு விடிகாலை நோக்கி 
மெல்ல நகரத் துவங்கியது 
இருள் குடிப்பதும் 
ஒளி உமிழ்வதுமாய்.. 

ஆடுகளம்

ஆட்டத்தின் 
ஆரம்பத்தை அறிந்தவனே
விதிகளை மீறி
ஆடுகளத்தில் நுழைந்தாய்
அதற்கு பெயர்
அழுகுணி ஆட்டமே
இதில் தோற்பவர்
வென்றவராகவும்
வென்றவர்
தோற்றவராகவும்
கருதப்படும்..
விருப்பம் இருந்து
விதிமுறைகள் அறிந்து
விளையாடத் தயாராயிருப்பவர்கள்
காலத்திற்குள் காலடி வைக்கவும்.
மற்றவர்கள் பார்வையாளராக
வெளியே நிற்கவும்..

புன்னகை

என் அதிகாலை 
தொடங்குவதும் 
இரவு போர்வைக்குள் 
அடங்குவதும் 
உன் புன்னகையின் 
வெளிச்சத்தில்.. 

வருகை


என் நொடிகளை 
நாட்களை 
நிமிடங்களை 
வெயிலும் மழையுமான 
பருவ காலத்திற்கு 
மாற்றியதுன் வருகை.. 

உன்னைவிட


ஒரு வருடம் 
ஒரு மாதம் 
ஒரு நாள் 
உன்னை விட 
வயது குறைவாயிருக்கலாம் 
நேசம் வைப்பதில்
உன்னைவிட 
ஒரு அங்குலமேனும் 
அதிகப்படியானவள் 
என்பதை மறுக்க இயலாது 
நீயும் கூட.. 

Monday, January 25, 2010

நந்தியாவட்டை

மொட்டுவிட்டிருந்த 
நந்தியாவட்டையின் 
ஒவ்வொரு இதழ்களிலும் 
உனக்கும் எனக்குமான சில சொற்கள் 
ஒளிந்திருந்தன.. 

வீட்டில் யாரும் பார்க்குமுன் 
பறித்து வந்து 
புத்தகத்தின் பக்கங்களில் 
வைத்து மூடினேன்.. 

இரண்டொரு நாட்களுக்குப் பின் 
பிரித்த புத்தகத்திலிருந்து 
விழுந்தது.. 
நந்தியாவட்டையும் 
குட்டி நந்தியாவட்டையும்.. 

Saturday, January 23, 2010

விழிகள்.

பண்பலை
கேட்டபடியே
உறங்கிப் போயிருந்தேன்..
நீ எனதறையில்
நுழைந்த போது ...

காதுகளிலிருந்து
கருவியினை
கழற்றி வைத்திவிட்டு
முடிகோதி
அருகமர்ந்தாய்..

உனது வாசம்
என் நாசி தொட
விழித்துப் பார்த்தேன்..
உற்றுப் பார்த்த
உன் விழிகளில் இருந்து
பெருகிய நேசத்தை
சிதறாமல் ஏந்தியது
என் விழிகள்..

நடுநிசி

எப்போதும்
பின்னிரவில்
விரல் கொண்டு தேடுகிறாய்
நாள் முழுதும்
உன்னைத்  தொடருமெனக்கு
அந்த நடுநிசியில்
சிறு ஆறுதலை
தருகிறது..
உன் தேடுதல்..

தோள்

பகல் நேர
வெயிலின் கொடுமை
இரவு நேர
பனியின் கடுமை
ஏதும் செய்திடாது
உன் தோள் பற்றி
செல்லுமென்னை..

இரை

நெருக்கடியான
வேலைகளுக்கு
இடையிலும்
கிடைக்கும் துளி
நேரத்தையும்
உன் நினைவின் பசிக்கு
இரையாக்கி விட்டு
பசித்திருக்கிறேன்..

சட்டை பை

விழி மூடி
கிடக்கையிலும்
உன் நினைவு ஓடிக் கடக்கிறது
நொடிதோறும்..
ஒரு அடி கொடுத்து
உறங்க வைக்கிறேன்..
வாய் பொத்தி
அழுதது
கண்ணயர்ந்த போது
மீண்டும் எழுந்தோடுகிறது..
உன் சட்டைப்பை நோக்கி..

Friday, January 22, 2010

குட்டித் தொப்பை

என் குட்டித் தொப்பை 
மேலெழும்பும் போதெல்லாம் 
நீ அவை பற்றி 
சொன்ன விளக்கங்களும் 
கேலிகளும் 
எழும்பி அடங்குகின்றன.. 

அனைத்தையும்

என்னிடமிருக்கும் 
அனைத்தையும் 
உனக்கு தந்து விட்டுதான் 
செல்வேன் 
இவ்வுலகிலிருந்து.. 

வட்டி


நீ 
ஒவ்வொரு முறையும் 
என்னிடம்
கடன் வாக்கிச் செல்லும் 
நே(ச)ரத்தை 
உன்னிடம் 
முதலீடு செய்வதாகவே 
எண்ணுகிறேன்.. 
எப்போது 
திருப்பித் தரப் போகிறாய்? 
வட்டியும் 
முதலுமாய்.. 

