Thursday, December 31, 2009

சமபலம்

காலையில்
என் முன் நிற்கும் போது
உன் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறேன்..

மாலையில்
உன் முன் நிற்கும் போது
என் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறாய்..

இரவு வரட்டும்
இருவரும் சமபலத்தோடு
சந்திப்போம்..
என் பலத்தை
உனக்கு முழுதாகவும்
உன் பலத்தை
எனக்கு முழுதாகவும்
பரிமாறிக் கொள்ள..

மறதி-பசி

ஒரு பொருளை
எடுத்த இடத்தில் வைப்பதில்லை..
வைத்த இடமும் ஞாபகத்தில்
இருப்பதில்லையெனவும்.. 
முன்னர் வாங்கிவரும்
தின்பண்டங்களை ஒன்று விடாமல்
காலி செய்யும் நான்
இப்போதெலாம்
சாப்பிடுவதேயில்லையெனவும்
வருத்தமுற்ற அம்மா
மறதியொழிக்க வல்லாரைச் சட்டினியும்
பசியெடுக்க பிரண்டைத் துகையலும்
உண்ணத் தருகிறாள்..
அவளுக்கெப்படித் தெரியும்?
உன்னை நினைத்து
மற்ற அனைத்தையும் மறப்பதும்..
பசலையால் பசியெடுக்காதிருப்பதும்..

கண்ணாமூச்சி

''கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு? ''
கண்ணைக் கட்டிவிட்டு
ஒரு சுற்று சுற்றிவிட்டு
தோழிகள் ஓடி ஒளிந்தனர்..
எதிரே வந்த நீ
உன்னையும் கண்டுபிடிக்கச்
சொல்லிக் கேட்கிறாய்?
உன் குரலை
கேட்டு உள்ளுக்குள்
மகிழ்ந்த நான்
நெஞ்சில் கைவைத்துக் கொண்டேன்..
உள்ளே ஒளிந்திருக்கும்
உன்னை வெளியே
எப்படி தேடுவது?

மயக்கு

நீ இயக்குகிறாய்..
நான் இயங்குகிறேன்..
நீ மயக்குகிறாய்..
நான் மயங்குகிறேன்..
விலகினால்
விலக்கி விடுவேன்..

உன் நேசத்தை அல்ல..
சுவாசத்தை..

தேடித்தேடி

உன்னை
அங்கங்கே
அவ்வப்போது
தேடித்தேடி அலைகிறேன்..
அதை எனக்குள்ளிருந்து
எட்டிப் பார்த்து
ரசிக்கிறாய்..

உன் நேசம்

உன் நேசம்
என்னைப் பலப்படுத்துகிறதோ
பலவீனப்படுத்துகிறதோ
தெரியவில்லை..
ஆனால் படுத்தியெடுக்கிறது
சுகமாகவும்..
வலியாகவும்..

நாம் ..

நமக்குள் நேற்று
கடந்தவற்றை எழுதினேன்..
நமக்குள் இன்று
நடந்தவற்றை எழுதுகிறேன்..
நமக்குள் நாளை
நிகழவிருப்பையும் எழுதுவேன்..
நாம் நாமாக
நேசமாறாதிருப்பதால்
சாத்தியமாகிறது
அத்தனையும்..

உன் நினைவு.

ஒரு வாரம்
பார்க்காமலிருக்கலாம்..
ஒரு மாதம்
பேசாமலிருககலாம்..
ஒரு  நிமிடம்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
என் சுவாசம்
உன் நினைவு.

நிலவு இரவு

எனக்கு நீ நிலவாகும் போது
உனக்கு நான் இரவாகிறேன்..
உனக்கு நான் நிலவாகும் போது
எனக்கு நீ இரவாகிறாய்..
இரவோடு நிலவும்
இந்த உறவு
பூத்தபடி இருக்கும்
பல நூறு இரவுகளிலும்..

