Friday, February 17, 2012

உண்மை


ஏதோ ஒன்றை
பெறும் போது
ஏதோ ஒன்றை
இழந்துவிடுகிறோம்
என்பதும் உண்மை

காதும் மனதும்


காதும் மனதும்
ஒன்றுதான் போலும்..
தம்மில் சேரும் அழுக்குகளைத்
தானே அகற்றும்
வித்தை தெரிந்தவை.. 

மழை


ஒரு மணி நேர மழைக்கே
தாங்காத சென்னை போலவே
ஒருமுறை திரும்பிப் பார்த்த
உன் பார்வைக்கே
தாங்காமல் திண்டாடுகிறது
என் மெல்லிய சிறுமூளை

கனவு


தொட்டுவிடும் தூரத்தில்
நம் கனவுகள்..
தொடர்கிறேன்
உன் வார்த்தைகளில் ஊறி..
உன் பார்வையில் ஏறி.. 

யாதுமாகி


வெட்டுப்பட்ட இடம் துளிர்க்கும்
காயம்பட்ட மனம் ஆறும்
தேடலிருந்தால் கிடைக்கும்
உண்மையிருந்தால் நிலைக்கும்
அலைபாய்ந்த நேசம் இளைப்பாறும்
யாவும் கண்டேன் உன் வருகையில்
யாதுமாகி நிற்பேன் உன் வாழ்க்கையில் 

வெறுமைக் கோப்பை நிரம்பிருந்த என் வெறுமைக் கோப்பைகளை
ஒவ்வொன்றாய் களவாடிப் போனாய்..
துயர் வழிந்திருந்த என் காலச் சருகுகளை
காற்றாகவே பறக்க செய்தாய்..
தேம்பித் திரிந்த என் மௌனங்களை
சொட்டு சொட்டாய் விடுவித்தாய்..
சமரசத்திற்குடன்படாத என் நேசத்தை
உடன்படிக்கை ஏதுமின்றி பாதுகாத்தாய்..
விதை பழுதா? நிலம் பழுதா? கேட்டு
முடிக்கும் முன் அறுவடைக்கு வந்து நின்றாய்..
பிழை என்னிலா? அவனிலா?
எந்த கேள்வியின் எழுப்புதலுமின்றி
என்னுடனே வாழ சம்மதித்தாய்..
என்னில் எதுவுமின்றி உன்னிடம் வருகின்றேன்..
உன்னை நிரப்பி என்னை ஆளச் செய் இப்பேருலகை.. 

ஒரே ஒரு வேற்றுமைபுதிய காதலுக்கும்
பழைய காதலுக்கும்
ஒரே ஒரு வேற்றுமையும்
பலப்பல ஒற்றுமையும்
இருக்கிறது..

நெடுநேரம் பேசுவது
இரவுகளில் கரைவது
பார்க்கத் துடிப்பது
படித்ததை பகிர்வது
பிடித்ததை செய்வது
இப்படி ஒற்றுமை பலப்பல..

வேற்றுமை என்னவெனில்
ஏதோவொரு காரணத்திற்காக
உங்களாலோ
அவளா(னா)லோ
நிராகரிக்கப்பட்ட
மறுதலிக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
காதலுக்கு
வாழ்தலின் அர்த்தம் உணர்த்தி
நம்பிக்கையின் நீரூற்றும் பாங்கே... 

தலையும் பூவுமாய்


என்னை
என்னிடமிருந்து கடத்திப் போன
முக்கிய குற்றவாளிகளில்
முதல் இடம்பிடிக்கக்கூடியது
காதல்தான்..

என்னை
என்னிடமே திருப்பித் தந்த
முக்கிய நிரபராதிகளில்
கடைசியில் இடம்பெறக்கூடியதும்
காதல்தான்

எனது நாணயத்தின்
தலையும் பூவுமாய் இருந்த காதல்
உருமாறத் துவங்கியிருக்கிறது
பச்சைபடர்ந்த தாள்களாய்.. 

அத்துணை உணர்வுகளின் கலவை


எனக்குள்
தேடித் திரிந்த
வேண்டி தவித்த
சொல்லத் துடித்த
அத்துணை உணர்வுகளின்
கலவையாக
உணரக் கிடைத்தாய்...

இனி எப்போதும்
உன்னை தவறவிடுவதற்கில்லை..
கடந்து போன
எனது பழைய பக்கங்களிலும்
உன்னை இட்டு நிரப்பியே
ஞாபகங்களை செம்மைப் படுத்துகிறேன்..