மொழிபெயர்

மொழிப் புலமை 
உடையவனே 
எப்போது 
மொழிபெயர்க்க போகிறாய் 
நீ ஒருமுறை கூட 
வாசித்தறியாத 
இந்த நவீன கவிதையை.. 

Thursday, January 21, 2010

மெல்லிய பனி

மெல்லிய பனிப்படலமாய் 
படர்கிறாயென் 
பொழுதுகளைச் சுற்றி 
சூரியக்கதிர்கள் 
சுடும் நிலையில் 
வட்டச் சுவரெழுப்புகிறாய்.. 
மழைத்துளிகளால்..
பயணமெங்கும்
சுவடுகளை விட்டுச் 
செல்கிறேன்.. 
வழி தவறி போய் விடாமலிருக்க.. 

நிலாத் துண்டு

அலையில் விழுந்து
சிதறி தெறித்த
நிலா துண்டுகளைப்
பொறுக்கி
என் மடியில் சேகரிக்கிறாய்..
மணலில் காய்ந்த
நிலவு ஓடி வந்து
தட்டி விடுகிறது..
அலைக்குள்
நிலாத் துண்டுகளோடு
தடுமாறி
விழுந்த என்னை
அள்ளிக் கொண்டாய்
முழு நிலவென..

புன்னகை


களத்தில் நிற்குமென் 
அத்தனை ஆயுதங்களையும் 
பலவீனமாக்கி விடுகிறது.. 
உன் புன்னகை.. 

இளைப்பாறு..

இன்னும் 
திறந்து படிக்கப் படாத 
குறுஞ்செய்தி பயணத்தின் 
நடுவேயான 
இளைப்பாறுதல்.. 

மௌனம்


அவ்வப்போது 
சிறு மௌனமொன்று 
நம்மைக் 
கடக்கிறது 
அதன் வாயில் 
சில உணர்வுகளைக் 
கவ்வியபடி.. 

Wednesday, January 20, 2010

சிறுபிள்ளை





நாளை 
ஊருக்கு கூட்டிப் போவதாக 
சொல்லி 
இன்று ஒழுங்காய் படிக்கச் 
சொல்லுவதை தட்டாமல் 
செய்யும் சிறுபிள்ளையினைப் போல் 
ஆக்கி வைத்தாய் என்னை... 

கேள்வி

உன் ஒற்றைக் கேள்விக்கு 
நான் ஆயிரம் பதில்களைத் 
தருவது பெரிதா?
என் ஆயிரம் கேள்விகளுக்கும்

 நீ தரும் ஒற்றை பதில் பெரிதா? 

கவிதை


எல்லோருக்கும் பிடித்தமான
கவிதையொன்றை 
எழுதுவது என் நோக்கமல்ல.. 
எனக்கான வலிகளை 
மகிழ்வினை 
கடந்த ஒற்றை நிமிடத்தை 
எல்லைகளை 
அதை உடைக்கும் ஆர்வத்தை 
பதிவு செய்கிறேன்.. 
கவிதையேனும் பட்சத்தில் 
படித்துச் செல்லுங்கள் 
அற்ற போதில் 
பார்த்துச் செல்லுங்கள் 
கூறு கட்டப்பட்ட சொற்களென.. 

பிஞ்சு மனம்


நேரில் வருவாய் 
நேசம் தருவாய்
எனும் நினைப்போடு
இரவோடு இரவாக 
ஒருநாள் முன்னதாக 
தலை நகர் நோக்கி வந்த 
என் பிஞ்சு மனம்
ஏமாந்து போனது 
உன் மறுதலிப்பால்... 

ஏன்


நினைவாகவும் 
நிலவாகவும் 
என் பொழுதுகளில்
புகுந்து விளையாடுகிறாய்.. 
உடன் விளையாடும் 
நோக்குடன் என் குரல் 
கேட்டால் மட்டும் 
ஏன் தப்பித்து ஓடுகிறாய்? 

சொல்லச் சொல்ல


எச்சரிக்கை செய்தும் 
கேளாமல் 
சாலை மணலில் 
விளையாடி 
கைகால் சிராய்ப்புடன் 
அழுது கொண்டே 
வீடு திரும்பும்
குழந்தையினைப்  போல் 
என் மனம்
இன்று வலி கண்டது 
நீ சொல்லச் சொல்லக் 
கேட்காமல்
நான் செய்த 
ஒரு செயலால்...  

Monday, January 18, 2010

காதலைக் கட

காதலைக் கடந்தும் யோசிக்கிறேன்..
உன்னோடு
என் வாழ்வை அர்த்தம் நிரம்பியதாக
ஆழமுள்ளதாக
ஆயுள் முழுதும் தொடர்வதாக
கையகப்படுத்திக் கொள்ள
காதலைக் கடந்தும் யோசிக்கிறேன்
ஆகப் பெரும் உன்னைப் பற்றி..

உள்வாங்கு

அபரிமிதமாய்
வாரி வழங்கும்
நேசத்திற்கு மாற்றாய்
உன்னால்
எதை கொடுக்க இயலும்?
அதை உள்வாங்குவதைத் தவிர..

