Wednesday, November 25, 2009

தனிமை

தனித்திருக்கும் 
நேரங்களிலெல்லாம்
உடனிருக்கிறாய்
உணர்விலும்...
உயிரிலும...

உச்சரிப்பு

எனது பெயரை
இதற்கு முன்னதாக
யாரும் உச்சரித்ததில்லை
உன்னைப்போல்.. 

திறவுகோல்

உன் வார்த்தைகள்
ஒரு திறவுகோல்..
என்னுள் பூட்டப்பட்டிருக்கும்
அத்தனை
அறைக்கதவுகளையும்
திறந்து விடுகிறது..

உன் குரலில்.

என்
இரவுகள்
அடைகாக்கபடுகின்றன
உன் குரலில்..

இதம்

நீ கண்ணை மூடி
யோசிக்கும் போது
உனக்கு இதம் தருபவை
எதுவென்று கேட்டேன்..
இரவு வானம் 
இரு கைகள் கோர்க்கும் ஸ்பரிசம்
ஆட்டுக்குட்டிகள்
புத்தகங்கள்
தூவானம்
எங்கிருந்தோ
வருடிப்போகும் இசை..
இப்படி சொல்லி போனாய்..
எனக்கு உன் வார்த்தைகளைத் தவிர
வேறெதுவும் இதம் தருவதில்லை..                      
                     

அனுமதி

அனைத்திற்கும்
அனுமதி கேட்கும்
நீ என்னில்
நுழைய மட்டும்
ஏன் அனுமதி
கேட்க வில்லை?

அறியாமல்

சில காயங்களை
எப்படி வந்ததென்று
அறியாமல்தான்
சுமந்து வருகிறேன்..
நேசத்தைப் போல..

இரவல்

நான் உனக்கு
சூட்டிய
செல்லபெயரை
இரவல் தர
இடம்கொடுக்க மாட்டேன்..
என் இறப்பிற்குப் பின்னும்..

இருவாழ்வி

உன்னிலிருந்து
என்னை பிரித்து
தனியே கடலில்
விட்டுவிடாதே..
இருவாழ்வியல்ல..
பிழைத்துக் கொள்ள..

உன் நேசம்

என் ஆயுட்காலம்
எவ்வளவென்று
தெரியாது...
ஆனால்
உன் நேசம்
நீடிக்கும் வரை
என் ஆயுளும் நீடிக்கும்..

ஆயுள்

இரண்டு பேரும்
ஒரே சமயத்தில்
படிக்கும் கவிதைக்கு
ஆயுள் கூடுகிறது.. 

அடுத்தகட்ட நடவடிக்கை

நான் காணாது போனால்
எவ்வளவு நேரத்திற்கு
பின் என்னை தேடுவாய்?
உன் குறுஞ்செய்திக்கு
என்னிடமிருந்து பதில்
வராவிடில்
எவ்வளவு நேரத்தில்
அழைப்பாய் ?
நீ அழைத்து
பதில் வராவிடில்
உன் அடுத்தகட்ட
நடவடிக்கை என்ன?
இந்த கேள்விக்கெல்லாம்
பதில் கிடைத்துவிட்டது இன்று..
இனி நீ உன் வேலையை பார்க்கலாம்..

விரல்கள்

அழ
விழிகள்
தயாராகிறது..
துடைக்க
விரல்கள்
எங்கிருக்கிறது..?

வலி

நீ
கொடுக்கும்
அனைத்தையும்
நேசிக்கிறேன்
வலியையும்..

வரையறை

உன் வாதங்களையும்
வரையறைகளையும்
நீயே வைத்துக் கொள்
அவை ஒருபோதும் 
புதிய பரிணாமத்திற்கு
இட்டுச் செல்லப் போவதில்லை
அனுபவங்களைப் போல்...

இந்த நொடி

இந்த நொடி
உன் மடியில்
மரணம் என்னை
சந்திக்கட்டும் 
புன்னகை மாறாமல்
புறப்படுவேன்..

கடவுச் சொல்


என் கடவுச்
சொல்லாய் இருக்கும்
உன்னை கடந்து
எங்கே செல்வேன்?

பேச என்ன இருக்கிறது?

உன்னைப் பார்க்க
வேண்டுமானால்
புகைப்படம் இருக்கிறது..
நீ இதுவரை பேசிய
அனைத்தும் எனக்குள்
உறைந்திருக்கிறது...
நீ அனுப்பிய
உன் எண்ணங்கள்
என் குறுஞ்செய்தி
பெட்டியில் சேகரமாயிருக்கிறது
பின் உன்னிடம்
பேச என்ன இருக்கிறது?
என்றுதானே என்ன தோன்றுகிறது?
அதற்குமொரு காரணம் இருக்கிறது..
உன் குரல் கேட்டுதான்
என் இமை திறப்பு மாறுபடும்..

