Tuesday, June 29, 2010

மௌனம்.

தகித்தலையுமென்
நேசத்தின் மீது
நிச்சயமின்மை பற்றிய
பயத்தை 
நிகழ்த்திக் கொண்டிருக்கிறது
உன் பெரு மௌனம்..

கவலைப் படாதேஉன் நண்பர்கள் யாரும் எனக்கோ
என் நண்பர்கள் யாரும் உனக்கோ
தொடர்பில்லாத போது 
என் இல்லாமையை 
எப்படி உனக்கு அறியத் தர.?
கவலைப் படாதே
உன் கண்ணெதிரிலேயே
உயிரற்றுப் போகிறேன்..

Saturday, June 12, 2010

உனக்குள்

நான் செல்லும் வழியெங்கும் 
உனக்கான கவிதைகளை 
விதைத்துச் செல்கிறேன் ..
நான் தொலைந்து போகும் 
ஒரு தருணத்தில் 
என் சொற்களில் ஏறி பயணி.. 
அந்த சொற்களின் முடிவு நீ 
புறப்பட்ட இடத்திலேயே 
உன்னைச் சேர்க்கும்.. 
ஆம்..
ஒருநாள் யார் புலன்களுக்கும் 
தெரியாமல் 
தொலைந்து போயிருப்பேன் 
உனக்குள் 

இன்னும் ஒரே இரவு.

''துயர்மிகு வரிகளை இன்றிரவு 
நான் எழுதக் கூடும்"
பாப்லோ நெரூடாவின்
அந்த வரிகள் 
என்னை அழுத்திக் கொண்டேயிருக்கிறது.. 
  
நீ இரவாகும் போது 
நான் நிலவென்றும் 
நீ நிலவாகும் போது 
நான் இரவென்றும் 
நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள் 
வலியை அதிகப்படுத்துகிறது.. 

ஒவ்வொரு முறையும் 
உன் வரவால் 
அலங்கரிக்கப்பட்ட இரவு 
மூன்று நாட்களாக 
மூளியாயிருக்கிறது.. 

நீ வந்துவிட்டால் 
இனி ஒவ்வொரு இரவும் 
முழுநிலவின் உச்சம்.. 
உன் வருகைக்காக
என்னிடமிச்சமிருக்கிறது 
இன்னும் ஒரே இரவு..

காட்சிப் பிழையாய்
காட்சிப் பிழையாய் 
நகருமென் கணங்களில் 
சரியாய் பொருந்தியிருக்கிறாய்..
எங்கெங்கு காணினும் 
நீயே தோன்றுகிறாய்..
குறைந்த தூர, நீண்ட தூர பயணத்தில்
பேருந்திற்காக காத்திருக்கையில்
பேருந்தில் ஜன்னலோரத்தில் தலைசாய்க்கையில்
எங்கேனும் மண்வாசம் உணருகையில்
திடீரென மழை நனைக்கையில்
கொளுத்தும் வெயிலில் மரநிழல் எதிர்ப்படுகையில்
முடியைக் கலைக்கும் ஜன்னல் காற்றில்
குழந்தைகளுடன் குதூகலிக்கையில்
சொந்தங்கள் பலவும் பேசுகையில்
நண்பனின் திருமணத்தில்
தூரத்து உறவினரின் இரங்கலில்
பாட்டியென் கைபற்றி பேசிய கணங்களில்
பசி வயிற்றைக் கிள்ளியெறியும் போதில்
வயிறு நிரம்பியிருக்கும் வேளைகளில்
அலுவலக வேலை நேரங்களில்
அமைதியை நாடும் தனிமையில்
மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்கையில்
அதுனூடாக இரகசிய வார்த்தைகளை இடுகையில்
மெல்லிசையில் மனம் லயிக்கையில்
குறுஞ்செய்தி வருகயில் எழும் ஒலியில்
தொலைபேசி அழைப்பு வருகையில்
சிக்னலில் பரபரக்கையில்
படுக்கையில் ஓய்வெடுக்கையில்
நாளிதழ்கள் வாசிக்கையில்
கவிதைகள் படிக்கையில் 
கனவுகளை நினைக்கையில்
எண்ணங்களை சொல்கையில்
ஏக்கங்கள் எழுதுகையில்
துயரம் மேலிட அழுகையில் 
மகிழ்ச்சி எட்டிப்பார்க்கையில்
படுவேகத்தில் நிதானிக்கையில்
ரசனை மிகுகையில்
காலை எழுமுன் உருண்டு புரள்கையில்
இரவு நித்திரையில் வீழ்கையில்
இதயம் துடிக்கும் தோறும்
இமைகள் மூடியிருக்கும் போதும்
வாழ்தலின் தூண்டுதலிலும்
மரணத்தின் விளிம்பிலும்
எங்கெங்கு காணினும்
காட்சிப் பிழையாய்
சரியாய் பொருந்தியிருக்கிறாய்!
 

இந்த நொடியில்..

இன்றில்லைஎனில் 
நாளை 
நாளையில்லைஎனில் 
நாளை மறுநாளென 
சமாதானமாகி 
தள்ளிப்போட விருப்பமில்லை 
நிமிடத்தில் மாறக்கூடியது 
வாழ்க்கையும் உணர்வும்.. 
வந்துவிடு வாழ்ந்துவிடலாம் 
இந்த நொடியில்.. 