ஒத்திகை

நீர்ச் சுழலாக இருந்த என்னை
நதியென மாற்றினாய்..
போருக்குனம் கொண்டவளை
பொறுமை கொள்ள செய்தாய்..
நெருஞ்சியாக இருந்தவளை
நேசத்தை உடுத்த வைத்தாய்..
ஊரூராய் திரிந்தவளை
ஓரிடத்தில் அமர வைத்தாய்..
வெளிகளை கடந்தவளை
உன் இதய திசைகாட்டி
இயங்க பணித்தாய்..
இன்னும் என்ன
செய்வதாக உத்தேசம்..?
சொல்லிவிடேன்..
ஒத்திகை பார்க்கலாம்..

பாறை மனது

அலை மோதி உடையா பாறை..
மழை தூரி கரையா மண்..
காற்று தொட்டு மறையும் நுரை..
கனல் பட்டு உருகும் மெழுகு..
யாவையும் முரணாக மாறும்..
உன் பார்வைப்பொறி
பட்டுவிட்டால்..
என் பாறை மனது
பஞ்சென பற்றியது போல..

பலூன் பாரம்

இன்னும்
நீ சொல்லாமலிருக்கும்
அந்த ஒற்றை வார்த்தையையும்
சொல்லிவிட்டால்
பலூனில் அடைபட்ட காற்று
ஊசிமுனை பட்டு
வெடித்து வெளியேறுவதைப் போல
என் பாரமும் ஓடிவிடும்..
எப்போது சொல்ல இருக்கிறாய்?

கண்கள்..

உன்னிரு கண்களில்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாயோ?
ஒருமுறை நிலவும் குளிர்ச்சியையும்,
இரவின் இணக்கத்தையும்..
ஒருமுறை நேசத்தின் நெருக்கத்தையும்,
நெருப்பின் தாக்கத்தையும்..
ஒருமுறை கவர்ந்தும் கடந்தும்,
கடத்தியும் படுத்தியும்..
ஒருமுறை மயங்க வைத்தும்,
தெளிய வைத்தும்..
என்னை பாடாய்படுத்தி விடுகிறது..
என்னதான்
ஒளித்து வைத்துள்ளாய்
உன் கண்களில்..
என் பிம்பங்களை தவிர..

சேட்டைகளின் ரசிகை

இப்போதெல்லாம்
உனக்கு சேட்டை
அதிகமாகி விட்டது..
எனக்கு கோபம்
தலைக்கேறும் நேரங்களில்
அதை இன்னும்
தூண்டி விட்டு
காலடியில்
வழிந்தோட செய்கிறாய்...
உன் சேட்டைகளின்
ரசிகை நான்..

சிறுசிறு சண்டை

தாமதமாய்
உள் நுழையும் தருணங்களில்
ஒற்றை முத்தத்தை
தவறாது அளித்து விடுகிறாய்..
அதனினும்
உரிய நேரத்திலோ
அல்லது முன்னதாகவோ
வந்துவிடு.. 
சிறுசிறு சண்டை போடலாம்..
ஊடலுக்கு பின்னான
முத்தம் இன்னும்கூட
சுவையானது..

நடுநிசி

எப்படி 
சமாதனப்படுத்த போகிறாய்?
நடுநிசி விழித்து
விளையாடிக்கொண்டிருக்கும்
நேசத்தை..

என் சுவாசம்

என்னை மிச்சமில்லாமல்
தின்று போகும்
உன் புன்னைகையை
அச்சமில்லாமல்
ஆதரிக்கிறேன்..
உன் புன்னகை
என் சுவாசம்..

சிந்தனை..

இன்னும் ஓரிரு நாட்களில்
நிகழவிருக்கும்
நம் சந்திப்பிற்கு
ஆயத்தமாகிறேன்..
உன்னிடமிருந்து வெளிப்படும்
யாவற்றையும்
எப்படி உள்வாங்கி
சேமிப்பது என்ற
சிந்தனையோடு..

இதய சிறகு.

