Thursday, July 22, 2010

ஊடல்



உன்னிடம் 
ஊடல் கொள்ளும் போது
தோழியர்களிடம் 
கொட்டித் தீர்த்து விடுகிறேன்
ஒரு போதும் 
சொல்லியதில்லை
ஊடல் தீர்ந்து கூடியதை..

கூறியது கூறல்

அடிக்கடி உன்னைப் பிடிக்குமென
சொல்வதில் 
சலிப்பேற்படுவதில்லை
காதலில் குற்றமில்லை
கூறியது கூறல்

முன் அனுமதி

எதற்கெடுத்தாலும் 
நேரமில்லை என்கிறாய்
ஒருவேளை
மரணம் என்னை 
அழைக்கும் போது
உன்னிடம் முன் அனுமதி
பெற வேண்டியிருக்கும் போலும்..

மௌனம்

கிளி
முதலை 
ஆக்டோபஸ்
இன்னும் பிற 
யாவற்றிடமும் கேட்டுவிட்டேன்
என் காதல் நிறைவேறுமாவென
எல்லாம் மௌனம் சாதிக்கின்றன..
உன்னைப் போல்..

ஆக்டோபஸ்

மூடநம்பிக்கைகளை
வெறுக்குமென் மனம்
ஆக்டோபஸிடம் 
அலைபாய்கிறது
ஆரூடம் கேட்க அல்ல..
அதனிடம் இருக்கும்
மூன்று இதயங்களில்
ஒன்றை உனக்கு தரவேண்டி..

Tuesday, July 20, 2010

மறுதலி

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்
இந்த உலகின் உச்சபட்ச இன்பம்

மறுதலிப்பதும்
புறக்கணிப்பதும்
இந்த உலகின் மிகக் கொடுமையான தண்டனை
நீ தண்டனையை நிறைவேற்றிய பின்பும்
இன்பத்ததைத் தந்து வருகிறேன்
இது உனக்கான தண்டனை...

காதலால் நிரப்பி!

உனக்குத் துணிவிருக்கலாம்
மறைத்து
வைத்திருப்பதில் பயனென்ன?

உனக்கு காதலிருக்கலாம்
மௌனம்
சாதிப்பதில் நிகழ்வதென்ன?

உனக்கு இசைவிருக்கலாம்
பிடிவாதத்தால்
ஆகக் கூடியதொன்றுமில்லை..

உனக்கு புரிந்திருக்கலாம்
முரண்டு பிடிப்பதில்
முன்னேற்றம் இருக்கப் போவதில்லை..

உனக்குப் போராடப் பிடித்திருந்தால்
வந்துவிடு
இந்த வாழ்க்கை அழகானது என்பதை
அறியத் தருகிறேன்..
உன்னைக் காதலால் நிரப்பி!

ஒற்றைப் புன்னகை

கை நிறைய கனவுகளையும்
மனம் நிறைய காதலையும்
சுமந்து திரிகிறேன்
எத்தனையோ பேர்
சாதுரியத்தால் 
அபகரிக்க முயன்றும்
தோற்றுத் திரும்பினர்..
ஒருவன்தான்
ஒற்றைப் புன்னகையில்
அத்தனையும் கொய்து போனான்..

தேவதை

என் குறுஞ்சிறகுகளில்
உன் பார்வை பட்டது..
வண்ணமானேன்
உன் சுவாசம் தீண்டியது..
வாசமானேன்..
உன் நிழல் படர்ந்தது
பெண்ணானேன்
உன் நிஜம் தரிசித்தேன்
தேவதையானேன்..

நீயே அறியாத வண்ணம்

நிறைவேறுமெனும்
நம்பிக்கையில்
என் இரவுகள்
இசைக்கின்றன
உனக்கான பாடலை..

என் சொற்களில்
ஒளித்து வைத்திருக்கிறேன்..
நீயே அறியாத வண்ணம்
நமக்கான காதலை..

சாபமிடு

எந்த வரமும்
வேண்டாம்
யாராவது சாபமிடுங்கள்
‘நாங்கள் காதலர்களாகி
திரிவோமென’ அல்ல..
நொடிதோறும்
சண்டையிட்டுக் கொள்வோமென
அதுவேனும் பலிக்கட்டும்..

உன் அன்பினில்

மழையில் நனைந்ததுண்டு
தேகம் சிலிர்க்க
நதியில் நனைந்ததுண்டு
வேகம் துளிர்க்க
அருவியில் நனைந்ததுண்டு
ஐம்புலன் விறைக்க
கடலில் நனைந்ததுண்டு
என் முழுமை தகிக்க
என் உயிர் சிலிர்த்து, துடித்து
துளிர்த்து, மிதந்து, விறைத்து,
தகித்து, சுகித்து, கரைந்தது
உன் அன்பினில்
நனைந்த போது.

Saturday, July 17, 2010

சாபம்


எல்லோருக்கும் வரம் 
கொடுக்கும் தேவதை 
தவமிருக்கிறாள் 
வரமோ? சாபமோ? கொடு
நீ கொடுக்கும் சாபம் கூட வரமே..

இருவருக்குமான அவன்..