பச்சை நரம்பு

எவரும் பார்ப்பதில்லை
இரத்தத்தில் தோய்க்கப்பட்டு
என்னில் கசியும் வலியினை..
எவரும் கேட்பதில்லை
இரவுகளில் சுவர்கள்
விரிசலடையும்
அளவுக்கான
அழுத்தமாக முனகும் குரலை..
எவருக்கும் புரிவதில்லை..
என் பச்சை நரம்புகளினூடே
பயணிக்குமென்
மெல்லிய விருப்பத்தை..

விறைப்பு

இலை ஏந்தும்
மழைத்துளியென
இருந்தயென் இரவு
மாறிப் போயிருக்கிறது..
பெருங்கூச்சலிடும்   
கடலலையாய் 
இன்னும் பதிலிறுக்காத
உன் மௌனத்தின்
விறைப்பால்

பிரியத்தின் ஊடாக

உன்னிடம்
சொல்ல விரும்பிய
அந்த வார்த்தை
என் நினைவிலிருந்து
மங்கிப் போகலாம்..
நீ கேட்க விரும்பும் நட்கில்
ஆன அபோதும்
அந்த வார்த்தையாகவே
மாறிப் போயிருக்குமென் வாழ்க்கை
உனது பிரியத்தின் ஊடாக..

எல்லை

கண்ணுக்குப் புலனாகாத
வெளிப்பாடுகளில்
ஒன்றாகவிருக்கும்
எனது நேசம் மொத்தமும்
உன்னால் மட்டுமே
உணரக் கூடியதாயிருக்கும்
எல்லாவித
எல்லைகளைக் கடந்தும்..

சுருள் முடிகள்

சுருள் சுருளான
என் முடிகள்
காற்றை இடைநிறுத்தி
சற்று நேரம் ஈரம் உலர்த்தி
விடைக் கொடுக்கிறது..
புன்னகையோடு புறப்பட்ட
காற்று மாலை
மீண்டும் திரும்பிய போது
சுருள் முடிகள் கைநீட்டியது..
இருள் மேவியிருக்கும்
என் கண்களை..
அதன் ஈரத்தை உலர்த்த..

குட்டித் தொப்பை


உன்னோடு பேச
என் குட்டித் தொப்பைக்கும்
சிறு வாய்
முளைத்துள்ளது
ஒன்றிரண்டு
பால் பற்களும்..

தொலைவு


நிலத்தின் தொலைவைக்
கடந்து விடுவேன்..
இந்த இரவு
விடிவதற்குள்
நெஞ்சத்தின்
தொலைவைக்
கடப்பது எப்படி?

பூமராங்

என்னிடமிருக்கும்
எளிய சொற்களை
உன் மீதெறிகிறேன்..
அவை உன்னிடமிருந்து
நான்கைந்து வலிய சொற்களை
உறிஞ்சி திரும்புகிறது..
பூமராங்கையும் மிஞ்சி..

திமிர்

உன் திமிர் பிடித்த
மௌனத்திற்கு
சொல்லி வைக்கிறேன்..
என் காற்றாட்டு வெள்ளத்தின்
நேசத்திற்கு முன்னால்
தாக்குபிடிக்க இயலாது
நெடுநாட்களுக்கு..  

துயில் களை

அடைக்கப்பட்ட
கண்ணாடி ஜன்னல்களின்
இடுக்குகளில் இருந்து கசியும்
வாடைக்காற்றில் எலும்பும்
உருகிவிடும் போலிருக்கிறது..
உன் துயில் களைந்து
சில வார்த்தைகள் பேசு..
குளிருக்கு இதமாய்
போர்த்திக் கொண்டு பயணிப்பேன்..

கவிதையின் கரு

நீ ஆமாம் என்று
சொல்லாத வரை
நான் இல்லை என்று
மொழியாத வரை
நம் நிலத்தில்
எந்த திசையிலும்
நிழலுக்கு பஞ்சமிருக்காது
நம் நெருக்கத்தின்
எந்த நேரத்திலும்
கவிதையின் கருவிற்கு
குறைவிருக்காது..

வழியெங்கும்

உன்னை சுமையென கருதி
இறக்கி விட்டு
பயணிப்பதில்
உடன் பாடில்லை
உன்னை சுகமென இருத்தி
பயணிக்கிறேன்
செல்லும் வழியெங்கும்
மகிழ்வின் சாரல்
வருடுகிறது
மனம லேசாய்
பூமியில் புரளுகிறது..

சிறகு


உன்னைக் காணும் போதில்
சிறகு முளைத்திருக்கும்
என் கண்களுக்கு..
பேசும் போதில்
வண்ணம் ஏறியிருக்கும்
என் வார்த்தைகளுக்கு..

பதில்

உன்னிடமிருந்து
ஒற்றை பதிலை பெறுவதற்கு
ஆயிரம் கேள்விகள்
தேவைப்படுகிறது
நீ கேட்கும்
ஒற்றைக் கேள்விக்கு
என்னிடமிருந்து
ஆயிரம் பதில்கள்
வெளிப்படுகிறது..