புது வருடத்தில்
உனக்கு என்ன பரிசளிப்பதென
யோசித்து குழம்பியபோது
காதருகே வந்து
ஒற்றைவார்த்தையில்
உன் விருப்பம் சொன்னாய்..
சிறகு முளைத்தது
இதயத்திற்கு..

உன் சிரிப்பு

நான் பிரயோகிக்கும்
ஆயுதங்களை எதிர்கொள்ள
நீயேந்தும் கேடயமும்..
நீ என் மீது செலுத்தும்
ஆயுதமும்..
உன் சிரிப்புதான் பொடியா..
என்னை ஆள்வதும் அதுதான்
நான் வீழ்வதும் அதில்தான்..

Wednesday, December 30, 2009

சில கனவுகளும் நிஜங்களும்

ஒரு வெண்ணிற இரவு
ஒரு பிறை நிலவு
ஒரு சிறகு முளைக்காத வண்ணத்துப்பூச்சி
ஒரு உறங்காத பல்லி
அமைதி நிலையில் கைப்பேசி
ஒரு சுவர்க் கடிகாரம்
இவற்றோடு
நான்கறை கொண்ட இதயமொன்றும்
மேலிமையும் கீழிமையும் இணையாத இரு கண்களும்
காத்திருக்கின்றன உன் வருகையை எதிர்பார்த்து
சில கனவுகளும் நிஜங்களும் கூட.. 

தேநீர்

மிதமான சூட்டில்
உதடுகள் தூங்கும்
வெப்பத்தில் உள்ளேஇறங்கும்
ஒவ்வொரு வாய் தேநீரின்
கடைசி சொட்டிலும்
நீ இருக்கிறாய்
தேன்சுவையாய்..

நிழலோடு விளையாடி

தூங்க செய்வதற்கு
முதுகில் தட்டிக் கொடுக்கிறாய்..
அது உறக்கத்தை
பின்னுக்கு தள்ளிவிட்டு
துள்ளி எழுந்து
பசிக்கிறது என்கிறது..
பசியாற்றி
தோள் சாய்க்கிறாய்..
பின் விழும்
உன் நிழலோடு விளையாடி
விடியலில் கண்ணயர்கிறது..

Tuesday, December 29, 2009

சுவடு

தாமதமாகியும்
வராத உன்னை எண்ணியதில்
அணை உடைத்து
வெளியேறும் கண்ணீர்
தலையணை நனைக்கிறது..
விடிகாலையில்
வீடு திரும்பிய நீ
அழுகையின் சுவடுகள்
கண்டு பதறி
கையணைத்து
முத்தமிட்டு
நெஞ்சணைத்து
அடைகாத்தாய்..
விடியல் தாண்டி எழுகிறேன்..
கண்ணீரின் பாதைகளில்
உன் இதழ்கள்
பயணித்த சுவடுகள் கலந்திருந்தது..

சண்டை

தருவதற்கு நானும்
பெறுவதற்கு நீயும்  
தயாராகி இருக்க
இந்த நேசமும்
தூக்கமும் ஏனோ
சண்டையிட்டு கொண்டிருக்கிறது..

நித்திரை

என் விழிப்பு
உன் நித்திரை
கலைக்கிறதெனில்
தூங்கிவிடுகிறேன்
நிரந்தரமாய்..

மொட்டை மாடி

மின்சாரம் தடைபட
மொட்டை மாடியில்
உறங்க சென்றோம்..
படுத்தவுடன் உனக்கு
உறக்கம் சொக்க
என்னையும் தூங்கென்றாய்..
தூக்கம் வரவில்லையென
சிணுங்க
நட்சத்திரங்களை எண்ணு
தூக்கம் வருமென்றாய்..
அதிகாலை புரண்டு படுக்கையில்
கண்விழித்த நீ
5,92,009 என
காற்றில் விரலசைத்து
கண்மூடி சொல்வதை பார்த்தாய்..
கைவிரல்களை நீவி விட்டு,
இமைகளில் மெதுவாய் அழுத்தி,
இதழில் இதழ் சேர்த்து
நான் விட்ட இடத்திலிருந்து
நீ நட்சத்திரங்களை
என்ன துவங்கினாய்..
அது சிறிது சிறிதாய்
குறைந்து ஒற்றை துருவ
நட்சத்திரமே எஞ்சியிருந்தது..

