Tuesday, November 30, 2010

சாலை விதி

சாலை விதிகள் 
மட்டுமே 
பழக்கபட்ட எனக்கு 
உனது காதலின் விதிகள் 
புதிதுதான்.. 
விதி கொல்லுமோ?
அல்லது 
விதியை கொல்வேனோ? 
விளையாட துணிந்துவிட்டேன்..
உனது விதிகளோடு.. 

சிறு பிள்ளை

பெரிதாக ஒன்றுமில்லாத 
விஷயத்தை 
பெரிதாக்கி 
சிறு பிள்ளையென 
காட்டுகிறாய்..
சிறிதாக 
நடப்பவற்றை 
பெரிதாக்கி 
பேசுகையில் 
உணர்கிறேன் 
நானும் சிறு பிள்ளையென.

நேசம்

உனக்காக எழுதப்பட்ட
உன்னால் எழுப்பப்பட்ட 
கவிதைகளை 
புத்தகமாக்கும்   
முயற்சியில் 
இருவரும் தேர்ந்தெடுக்கிறோம்..
நான் வாசிக்க 
நீ ஆமோதிக்க 
ஆயிரம் கவிதையில் 
ஆறேழு கவிதை தவிர 
அத்தனையையும் 
தேர்ந்தெடுத்தோம்.. 
அத்துணை கவிதைகளும் 
ஏக்கத்துடன் பார்க்கின்றன.. 
நம்மை தேர்ந்தெடுத்த 
நேசம் அனாதையாய் அலைவதை.

உடை

உடைத்து விடக் காத்திருக்கிறாய் 
ஒரு நேசத்தை 
உருவாக்கிட காத்திருக்கிறேன் 
ஒரு உறவை..

புன்னகை

புன்னகையோடு நீ பேசுகிற நாட்கள் எனக்குள் 
விசிறிக் கொண்டிருக்கின்றன.. 
மீண்டும் மீண்டும்
அனல் கொண்ட காதலை

இயலாமை

முன்னிரவில் 
காயமாக்கி திரும்பும் 
உன் வார்த்தைகள் 
பின்னிரவில் 
காயமாற்றி 
உறங்குகின்றன.. 
இரண்டின் போதும் 
விழிப்பற்று கிடக்கிறது 
என் இயலாமை..

Friday, November 26, 2010

முத்தம்.

பயப்படாதே..
நமக்கிடையேயான 
சிறு அனுபவங்களும் 
கவிதையாவதைப் போல் 
ஆகிவிடாது 
நம் முதல் முத்தம்.. 

துளிமழை

என் நேசம் ஆக்கிரமிப்பின் 
வெளிப்பாடல்ல..
அக்கறையின் துளிமழை..

மனம்

என்னை அதிகம் புரிந்து 
வைத்திருப்பதாக காட்டுகிறாய்
உணர்வதில்லை..
அதை விட உன்னை அதிகம் 
புரிந்து வைத்திருக்குமென் மனம் 
காட்டுவதில்லை..
உணர்வதால்.. 

ஈர்ப்பு

இருதுருவங்களின் ஈர்ப்பு குறையலாம்
கடுகளவேனும்.. 
என் பெருங்காதலின் ஈர்ப்பு குறையாது
அணுவளவும்.. 

துண்டுசீட்டு

சாலையோரங்களில் 
விநியோகிக்கப்படும் 
துண்டுசீட்டுகளை 
வாங்கி பறக்கவிடும் 
பாதசாரியைப் போல நீ.. 
துண்டுசீட்டாய் என் காதல் ..

Saturday, November 20, 2010

அரட்டைப்பெட்டி

நீ பதிலிறுக்க மறுக்கும் 
மின்னஞ்சலின் அரட்டைப்பெட்டி 
பச்சை ஒளிர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது.. 
நீ பதிலுருக்காவிட்டாலும் பார்த்தபடியிருப்பதை 

சொற்கள்.

நிர்வாணமாய் நகரும் 
என் நேரத்தில் 
ஆடை உடுத்தி 
அழகு பார்க்கிறது 
உன் சொற்கள்..

அடையாளம்

காதலுக்கான அடையாளங்களென
சுட்டிக்காட்டிய அனைத்தையும் 
தவிர்க்க முயல்கிறாய்..
அதுவே ஒரு அடையாளமாய் 
காட்டிக்கொடுக்கிறது
உன் நேசத்தை .

மழை-2

அடித்துப் பெய்யும் மழை
உன் ஆழமான அன்பை சொல்கிறது.. 
தூறிச் செல்லும் மழை 
உன் அன்பை அழகாகச் சொல்கிறது.. 

மழை

உனக்கு 
பிடித்திருக்கும் 
சன்னலோர மழையை 
ரசிக்கிறாய்..
நனைய மட்டும் 
மறுக்கிறாய்.. 
மழையாய் நான்.. 

Sunday, November 14, 2010

விலை

எந்த விலை கொடுத்தும் 
பெற முடியாது 
நம்பிக்கையையும் 
காதலையும் 
ஏனெனில் 
இரண்டும் 
விலைமதிப்பற்றது.