நேசி

இதுதான் 
உன்னை நேசிக்கக் காரணமென 
என்னால் சொல்ல முடியாது.. 
இதுதான் 
என்னை நேசிக்க முடியாததற்கு 
காரணமென 
உன்னால் சொல்ல முடிகிறது.. 

புரிதலுடன்..

எனக்கு சந்தோசம் வந்தால் 
கொஞ்சவும் 
கோபம் வந்தால் 
மிஞ்சவும் 
உன்னைவிட்டால் 
யாருண்டு 
இவ்வுலகில் 
புரிதலுடன்.. 

காதல் வாழ

என் காதல் செத்து 
நான் வாழ்வதை விட 
நான் செத்து 
என் காதல் வாழட்டும்

உன் விழிப்பிற்குப் பின்.

துக்கம் மேலிட 
அழும் மனதின் ஓசை 
உன் தூக்கத்தைக் 
கலைக்கக் 
கூடுமென 
ஒத்தி வைக்கிறேன் 
என் துக்கத்தை 
உன் விழிப்பிற்குப் பின்.

எறும்பின் வரிசை

என் சொற்களின் கதிபற்றி
நன்றாகவே தெரியும்..
அவை எறும்பின் வரிசை
சரசரவென உதிர்வதுபோல
கொட்டுகின்றன..

சிலவற்றில் மகரந்தமும்
சிலவற்றில் சூலும்
இன்னும் சில பதராகவும்.. 

மரணம்

என் கண்ணீர்த் துளிகளைத் 
துடைக்க உயிர்த்தெழுவாய் எனில்    
ஒருபோதும் 
உன்னை மரணம் 
அழைத்து செல்ல முடியாது.

நான் யார் காதலுக்கு..

பெருந்துயர்களையும் 
பேரிடர்களையும் 
சந்தித்துவிட்ட என் 
பயணத்தில் 
உயிருக்குள் 
கிள்ளிப் போட்ட 
நெருப்பாய் சுடுகிறது..
காதலை ஏந்தி செல்வது 
ஏந்தி செல்லவோ 
இறக்கி விடவோ 
நான் யார் காதலுக்கு.. 

நிராயுதபாணி

காதலே 
உன்னைக் கொன்று புதைக்க
ஆயுதமேந்தினேன்.. 
நீ 
எனக்கெதிராய் 
ஆயுதமேந்தினாய்..
நிராயுதபாணியாய்..

பெண்மை

நினைவின் அடுக்குகளில் 
மடிப்பு கலையாமல் 
ஏறி செல்கிறாய்.. 
உன் பாதம் 
பட்ட இடங்களில் 
பூத்துக் கிடக்கிறதென் 
பெண்மை...

பிரபஞ்சம்

என் இதய பலூனில் 
நிரம்பி வழியும் காதல் 
உன் ஒற்றைச் சொல்லில் 
வெடித்துச் சிதறி 
பிரபஞ்சத்தை நிரப்ப 
பலூனாகிறது 
பிரபஞ்சமும்

ஒப்பனை

எப்போது 
உடன் வரப் போகிறாய் 
ஒப்பனைகளை 
நானே ரசிக்கும் 
தனிமையைக் கொல்வதற்கேனும்

இறுதியாய் உன் முகம் மட்டும்

மரணத்தின் விளிம்பில் 
கண்மூடி சரிகிறேன்.. 
உன் முகம் மட்டும் 
இறுதியாய் 
என் நினைவில்.. 
உடனே 
வாழ்தலுக்கான 
பெருவிருப்போடு 
மரணத்தை வெல்கிறேன்..

கையளவு

காதலுக்குள் 
இறங்கியவர்களை விட 
காதலை 
தள்ளி நின்று 
பார்க்கிறவர்கள் 
அள்ளிச் செல்கின்றனர் 
கையளவு காதலையாவது.. 

உன் வாழ்க்கை

வாழ்க்கையையே 
பணயம் வைத்தேன் 
உன் காதலுக்காக 
என் காதலையே 
பணயம் வைத்தாய்
உன் வாழ்க்கைக்காக.. 

வெற்றியல்ல

இவ்வளவு நாட்கள் 
இழந்ததெல்லாம் இழப்பல்ல 
உன்னை 
நான் சேர்ந்துவிட்டால்.. 

இனிமேல் 
பெறுபவை எதுவும் 
வெற்றியல்ல 
உன்னை 
நான் இழந்துவிட்டால்...

குறுஞ்செய்திஇலையோடு 
மழை பேசும் ரகசியமாய் 
என் அலைபேசியோடு
உன் குறுஞ்செய்தி.

ஒன்றைத் தேர்ந்தெடு

ஒவ்வொருமுறையும் 
வார்த்தை முத்துக்களை உதிர்த்து 
காதலா? நட்பா? என சொல்ல 
இதயம் பல்லாங்குழியில்லை.. 
மூடிய கையை நீட்டி 
ஒன்றைத் தேர்ந்தெடுக்க 
இது ஒத்தையா? ரெட்டையா? இல்லை.. 
சிறு தக்கையினை 
மணலில் மூடி வைத்து 
சரியான இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல 
இது கிச்சுக் கிச்சு தாம்பாளமில்லை. 
மொத்தத்திலென் முடிவை மாத்திக் கொள்ளும் 
உத்தேசம் ஏதுமில்லை.. 
என் நேசமொன்றும் 
விளையாட்டுப் பொருளில்லை.