என் உயிர்த் தோழி அவள்
எனக்குப் பிடித்ததெல்லாம்
அவளுக்கும் பிடித்திருக்கும்
அவளுக்கு பிடித்த எதுவும்
எனக்குப் பிடிக்காமலிருந்ததில்லை

என்னைப் போலவே
தனது நேரத்தின் பெரும்பகுதியை
புத்தகங்களுக்குக் கொடுத்திருப்பாள்
தன் இரவுகளில் காதுகளை
இசைக்குத் தாரை வார்த்திருப்பாள்
புதிய சந்திப்புகளில் தனது
நட்புக்கரங்களை நீட்டுவாள்
எதைப்பற்றியும் எல்லோரிடமும்
வெளிப்படையாகப் பேசுவாள்
எப்போதாவது தூரிகை தொட்டு
ஓவியம் தீட்டுவாள்
தினமும் ஏதாவதொன்றை
வெள்ளைத் தாளிலோ
செல்லிடப்பேசியிலோ பதித்து வைப்பாள்

அவளைப்போலவே
 
அழகுணர்ச்சியில் ஆர்வம் கூட்டியிருந்தேன்
அறியாமையை விரட்டிக் கொண்டிருந்தேன்
கனவுகளுக்கு புதிய வண்ணம் தீட்டியிருந்தேன்
நட்புகளிடையே நெருக்கம் கொண்டிருந்தேன்
பிடிக்காத விஷயத்தை விட்டு விலகியிருந்தேன்
பிடித்தவற்றை விரும்பி விரும்பி செய்தேன்

அவளைப் போலவே நான்
என்னைப் போலவே அவள்

எனது கவிதைகளையொத்திருந்தது அவள் கவிதைகள்
அவளது இசையினையொத்திருந்தது எனது இசை

திடீரென் தொடர்பு எல்லையில் இருந்து மறைந்தாள்
ஒருநாள் வந்து
ஒருவனிடம் காதலில் விழுந்ததாகச் சொன்னால்
அதற்குப் பிறகு
அனைத்திலிருந்தும் விலகியிருந்தாள்
எப்போதாவது சந்திப்பாள்
அவனைப்பற்றியே பேசுவாள்
அவளை மீட்க நினைக்கவேயில்லை
அவளும் மீள விரும்பவில்லை

துக்கம் தாளாது 

ஒருநாள் நானும் விழுந்தேன்
அவள் விழுந்ததாகச் சொன்ன
அதே இடத்தில்..
இப்போது
இருவரையும் மீட்க
போராடிக் கொண்டிருந்தான்
இருவருக்குமான அவன்..

காதலா? சாதலா?

விட்டுவிடவா? பற்றிக்கொள்ளவா?
எனும் போது
தேர்ந்தெடுத்தேன் பற்றுதலை...
துண்டிக்கவா? தொடரவா?
எனும் போது 
தேர்ந்தெடுக்கிறேன் தொடர்தலை.. 
ஏற்றுக் கொள்ளவா? ஒதுக்கிவிடவா?
எனும் போது
தேர்ந்தெடுத்தேன் ஏற்றுக் கொள்ளுதலை..
காதலா? சாதலா?  எனும் போது
தேர்ந்தெடுக்கும் உரிமை 
உன்னிடம் தரப்படுகிறது ...
தேர்ந்தெடு எதுவாயினும்
தயாராகிறேன் எதற்கும்..
ஒருவேளை மரணத்தை 
பரிசளித்தால் உயிர்த்தெழவும்..  

உடன்வர யாருமில்லை

என் இரவை
பகிர்ந்தளிக்க யாருமில்லை
என் தூக்கத்தை நீயே தூங்குகிறாய்..
என் உணவு வேளையில்
உடன்வர யாருமில்லை
என் பசிக்கும் சாப்பிட்டு விடுகிறாய்..
என் சிந்தனையைக் 
கேட்பதற்கு யாருமில்லை
எனக்கும் சேர்த்து சிந்திக்கிராய்
என் வாழ்க்கையை 
நீட்டிக்க விருப்பமில்லை
எனக்கும் சேர்த்து வாழ்ந்திருப்பாய்

பூமியின் எடை

உன்னோடு 
நான் சேரும் நாளில் 
பூமியின் எடை குறையும்
என் பாரத்தின் 
சுமை நீங்கி.. 

உன் ஸ்பரிசத்தில்

எப்போது 
கவிதை எழுதுவீர்களென
கேட்பவர்களுக்கு 
ஓரப்புன்னகையையும்
சமாளிக்கும் வார்த்தைகளையும்
பதிலிறுக்கிறேன்.. 
உன் நினைவென்னை
கொன்று போடும் சமயங்களில்
உன் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையுற்று மயங்கி சரிகையில் 
உன் ஓரிரு சொற்களென்
உயிர் குடிக்கையில் 
அடம்பிடித்து பிடிவாதமாய்
சண்டையிடுகையில் 
இப்படியான பதில்களையும் 
இதற்கு மேலானவற்றையும்
நீயே அறிவாய்..
துடிப்பறியும் இதயமாய்..

பால்கட்டிக் கொண்ட மார்பின் வலி

சொற்களாலோ
செயல்களாலோ
உன் மீதான நேசத்தின் 
முழுப்பரிமாணத்தையும் 
காட்டவியலாத போது
பால்கட்டிக் கொண்ட 
மார்பின் வலியுணர்கிறேன்..

கையாலாகாத சொற்கள்

எனதுளறலை 
உனக்கு உண்மையாகவும்
எனதுண்மையை 
உனக்கு உளறலாகவும்
அறியத் தரும் 
கையாலாகாத சொற்களை 
வைத்துக் கொண்டு 
என்ன செய்ய?

மீசை

உன் காதுமடல் கூட 
அறியாது
உன் மீசையோடு 
நான் பேசும் 
இரகசியங்களை...

வெளிநடப்பு

துள்ளிக் குதித்தோடி 
வரும் சொற்களை 
நீ கேட்க தயாரில்லாத நிலையில் 
ஆர்ப்பாட்டமோ,
கூச்சலோயின்றி 
வெளிநடப்பு செய்கின்றன..
சோர்ந்த சொற்கள்..