மென்மனச் சிட்டுக்குருவி


கொத்தி கொத்தி உண்ணும்
சிட்டுக்குருவியின்
பெரும்பசியோடு
உன் நினைவுகளைக் கொறிக்கிறேன்

கொறிக்க கொறிக்க கூடுகிறது
உன் நினைவின் பசி..

--------------


கொத்தி கொத்தி உண்ணும்
சிட்டுக்குருவியின்
பெரும்பசியொத்தது
உன் நினைவு தானியங்களைக்
கொத்தி தின்னும்
என் மென்மனச் சிட்டுக்குருவியும்

சந்திப்பிற்கு பின்..


நான் விரும்பிய காதலின்
அத்துணை சாயல்களும் கொண்டு
நான் பார்த்திராத
புதிய சாயலொன்றுடன்
வந்தாய்
என் சாபங்கள் மறைந்து
தேவதையானேன்
உன் சந்திப்பிற்கு பின்..

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்


எல்லாம் தீர்ந்த பின்னும்
ஏதோ மிச்சம் இருப்பதகாவே
கற்றுத் தரும் காதலை
உணர்பவர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. 

இனி வரும் காலம்


என் கனவுகளின் நாயகனுக்கு....
உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பூத்துச் சிரிக்கின்றன
பெயர் தெரியா பூக்கள்..
பறந்து திரிகின்றன
பெயர் அறியா பறவைகள்..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
சாரல் அடிக்கின்றது ...
பார்த்தறியா மேகத்திலிருந்து
கூதல் பிடிக்கின்றது 
உணர்ந்தறியா காற்றிலிருந்து..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பார்க்கும் முகங்கள்
உன் முகமாகின்றன..
கேட்கும் பெயர்கள்
உன் பெயராகின்றன..

ஏதுமற்ற
எதிர்பார்ப்புகளற்ற
பயணத்தினூடே
வழித்துணையாய் வந்து
வாழ்க்கைத் துணையானாய்

இதுவரை வாழ்வு கசந்தபோதும்
இனி வரும் காலம் வசந்தமாகும்


மழைக்கால சாட்சி


இன்றிரவு பெய்த மழையை
ரசிக்க முடியவில்லை..
தன் வெண்துளி கரங்களால்
விடாமல் துரத்திய அதன் ஆக்கிரமிப்பு
ஐம்புலன்களையும்
சுருக்கிக் கொள்ள இட்டக் கட்டளை..

சேர்க்கையின் குறியீடெனவிருந்த நினைவுகளை
பிரிவின் குறியீடாக மாற்றிவிட்டது..

ஆழப்புதைந்த மதிப்பீடுகளை
அர்த்தமிழக்க செய்தததில்
மழைக்கு பங்குண்டு..
துயரும் புதிருமான முந்தைய நிகழ்வுகளுக்கு
முன்னொரு மழைக்காலம் சாட்சி எனும்
ஒரே காரணத்திற்காக.. 

சிதிலமடைந்த ஞாபகங்கள்


இன்னும் விசாரிக்கப்படாமல்
நிலுவையில் நிற்கக்கூடிய
கேள்விகள் சிலவற்றிற்கு
பதிலேதும் இல்லை..

ஆவணப்படுத்தப்பட்ட
உனது ஆணவங்களை
தூக்கி எறியவோ
நெருப்பில் எரிக்கவோ கூடவில்லை

உறுதிமொழியற்ற
பேச்சுவார்த்தைகளுக்கு
உடன்போக்கு சென்ற
உயிருக்கு தற்போது நினைவு இல்லை..

ஓய்ந்து போன முயற்சிகளுக்கு
உரமூட்ட உனது சாயலில்
ஆனால் உன்னைப் போலல்லாத
நிழல் ஒன்று நிஜமானது

பழையவை துறந்து
புதியவை பிறந்த நாளொன்றில்
முன் சுவடுகளை அழிக்கும்
நோக்கம் தலை எடுக்குமுன்
மன்னிக்கவோ மறக்கவோ
தயாராக இருந்தது 
சிதிலமடைந்த என் ஞாபகங்கள்.. 

மூன்றாம் நபர்காதலற்ற வாழ்விற்கும்
கவிதையற்ற வாழ்விற்கும்
சிறு நூலிழை வித்தியாசம்
ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

இரவுகள்தோறும் ஊறித் திளைத்த
இரண்டும் ஒன்றையொன்று
வெறித்துப் பார்த்ததன்
காரணமும் புரியவில்லை..

மிக நீண்ட போராட்டம்
தேவைப்பட்டதை
இரண்டின் வரவிலும்
உணர்ந்த கணத்தை மறக்கவில்லை..

