Thursday, August 26, 2010

வானம்

மழை வரும் 
நாட்களில் மட்டும்தான் 
உன்னைச் சந்திப்பதென 
முடிவெடுத்த பிறகு 
வானம் 
மேகமூட்டத்துடனேயே இருக்கிறது 
மழைக்கான அறிகுறியுடன்.. 

புழங்கப்படாத நேசத்தின் மீதான வலி

ஆதி நாட்களிலும் 
முந்தைய நாட்களிலும் 
அதற்கு பிறகான நாட்களிலும் கூட 
மாறாதிருக்கிறது 
புழங்கப்படாத நேசத்தின் 
மீதான வலி..

தேர்ந்தவை

உன்னைப் பற்றி 
எழுதுகையில் 
தேர்ந்த வார்த்தைகளை 
தேடுவதில்லை நான்..
உன்னை எழுதும்
எல்லா வார்த்தைகளும் 
தேர்ந்தவையாகிவிடுகின்றன.. 

நிறைந்திரு


நிறைத்திருக்கிறாய்
நிறைந்திருக்கிறாய்
காணக் கிடைக்கும்
அத்துணை காட்சிகளிலும்
கேட்கக் கிடைக்கும்
அத்துணை மொழியிலும்
பேசக் கிடைக்கும்
அத்துணை வார்த்தைகளிலும்
உணரக் கிடைக்கும்
அத்துணை உணர்வுகளிலும்
மட்டுமின்றி
உன்னைச் சந்திக்கக்
கிடைக்காத வாய்ப்புகளிலும் கூட

பேசி விடு

மிக நெருக்கமானவர்களுக்கு
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
பேசி விடுங்கள்
நேரமின்மை
நினைவின்மை
வேலைப்பளு
தொழில்நுட்பக் காரணங்கள்
இவையாவுமிருப்பினும்
ஒரு நாளில்
ஒருமுறையேனும்
எப்படியாவது பேசி விடுங்கள்
அது இருவரில்
ஒருவருக்கு
கடைசி தருணமாக இருக்கலாம்.

சாட்சிகள்

சாட்சிகள்
சம்பவ இடத்தின் பதிவுகள்
விசாரிக்கப்பட வேண்டியவை
குறுக்கு விசாரணைக்குட்பட்டவை
சாட்சிகள் திரிக்கப்படுகிறது
நீதியி கழுத்து நெரிக்கப்படுகிறது
சாட்சிகள் எதிர்கேள்விகள்
கேட்க அனுமதிக்கப் படுவதில்லை..
சாட்சிகள் எப்போதும்
சாட்சிகளாகவே இருக்கின்றன...

குற்றவுணர்வு

சாலை நடுவினில் 
சக்கரமொன்றில் 
அடிபட்டு துடித்த 
எலியினை
இன்னும் சில சக்கரங்கள்
அழுத்திச் சென்றிருக்கிறது
என் வண்டிச் சக்கரமும் 
அழுத்தி நகர்ந்த போது
ஒட்டிக் கொண்டது
குற்றவுணர்வு.

எனது முதல் மரணம்

உன்னால்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
அது ஒரு பருவ காலம்
அழகிய நிலவு நேரம்
நீயும் நானும்
நேசத்தை தங்குதடையின்றி
பகிர்ந்துகொண்டிருந்தோம்
பின்னர் வந்த இரவொன்றில்
பெருக்கெடுத்தோடும்
நேசத்தின் பாதையினை
மாற்றியமைக்க
விரும்புவதாகச் சொன்னாய்
பின்வாங்க மறுத்த நேசம்
கதறியழுதது
சுவாசம் திணறியது
கண்டு கொள்ளாது
திரும்பி நின்றாய்
ஒருவழியாய்
துடிதுடித்து சாகடிக்கப்பட்டதென்
உணர்வுகள்
உணர்வுகள்
சாவதே முதல் மரணம்
எனது முதல் மரணம்
நிகழ்த்தப்பட்டுவிட்டது
உனது சுயநினைவுடன்.