நந்தியாவட்டை

மலராத நந்தியாவட்டை
மொட்டுக்கள் ஏழெட்டை
பறித்து
இரண்டொரு நாட்கள்
வைத்திருந்து
மலர்கிறதாவென
பார்த்திருந்தேன்
மொட்டாகவும் இல்லாமல்
முழுதாகவும் மலராமல்
பொதும்பியிருந்தது 
என் நேசத்தை போல்..

Monday, December 28, 2009

கிச்சு கிச்சு

''கிச்சு கிச்சு தாம்பாளம்
கியா கியா தாம்பாளம்''
எனப்பாடி விரலிடுக்கில் 
என் இதயம் சொருகி
மேடான மண்ணுக்குள்
மறைத்து வைக்கிறேன்..
உன் விழி பார்த்திருக்க..
ஓரிடத்தில் இரு கை சேர்த்து
மண்ணில் பொத்துகிறாய்..
அவ்விடம் தவிர
வேறிடத்தில் தேடுகிறேன்..
புதைத்து வைத்த இதயத்தின..

உன் கைக்குள் மறைந்திருந்ததை  
'குச்சி'என எடுத்து சிரிக்கிறாய்..
அது குச்சியல்ல..'இதய'மென
எப்படிச் சொல்வேன்..?

வார்த்தை

உன் வார்த்தைகளுக்கு 
தட்டிக் கழிக்கத்தான்
தெரிகிறது.. .
என் வார்த்தைகளுக்கு 
தாங்கிக் கொள்வதைத் தவிர
வேறொன்றும் தெரிந்திருக்க வில்லை..

சிந்தனை


ஒய்வு நேரங்களில்தான்
உனக்கு என்னைப் பற்றி
சிந்தனை வருகிறது..

எனது சிந்தனை ஓய்வில்லாது
உன்னைச் சுற்றியே இருக்கிறது..

இதுதான் ஆணின் நேசத்திற்கும்
பெண்ணின் நேசத்திற்கும் உள்ள
வெளிப்பாட்டின் அளவு கோலா?

பைத்தியம் ..


மேகம் மறைக்க
மறைந்திருப்பதும்
விலக ஒளிர்ந்திருப்பதுமான
நிலவைப் போல்
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?
அழைப்பு ஏதேனும் தவற விட்டுவிட்டோமா?
என நள்ளிரவு போதில்
இடையிடையே விழித்து பார்த்துவிட்டு
உறங்குவதே வாடிக்கையாகிவிட்டது..
கடந்த ஆறுமாத காலமாய்..
கண்டுபிடித்துவிட்டாயா..?
இந்த கவிதையில்..
எவ்வளவு காலமாய்
எனக்கு பைத்தியம்
பிடித்திருக்கிறதென..

இது அதீத நேசம்..

என் தவறுகளை
சரியாகவே
புரிந்து வைத்திருக்கிறது
உன் நேசம்..

உனது சரியையும் கூட
தவறாகவே உணர்ந்து கொள்கிறது..
என் நேசம்..

இது அதீத நேசத்தின்
வெளிப்பாடே தவிர
வேறு ஒன்றுமில்லை பொடியா..

உணர்வு

அம்மாவின்
அனைத்து வார்த்தைகளையும்
தட்டாமல் செய்யும் நீ
என் வார்த்தைகளை
பரிசீலனை செய்து கூட
பார்த்ததில்லை ...
வருத்தமில்லை பொடியா..இதனால்
ஒரு பெண்ணின் உணர்வுகளை
புரிந்து கொள்ளும் ஒருவனால் 
மற்றொரு பெண்ணின் அசைவுகளை
உணரமுடியாதா என்ன? உணர்வாய் ஒருநாள்..