வெற்றி தோல்வி குறித்த
அவசியமின்றி நகர்ந்த நொடிகளில்
நஞ்சு கலந்த துயரமொன்று
பரவிப் படர்ந்ததை கவனிக்கவில்லை..

எவர் கேள்விகளுக்கும்
பதில் சொல்ல தயாரில்லாத
இரண்டும் ஒருநாள்
தற்கொலை செய்துகொண்டதையும்
இதுவரை மூன்றாம் நபர் யாருக்கும்
தெரிவிப்பதற்கு
காதலோ கவிதையோ உயிருடன் இல்லை..

காதல் கதை


என் காதல்
கதையாகிவிடுமோ
எனும் தவிப்பில் நான்..

உன் கதையே
காதலுக்கு மூலமானதின்
பூரிப்பில் நீ..

இனி காதல்
கதையாக வேண்டாம்..
கதையும்
காதலாக வேண்டாம்..

கவிதையும் காதலுமாய்
சேர்ந்திருப்போம்..
மனதில் மனமாய்
வாழ்ந்திருப்போம்..எனதின் நானும் நானின் எனதும்..நகர்ந்து நகர்ந்து மறையும்
பயணக் காட்சிகளாய்
என் தேர்வுகளும் தேடல்களும்...

உருகி உருகி உறையும்
பனிக்கட்டிகளாய்
என் ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

விலகி விலகி இணையும்
தண்டவாளங்களாய்
என் நேசிப்பும் வாசிப்பும்..

தோற்க தோற்க முயலும்
மழைத்துளியாய்
என் பயணமும் பாதையும்..

இருள இருள ஒளிரும்
தொலைதூர வெளிச்சமாய்
என் கனவுகளும் கற்பனைகளும்

விழ விழ எழும்
கடலலையாய்
எனதின் நானும் நானின் எனதும்..

அறுவடைஉன்னை எந்த சமயத்திலும்
எந்த காரணத்திற்காகவும்
வெறுக்க மாட்டேன்..
ஏனெனில் வெறுப்பின்
வலியறிந்தவள் நான்..

மறுதலிக்கவோ
நிராகரிக்கவோ
புறக்கணிக்கவோ
உதாசீனப்படுத்தவோ
தெரியாது என் நேசத்திற்கு..

தெரிந்ததெல்லாம்
நேசிக்க மட்டுமே..
அதன் மூலம் காயம் கொள்ளவும்..

அதற்கு மேல்
இம்மியும் அறிந்திராத
என் நேசத்தை உனக்குள்
விதைத்திருக்கிறேன்..

அதன் நிழலில்
நீ இளைப்பாறும்
நாள் வரும்வரை
விலகியிருக்கட்டும்
நம் இருவருக்குமான
நெருக்கம்...

அந்த விலகலில் 
துளிர்த்துக் கொண்டே இருக்கும்
யாராலும் அறுவடை செய்து 
முடிக்க முடியாத
பெரும் விளைச்சல்..

உன்மடி


அழுதழுது
தேம்பி கண்ணயர்ந்து
கனவில் உன் மடியில்
தலைசாய்க்கிறேன்..
தூக்கத்தில் புரண்டு படுக்கையில் உணர்ந்தேன்
உன்மடியில் என் தலையிருப்பதை...

கேள்வி


சில கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காக
சில சமயம்
சிலரிடம்
பேச வேண்டியிருக்கிறது
அந்த கேள்வி
முக்கியத்துவமானதில்லை
என்றபோதும்
சில சமயம் அந்த நபரும்... 

குறுஞ்செய்தி


உனது குறுஞ்செய்தியை
கண்டும் காணாமல்
இருக்கப் பழகும்
முயற்சியில்
தோல்வியடைகிறேன்

சத்தமிட்டோ
அதிர்வெழுப்பியோ வரும்
உனது குறுஞ்செய்திகள்
என்னிடமிருந்து புதிதாய்
எதைப் பதிலாக பெறப்போகிறது?

அதனாலே
எனது மெளனத்தை
அணிவிக்கிறேன்
எனதலைபேசிக்கும்..

சலனமற்றிருக்கும் எனதுடல்மார்பு வலியில் விம்முகிறது
தொண்டை அடைக்கிறது
வயிற்றில் அமிலம் சுரப்பது
அப்படியே தெரிகிறது
கைகள் உதறல் எடுக்கிறது
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது
வாந்தியோ, குமட்டலோ வருகிறது

நேசத்திற்குரியவர்களின்
அதி கோபத்தில்
வார்த்தைகளால்
அறையப்படும்போது
மேற்சொன்னவையெல்லாம்
தானாகவே நடக்கின்றன..
ஒருநாள் கூட்டைவிட்டு
பறந்துவிடவும் கூடும்
காற்றெனப்படும் உயிர். .