மௌனம்

                       
பேரிரைச்சல்
கடக்கும்போதெல்லாம்
உன் பலத்த
மௌனம்
நினைவேறுகிறது..

வரம்


தேவதை என்னெதிரே வந்து நின்றால்
முத்தத்தில்  தூங்கி
முத்தத்தில் விழிக்கும்
வரமொன்று மட்டும் கேட்பேன்..

Saturday, November 21, 2009

இரவு நிலவு


இரவு நிலவு
தெரியாத போது
ஓய்வெடுக்கிறதென சொன்னாய்..
இயற்கை ஓய்வெடுப்பதில்லை
காதலும் கூட..

உத்தேசம்


சேமித்தபடியே
இருக்கிறாய்
வாரி இறைக்கும்
நேசத்தை..
எப்போது
செலவழிக்கப் போவதாய்
உத்தேசம்...

துரு


இதயத்தில்
துருவேறிக் கிடக்கிறேன்..
இயங்க செய்கிறாய்..
சானை பிடித்து
துரு களைந்து
ஒளிர்கிறது
உள்ளே மறைந்திருந்த
நேசம்..

மோனலிசா


ஆண்டாண்டு காலமாய்
அந்த புன்னகை
ஆயிரமாயிரம்
அர்த்தங்களை
கற்பித்து வருகிறது..
டாவின்சிக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை..
மோனலிசாவே
உயிர்பெற்று வந்தாலொழிய
புரிய முடியாது..
அதனூடாக சோக இழையில்
ஒளிந்திருக்கும் உண்மையை..

தராசு..

பரம்பரை அறிந்த டார்வின்..
புன்னகையை மீட்டெடுக்கிற டாவின்சி..
மொழிகளின் மூலமறியும் கால்டுவெல்..
பயணத்தை ஊக்கப்படுத்துகிற சாங்கிருத்தியன்
புரட்சிகள் பேசும் பாரதிதாசன்...
இவர்கள் ஒரு தராசிலும் நீயொரு தராசிலும்
பூமியின் மையப்பகுதி அசைவற்று நிற்கிறது..

ஒத்தடம்


உதடு பிரியா
புன்னகையில்
மௌனித்திருக்கும்
வலிக்கு
ஒத்தடம் கொடுக்கிறது.
நீ அவ்வப்போது
உதிர்க்கும் சொற்கள்..

வலி மௌனம்


வலி மௌனமாகிறது..
மௌனம் வெளியாகிறது..
சந்திப்பின் முன்னும் பின்னும்...

Friday, November 20, 2009

நிராயுதபாணி


பின்னிரவில்
பிரயோகித்த
அனைத்து ஆயுதங்களும்
வலுவிழந்து திரும்ப
நிராயுதபாணியானாய்...
உன் ஆற்றாமை கண்டு
வலுவிழந்த ஆயுதங்கள்
மொத்தமாய் எனைத்தாக்க
மீண்டெழுந்தேன்..
நானுமோர்
ஆயுதமாய்
உனக்கு வலு சேர்க்க..

உன்னை..

உன் தூக்கத்தை
பகிர்ந்தளிக்கிறாய்
உன்னை..
உன் நேரத்தை
செலவழிக்கிறாய்
நேசத்தை..

Thursday, November 19, 2009

காதலைச் சொல்

'காதலைச்
சொல்வதற்கு சில வழிகள்'
என்ற புத்தகத்தை
புரட்டாமல்
பார்த்துவிட்டு
நகர்ந்தாய்
நானும் அவ்வாறே
செய்தேன்..
அதுவே நம் காதலைச்
சொன்ன வழிகளில் ஒன்றாயிற்று..

மழை


உன்னை
நினைக்கும்போதெல்லாம்
மழை வந்து
நனைத்துப் போகிறது..
மழை வரும்போதெல்லாம்
குடை மறந்து
வருகிறது காதல்...

Wednesday, November 18, 2009

உனக்காக..


நான் சொல்லி
எனக்கு பதிலாய்
உன்னை பார்க்க
வரும் மழையிடம்
என்ன கொடுத்தனுப்ப
போகிறாய்?

தோழிக்கு ..உன்னை
ஏன் பிடிக்கிறதென
கேட்கும் தோழிக்கு
என்ன பதிலை
சொல்வதென
தெரியவில்லை..
உனது நட்புகளிடம்
இதே கேள்விக்கு
நீயென்ன சொல்கிறாய்
என்பதையாவதுசொல்லேன்..
--

தோள் சாய்


தோள் சாய்ந்து
உறங்குகிறேன்..
எட்டிப் பார்த்துவிட்டு
தானும் உறங்கியது
காதல்..