நிபந்தனைக்குட்பட்ட நேசம்

சமூகத்திலிருக்கும்
சில பிற்போக்குத்தனங்களின்
ஆக்கிரமிப்பிலிருக்கும்
உன் நிபந்தனைக்குட்பட்ட நேசம்
சிரமத்தில் ஆழ்த்துகிறது
என் வாழ்வினை..
இன்னுமாய்
உனது வார்த்தைகளும்
நிகழ்த்துகிறது
எனதிடத்தில்
ஆக்கிரமிப்புகளை.

புதுமை முலாம்

அசாத்தியங்களை 
முன் வைக்கத் துணியாத 
அல்லது ஏற்க முனையாத
உனது புதுமை முலாம் 
பூசப்பட்ட பழமைகளில்
நசுக்கப்படுகிறது 
எனக்கான விருப்பங்கள்

Thursday, August 12, 2010

நீ இரவு & நான் நிலவு

தூங்கும் முன்பும்
தூக்கத்தின் நடுவிலும்
எழுந்ததும்
குளித்ததும்
சாப்பிட்டதும்
அலுவலகம் செல்லும் முன்பும்
செல்லும் வழியிலும்
சென்ற பின்னும்
வேலையினிடையேயும் 
அலைபேசியை எடுத்துப்
பார்ப்பது வழக்கம்
உன் குறுஞ்செய்திக்கும் 
அழைப்பிற்கும் 
ஏங்கித் தவிக்குமென்
மனதிற்கு ஒரே ஆறுதல்
இன்னும் பத்திரப்படுத்தியிருக்கும்
ஆறு மாதத்திற்கு முன்
உன்னால் அனுப்பப்பட்ட 
‘நீ இரவு & நான் நிலவு’
எனும் குறுஞ்செய்தி.

Thursday, August 05, 2010

நேசம்

அற்பமாகவும்
சொற்பமாகவும்
நினைக்கப்படுகிறயென் நேசம்
விசுவரூபமெடுத்து 
உன்னை மூழ்கடிக்கும் 
அப்போதறிவாய் 
அதன் அற்புதத்தை

நினைவு

எப்பாடு பட்டேனும் 
கரையேற்றத் துடிக்கிறேன்
உன் அதீத நேசத்தில்
மூச்சுத் திணறும் 
என் நினைவுகளை

சாட்சி

அன்பிற்குச் சாட்சியாக 
அளித்த 
பரிசுப் பொருட்களை
இரும்புப் பெட்டியிலிட்டு 
அடைத்து வைக்கிறாய்..
உன் காதலைப் போல

Wednesday, August 04, 2010

பதுங்குகுழி


யாரேனும் கையகப்படுத்தக் 
கூடாதெனும் 
பரிதவிப்புடன்
பதுங்குகுழி 
தேடியலைகிறதென் நேசம்

Monday, August 02, 2010

சிறு சிதறல்

எதிலும் 
வீழ்ந்துவிடக் 
கூடாதென்ற 
கவனத்தில் ஏற்பட்ட 
சிறு சிதறலில் 
நுழைந்துவிட்டாய்
என் வாழ்விற்குள்

புரிந்து கொள்

உன் பார்வையில் நட்பும்
என் பார்வையில் காதலுமாய்
தொடரும்
பயணத்தின் முடிவு
எதுவாக இருப்பினும்
அதனுள்ளே உயிர்த்திருப்பது 
புரிதலும், நம்பிக்கையுமே
புரிந்து கொள்வாய் 
நம்புகிறேன்..

துயரத்தின் வேர்கள்

உனதிருகைகளுக்கிடையேயென் 
முகம் தாங்கியுன் 
கூர் பார்வையில் 
உதடுகள் சிறிதே
விரிந்தசையும் போதிலென்
துயரத்தின் வேர்கள்
தூள் தூளாகும்.

அழை

எத்தனையோ பேரை
நண்பனென அழைக்கும்போதும் 
அறிமுகப்படுத்தும் போதும் 
பிறரிடம் சொல்லும் போதும் 
இல்லாத ஒன்று 
உன்னை 
நண்பனென 
அழைக்கும்போதும் 
அறிமுகப்படுத்தும் போதும் 
பிறரிடம் சொல்லும் போதும்  
வந்து ஒட்டிக் கொள்கிறது.. 
சிறு வெட்கத்தினூடாக ...