அப்போது வீசப்படும்
வார்த்தைகள் குறித்து
வலியோ, நடுக்கமோ, உதறலோ இன்றி
சலனமற்றிருக்கும் எனதுடல்..

கடை பொம்மைஎல்லா உணர்ச்சிகளையும்
புதைத்துவிட்டு
எப்போதும் புன்னையுடன் இருக்கிற
கடை பொம்மையைப் போல
இருக்க வேண்டுமென்ற
எதிர்பார்ப்புகளை ஒருபோதும்
நிறைவேற்ற தெரியவில்லை

ஊமையாகவோ,
காது கேளாதவளாகவோ
பிறந்திருக்கலாமோவென
நினைக்கத் தோன்றுகிறது

சில சமயங்களில்
தற்கொலை செய்துகொண்டு விடுவேனோ
எனும் பயம் தொற்றிக் கொள்கிறது..

கண்ணீர் ததும்பி
கணிணி திரையினை
மறைக்கிறது..
கைகள் நடுங்கி
விரல்கள் உதிர
கீபோர்டிலுள்ள எழுத்துகளும்
சேர்ந்து உதிர துவங்கின.. 

வெற்றிடத்தின் கடைசிப் புள்ளி


அந்த கணம் அப்படியே
நெஞ்சில் ஆழ உறைந்துவிட்டது

கேள்விகளும்
எதிர்கேள்விகளுமாய்
கடந்து போன நிமிடத்தின்
பதற்றங்கள் இன்னும் தணியவில்லை

சிரித்துப் பேசியபடியோ
கொஞ்சிப் பேசியபடியோ
நெருங்கும்போது
முந்தைய கோபக்கங்குகளின்
அனலை உணர்கிறேன்

இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக் கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்..

உனது கேள்விகளை
உனது கோபங்களை
எந்தவித கவசமுமின்றி
எதிர்கொள்வதென
இப்போதைக்கு
உத்தேசித்துள்ளேன்..

வெற்றிடத்தின்
கடைசிப் புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைப் போல் நீயும்
ஒரு தோழியைப் போல் நானும்

ஒரு புன்னகையின் பின்னால்சமாதானத்தை
முன்னெடுப்பதில்
இருவருமே சளைத்தவர்களில்லை

இம்முறை
சமாதானம் தேவையா?
என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது

ஒவ்வொருமுறையும்
என்னால் சமாதானத்திற்கு
முன்வைக்கிற புன்னகை குறித்து
அலட்சியம் வெளிப்படுகிறது உன்னிடம்

இம்முறை சமாதானத்துடன்
நெருங்குகிறாய்..
இனியெப்போது வேண்டுமானாலும்
எந்தபக்கமிருந்தும்
ஆபத்து நிகழக் கூடுமெனும்
எச்சரிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு புன்னகையின் பின்னால்
வடிந்துகொண்டிருக்கும் கண்ணீரின் கணத்துடன்.

பிரியங்களின் அந்தாதி


அதீத பிரியங்களின் பொருட்டு
எழுகிற சிறு சிறு சண்டைகளில்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

அதீத கோபங்களில் பொருட்டு
எறியப்படும் வார்த்தைகள் வடிந்தபின்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

அதீத எச்சரிக்கையின் பொருட்டு
உருவாகிற தவறுகளின்
தடயங்கள் மறைந்தபின்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

பிரியத்தை அழித்து
மீள் உருவாக்கம் செய்யும் போதும்
பிரியத்தை பிரியத்தால்
துரத்தும் போதும்
சிந்துகிறது ஓராயிரம் பிரியங்கள்

பிரியம் தொலைக்கப்பட்டு
மீண்டும் கிடைக்கும் போதும்
பிரியம் புதைக்கப்பட்டு
மீண்டும் வளரும் போதும்
உருவாகிறது ஆயிரமாயிரம் பிரியங்கள்

பிரியத்தை பிரியத்தைக் கொண்டே
அறுக்க முடியும்
வைரத்தைப் போல
பிரியத்தை பிரியத்தைக் கொண்டே
உருவாக்க முடியும்
தண்ணீரைப் போல
------------

தண்ணீரைப் போல
பிரியங்கள் எல்லா நூல் இழைகளிலும்
ஊடுருவி தனக்கான இயங்குதளத்தை
வடிவமைத்துக் கொள்கிறது