நீயனுப்பிய மழை

என் வருகையை
தடுக்க
நீயனுப்பிய மழை
கைப்பிடித்து
அழைத்து வந்தது
உன் இருப்பிடத்திற்கே..

மொழிபெயர்

ஆங்கிலத்திலிருந்து
தமிழுக்கு
மொழிபெயர்த்து
சொல்கிறாய்
ஒரு கவிதையை..
நான்
மொழிபெயர்த்து
கொள்கிறேன்
அந்த கவிதையிலிருந்து
ஒரு காதலை..

Tuesday, November 17, 2009

அனுமதி..


அனுமதித்தால்
காதலுடன்
பயணிப்பேன்..
இல்லையேல்
காதலுடன்
மரணிப்பேன்.

இயக்கத்தின் விதி..


என் உறக்கத்தையும்
விழிப்பையும்
இயக்குமுன்னை
இயங்கச் செய்யுமென்
காதல்..

கண்ணீர்த்துளி

முன்னிரவில்
மையம் கொண்ட
காயங்கள்
பின்னிரவில்
கண்ணீர்த்துளிகளாய்
உருவெடுத்து
வைகறையில்
கரையொதுங்கியது
உனதன்பின் விசாரிப்பில்..

பார்வை

குளிரூட்டப்பட்ட அறையில்
நடுங்குகிறேன்
பார்வையால்
வெப்பமூட்டுகிறாய்..
உள்ளுக்குள்
வேர்த்து கிடக்கிறாய்..
பார்வையால்
குளிரூட்டுகிறேன்..

தண்டனை


என் தவறுக்கு
என்ன தண்டனை
வேண்டுமானாலும் கொடு..
மௌனத்தை தவிர..
நீ
மௌனித்திருக்கும்
நொடிகளில்
மரணித்து விடுகிறேன்..

பரிசு

நீ
எதை
பரிசளித்தாலும்
மறுதலிக்க மாட்டேன்..
நீயே
இயற்கை
எனக்களித்த
மாபெரும் பரிசு..

நலம்


அடுக்கி வைக்கப்பட்ட
புத்தகங்கள்
நலம் விசாரித்தன..
உனக்கும்
எனக்கும்
இடையில்
உலவிய காதலிடம்..

தானியங்கி படி


தானியங்கி படிகளில்
தடுமாறுகிறேன்
கைகோர்த்து
கடக்க செய்தாய்
கடந்த பின்
யோசிக்கிறேன்
இன்னும் நீளாதா
இந்த பாதையென்று..

Monday, November 16, 2009

மென்னிதயம்..


தரையிறங்க அனுமதி
கிடைக்கும் வரை
அந்தரத்தில்
வட்டமிடும்
இயந்திர பறவையாய்
உன் அனுமதிக்காக
வெளியேறுவதும்
உள்ளடங்குவதுமாய்
தத்தளிக்குமென் இதயம்..

வாலறுந்த பள்ளி..


யாருமற்ற
தனித்த அறையில்
நெடுநேரம்
அளவளாவி விட்டு
திரும்புகையில்
நமக்குமுன்னே
சத்தமிட்டு
வெளியேறியது..
வாலறுந்த பல்லி..

அமைதி..


நீயும் நானும்
அலைபேசியில்
பேசுகையில்
உனதெல்லையின்
அமைதியை கிழித்து
கிளம்பிய
இயந்திர பேரிரைச்சலொன்று
சற்று நேரத்திற்கெல்லாம்
சிதறடித்துச் சென்றது
எனதாளுமையின்
அமைதியையும்..

மழை..


மார்புக்கு நடுவே
மழைத்துளி
எழுதும்
கவிதை
என்னவோ?
யார் படித்து
சொல்வாரோ?

Saturday, November 14, 2009

சமாதானம்..

பிணக்கு நேரும்தோறும்
வெளிநடப்பு செய்கிறது
பரிமாற்றம்..
மீட்டெடுக்க
போர்க்கால அடிப்படையில்
பயணிக்கிறேன்..
சமாதானத்தை முன்வைத்து..

உன் அழைப்பு...

தொடர்பு எல்லைக்கு வெளியே
இருக்கும் நேரங்களில்
இதயத்தின் அறைகளில்
நேர்மறையாகவும்
எதிர்மறையாகவும்
உலவும் விவாதங்களை
முடிவுக்கு
கொண்டுவருகிறதுன் அழைப்பு..