Tuesday, March 30, 2010

காதலற்ற உன் இதயத்தில்


மகிழ்வுறுமென் கனவுகளையும்
துயருறுமென் இரவுகளையும்
உனக்கு சொல்வதற்கு பிரியமில்லை..

எனது பெருந்துயரும்
சிறு மகிழ்வும்
என்ன தந்துவிடக் கூடும்
காதலற்ற உன் இதயத்தில்..

உதிரும் கண்ணி


எனது எதிர்பார்ப்பின் 
எல்லைகளைத் தகர்த்தெறியும் 
உனது அலட்சியத்திலென்
நினைவிலிருந்து
ஒவ்வொரு கண்ணியாய்
உதிர துவங்குகிறாய்..

நீளும் பொழுதுகளில் சேமிக்கிறேன்
உதிரும் கண்ணிகளை
மீண்டும் நினைவில் கோர்ப்பதற்கு..

குறுஞ்செய்தி


எதிர்காலம் பற்றிய
எந்தவொரு அச்சமுமற்று
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட
ஏங்குமென் மனதின் 
அத்துணை துயரங்களையும்
துடைத்தெறிந்து விடுகிறது
கடந்தகாலத்தில் நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள்...

நடைபாதை


பெரும் இரைச்சலுடன்
கடந்து போகும் வாகனப் பொதிகளுக்கு
மத்தியில்
கண்ணீருடன் பயணப்படுமென் 
விழிகளை யாரும் 
கண்டு கொள்ள இயலாதுதான்.. 

சொட்டு சொட்டாய் வீழும் கண்ணீரைத் 
தொட்டுத் தொட்டு உலர வைக்கும்
காற்றுக்கு மட்டும் 
என் கண்ணீருக்கான இரகசியம் தெரியும்.. 

யாரிடமும் சொல்லத் தெரியாத 
காரணத்தால் 
காற்றை மட்டும் அனுமதித்திருக்கிறேன்..
என் கண்களுக்கும், கனவுகளுக்குமான
நடைபாதைகளில்..

மாறாதிருக்கட்டும் எதுவும்


ஒரு காலகட்டத்தில் 
நமக்கிடையேயான 
பிரமிப்பு 
நீங்கிப் போகலாம்..
அப்போது நாம் 
பிரியமாயிருப்பதே
பிரமிப்பாயிருக்கலாம்..

ஒரு நேரத்தில் 
நமக்கிடையேயான
ரசனைகள் மாறிப் போகலாம்
அந்நாளில் நமது 
ஒத்த சிந்தனைகளே
ரசனையாகலாம்..

ஒரு பொழுதில்
நமக்கிடையேயான
அத்தனையும் கசந்து போகலாம்..
ஆனபோதும்
முந்தைய தினசரி பதிவுகளே
சர்க்கரையாகலாம்..

எல்லாம் மாறிப் போகட்டும் விலகலில்.. 
மாறாதிருக்கட்டும் எதுவும் நெருக்கத்தில்..

Thursday, March 18, 2010

எழுத்துரு

எழுத்துரு 
பிரச்சினை இன்றி 
வளைந்து கிடக்கும் கொம்புகளையும் 
மாறிப்போயிருக்கும் கால்களையும் 
சரியாகப் பொருத்தி 
புரிந்து படித்து விடுகிறாய்.. 

புரிந்து கொள்ள 
முயற்சிக்கவே  இல்லை
கவிதையிலிருக்கும் 
என் வார்த்தைகளையும் ..
மாறாதிருக்கும் என் நேசத்தையும்.. 

Tuesday, March 16, 2010

கடற்கரையில் உலவும் காதல்


மாதா கோவிலில் இருக்கும்
உன்னை நினைத்தபடி
வெள்ளிக்கிழமை பூஜையில் நான்

பூஜையில் இருக்கும்
என்னை நினைத்தபடி
மாதா கோவிலில் நீ

இரு தெய்வங்களும்
நம்மைப் பற்றி பேசியபடி
உலவுகின்றன
கடற்கரை மணல் வெளியில்

Monday, March 15, 2010

தனிமையின் நிழலில்

தற்கொலை செய்து கொள்ள
அதீத தைரியம்
தேவைப்படுகிறது..

ஒரு நொடி மாற்றத்தைக்
கைப்பற்றிக் கொள்ளும்
அவசரம் தற்கொலைக்கு
முக்கியமானது..

அந்த நிமிடத்தைக்
கடந்து விட்டால்
அது செயலிழந்து போகவும் கூடும்..

தற்கொலைக்கு
ஒற்றை சிறிய காரணம் கூட
போதுமானதாயிருக்கிறது..

தான்தோன்றியாய் அலையும்
தற்கொலைக்கு
தனிமைவாதிகளை மிகவும்
பிடித்துப் போகிறது..

அங்கங்கே
இளைப்பாறும்
தற்கொலை
பதுங்கியிருக்கிறது
தனிமையின் நிழலில்..

Thursday, March 11, 2010

தானியங்கிபடி


நமக்கிடையே ஏற்பட்ட 
ஊடலில்
முதல் தளத்திலேயே 
சில பொருட்களை 
வாங்கிவிட்டு திரும்புகிறோம்.

அருகில் 
தானியங்கிபடி
நகர்ந்து கொண்டேயிருந்தது

முன்னொருமுறை
தானியங்கிபடியில் பயணிக்கையில் 
பயத்தில் உன் கைகோர்த்துக் கொண்டது
நொடிநேரமேயாயினும்
நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தது

அந்த நினைவுகளை 
செரித்தபடி 
இருவரும் நகர
ஊடல் வடிந்து கொண்டிருந்தது
வீட்டிற்கு திரும்பும் வழியெங்கும்...