தண்ணீரைப் போல
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது
தண்ணீரைப் போல சலனமடைகிறது
தண்ணீரைக் குடிப்பது போல
யாராவது ஒருவர் பிரியத்தைக் காலிசெய்துவிடுகின்றனர்
தண்ணீரைப் போல மூழ்கடித்துவிடுகிறது சில பிரியம்

தண்ணீரைப் போல இடம் பொருள் ஏவலுக்குத் தகுந்தபடி
தன்னை மாற்றிக் கொள்கிறது பிரியம்
பிரியங்கள் மாறும் போதும்
தாகம் தணிக்கத்தான் செய்கிறது சிலவகை தண்ணீர்
தண்ணீரின் குணம் மாறும்போதும்
மாறாமலிருக்கிறது சிலவகை பிரியம்

---------------

பிரியம் கொண்ட மனதின் மகிழ்வுகளும்
பிரிந்து கொண்ட மனதின் வலிகளும்
பிரியம் கொண்ட ஒரு மனதால்தான்
புரிந்துகொள்ளப்படும்

பிரியம் கொள்ளுமுன் யாரும்
பிரிவோம் என்று நினைப்பதில்லை
பிரிந்தபின் யாரும் பிரியமில்லை
என்று மறுப்பதில்லை

நம்பிக்கையால் துளிர்க்கும் பிரியம்
ஒருபோதும் வெட்டப்படுவதில்லை
துரோகத்தால் வெட்டப்படும் பிரியம் மட்டும்
எப்போதும் துளிர்ப்பதில்லை

பிரியத்தின் எதிரி பெரும்பாலும்
பிரியங்களின் சாயல் கொண்டவை..

பிரியத்தின் நிழலில்
உறங்குவதற்கும்
இளைப்பாறுவதற்கும்
காத்துக்கிடக்கின்றன
ஏராளமான இதயங்கள்

-----------------------

இதயங்கள் பலவகைப்படும்
இரக்கமுள்ள இதயம்
எதையும் தாங்கும் இதயம்
வலியுள்ள இதயம்
இவையாவற்றுக்கும் மாறான இதயம்
இப்படி...

அவையாவும் அப்படியாவதற்கு
காரணம் ஒன்றே
அதீத பிரியம்..

சந்திப்பு


ஒவ்வொரு சந்திப்பிலும்
வெளிச்சம் போல பரவுகிறாய்
ஒளிர்கிறேன்
வானமெங்கும்
பூமியெங்கும்.. 

நமக்கிடையேயான யாவும்


பொங்கும் உன் மகிழ்வு
ஏங்கும் உன் பாசம்
தாங்கும் உன் துயரம்  
தூங்கும் உன் அழகு
யாவற்றையும் அறியும் முதல் தோழியாய்
உன்னை நேசிக்கும் இறுதிக் காதலியாய்
தொடரும் என் பயணத்தில்
மாறியும் மாறாமலுமாய் இருக்கிறது
நமக்கிடையேயான யாவும்.. 

வலி


கடும் காய்ச்சலாலும்
கொடும் வயிற்றுவலியாலும்
பெரும் கழுத்துவலியாலும்
நீ அவதிப்பட்டு அழும்போதெல்லாம்
வலியில் சுருண்டு போகிறேன்
இரைவிழுங்கிய மலைப்பாம்பென

இரண்டும்


வந்து வந்து மறைகின்றன...
மகிழ்வின் போது
கோபத்தில் முகம் திருப்பியதும்
கோபத்தின் போது
வாரியணைத்துக் கொண்டதும்

தாயுமானவன்


கோபம் வந்தால் அரற்றி
கொஞ்சம் கழித்து அரவணைத்து 
பசியறிந்து பரிமாறி
துயரறிந்து துணிவூட்டி
யாதுமாகி நின்றாள் என் அம்மா
தாயுமாகி வந்தாய் நீ

பிறவியின் பயன்


இந்த பிறவியின் பயனை
அடைந்துவிட்டேனென்று
உணர்ந்தபோது
நீயுன் காதலை
எனக்கு கையளித்துக் கொண்டிருந்தாய்..

கசப்பு


எனது அத்துணை
கசப்புகளையும்
செரித்து வெளித்தள்ளும்
பக்குவம் வாய்த்திருக்கிறது
உனது காதலுக்கு..

சந்திப்பின் முன்னும் பின்னும்

சந்திப்பின் முன்னும் பின்னுமான
நிகழ்வுகளை
அசைபோடும் ஒவ்வொரு முறையும்
திகைப்பும் வியப்பும் மேலிடுகிறது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நாமறியாமல் துளிர்த்த நேசம்
இன்று விருட்சமாகி நிற்கும் பேரழகைக் கண்டு..