திரும்பிப்பார்

உனக்கான யாவும்
தீர்ந்து   முடிந்தபின் 
திரும்பிப்பார் 
நின்றிருப்பேன்.. 
காதலின் கையைப் பிடித்தபடி..

வார்த்தை

இவ்வளவு நாட்கள் 
வெளிப்படுத்தப்பட்ட 
நேசத்திற்கு 
விலை கொடுக்க 
தயராகிறாய்..
உன் வார்த்தைகளால்..
பெற்றுக் கொள்வேன்
என் மௌனத்தால்.

காயங்கள்

என்னிடமிருந்து 
ஏதேதோ 
பெற்றிருக்கிறாய்.. 
உன்னிலிருந்து 
அள்ளிக்கொண்டது.. ஒன்றுதான்.. 
காலத்தாலும் மீட்க முடியாத 
காயங்கள்..

சொர்க்கம்

நமது கடந்த காலங்களை 
உனக்கு நினைவூட்டுவது 
ஒருவேளை எரிச்சல் தரலாம்...
எனக்கு அவை சொர்க்கம்.

வலி

பெரியதாக தோன்றுகிறது 
உன் மீதான காதல் 
சிறியதாக தோன்றுகிறது 
ஒன்றுமற்ற உன் வாதம் 
நடுவில் ஓடிக் கொண்டிருக்கிறது 
வலிமையாக காலம்
சிறு நம்பிக்கையோடு.

பிடிமானம்

ஒரு பிடிமானமும் 
இன்றி அற்று விழும்போது 
தாங்கிப்பிடிக்கிறாய்.. 
நிரந்தமாய் தங்க விரும்புகையில் 
பிடி தளர்த்துகிறாய்..

துவண்டு

எனது சின்னஞ்சிறிய 
நம்பிக்கையின் மீது 
கல்லெறிகிறாய்... 
துவண்டு விழுமது 
துளிர்க்கிறது 
மீண்டும் 
அளப்பரிய ஆற்றலுடன்.. 
கற்களை கோட்டைகளாக்கி..

மரணம்

மரணம் பற்றிய கவிதைகளை 
நீ ஒருபோதும் 
விரும்புவதில்லை..
ஒதுக்கிவிடுகிறாய் 
வாசிக்கமாலே .. 
அதன் வாசனை அடித்தாலே.. 
உனக்கு தெரிவதற்கில்லை.. 
நீ மரணத்தின் தூதுவன் என ..

திருப்பி

திருப்பிக் கொடுத்து விட்டாய்... 
அனைத்தையும்... 
பதிலுக்கு தருகிறேன்.. 
என் உயிரை.. 
 

Saturday, November 13, 2010

வழிமுறை

அனைத்து விதமான 
வழிமுறைகளையும் 
கையாளுகிறோம்..
விட்டு விட நீயும்..
விடாமலிருக்க நானும்..

அன்பு

என் அன்பு 
பூரணத்துவமானது 
எனில் பலிக்கட்டும். 
இல்லை 
உன் பிடிவாதத்தில் 
பலியாகட்டும்.

காதல்

ஏமாற்றியது 
நீயோ நானோ 
அல்ல. 
ஏமாந்து போனதென்னவோ 
காதல் தான்.

குரல்

எவ்வழி சென்றாலும் 
எனக்குள்ளே 
ஒரு வலியாய்
உன் குரல்

ஆறுதல்

ஆறுதல் தேவை இல்லை.. 
ஆறாமல் இருக்கும் வரை தான் 
நினைத்ததை முடிக்கும் வேகம் இருக்கும்.

நீ

நீ நினைத்திருக்கிற 
யாவும் நடக்கும் என 
நள்ளிரவில் 
பிறந்ததின வாழ்த்துக்கள் சொல்லி 
மகிழ்வூட்டினாய்..
நான் நினைத்திருக்கும் 
நீ என்னுடன் கைகோர்த்து  
நடந்தால் போதும்..

சுவாசம்

காரணங்கள் சொல்வதற்கில்லை 
சில விஷயங்கள் தோன்றுவதற்கும் 
மறைவதற்கும்
சுவாசம் நடைபெறுவதை போல.. 

மழை

இடைவிடாமல் 
பொழியும் 
உன் நினைவு மழையில் 
தாகம் மட்டும் 
தீர்ந்தபாடில்லை 

விதைகள்

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் உறங்குவதில்லை 
நேசத்தை விதைத்தாய் 
நொடிதோறும் விருட்சமாகிறேன்.. 

கால்கள்

காலாற நடந்து செல்கையில் 
கைகளைப் பற்றி கொண்டோம்.. 
கால்கள் நடப்பதை விட்டு 
பறந்து செல்கிறது..

தற்கொலை

காலத்தை வீணாக்குவது 
தற்கொலைக்கு சமம்.. 
காதலை வீணாக்குவது 
கொலைக்கு நிகர்..

குறுஞ்செய்தி

பண்டிகைக் கால நாட்களை எண்ணி 
விரைவாகவும், 
நிறைவாகவும் 
வேலை செய்யும் தொழிலாளியின் 
மனநிலைதான் எனக்கும்..
நீ சந்திக்க வருகிறாய் என்று குறுஞ்செய்தி 
அனுப்பியதில் இருந்து,..