நேர்மறை


எப்போதும்
நேர்மறையாகச் சிந்திக்க
வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது..
ஒவ்வொரு முறையும்
உன் வேண்டுகோள்..
கட்டளை யாவும்..

நீ எனக்குள் வசிப்பதை மறைவின்றி
நேராகவே சொல்லியிருக்கிறேன்..
நமது பகிர்தல் இன்னும்
ஆழமாய் நீளவேண்டுமெனவும்
நேர்மறையாகவே சிந்திக்கிறேன்..

ஆணுக்கு காதல் வாழ்க்கையின்
ஒரு பகுதியாகவும்
பெண்ணுக்கு அதுவே
வாழ்க்கையாகவும்
இருக்கும் பட்சத்தில்
இதைவிட வேறெப்படி
நேர்மறையாகச் சிந்திக்க?

என்னிலை

''யாரிடம் இவ்வளவு நேரம் பேசுகிறாய்?''
''கவிதை எழுதுறியே ... காதலா?''
''பொடியன் யாரு..?''
 இப்படி
 என்னைச் சுற்றிஇருக்கும்
 சிலபேர்
 கேட்க துணிந்து விட்டார்கள்..

 யாருக்கும் பதில் சொல்ல முடிவதில்லை..
 ஒருவித வலியையும், சுகத்தையும்
 ஒருங்கே அனுபவிக்கும்
 என்னிலை பற்றி..

கோபம்

உச்சியில் மணிநேரமாய்
பொங்கி நிற்கும் கோபம்
உன் குறுஞ்செய்தி கண்டு
வடிந்து விடுகிறது..
நொடிப்போதில்..

அறுவடை

என் பிரியத்தை
பதியமிட்டே செல்கிறேன்
உன் நிலத்தில்..
அறுவடைக்கான
எந்த முகாந்திரமுமின்றி.. 
உறுதியாய் நம்புகிறேன்..
மண்ணுக்குள் புதையுமது
வெளிப்படும்
நானில்லாத போதிலும்..

செயல்பாடு

உனக்கு
எனது செயல்பாடுகள்
சாதரணமாகத்தான்
இருக்கிறது..
ஒரு பூ மலர்வதை போல..

எனக்கு
உனது செயல்பாடுகள்
சதா'ரண'மாக இருக்கிறது
ஒரு நட்சத்திரம்
எரிந்து வீழ்வதை போல..

உயிர்ப்பிக்க வா

யாருமற்ற தனிமையில்
விழித்திருக்கிறேன்
நிமிடங்களுக்கொருமுறை
சாகிறேன்..
நொடியேனும்
உயிர்ப்பிக்க வா..

குறுஞ்செய்தி

சில சமயங்களில்
இன்பம் என் உலகம்
வரையறுத்திருக்கும்
யாவற்றையும் விட
இன்பம் தருகிறது
உன் குறுஞ்செய்தி..

Thursday, December 24, 2009

கருங்குவளை

கருங்குவளை மலரை
கையிலேந்தி நிற்கிறேன்..
அதனுள்ளிருக்கும்
ஒற்றை மகரந்தமாய்
எப்போது வந்தமர்வாய்..
என்னில் சேகரமாய்..

சுவாசம்


என் இதய துடிப்பின்
ஓசை கேட்டு
உன் துயில் களையும்
என்றால் அன்பே
என் சுவாசம்
சற்றுநேரம்
நிறுத்திவைப்பேன்..

குறுஞ்செய்தி


மேகத்திலிருந்து
சிந்தும் முதல்மழை துளி
மார்புரசும் குளிர்ச்சியாய்
உன் குறுஞ்செய்தி..

கவிதை..

திறந்தேதான் இருக்கிறது..
கவிதையோடு என் மனமும்
நீ வாசிப்பதற்கும்
வசிப்பதற்கும்..

Wednesday, December 16, 2009

அனுமதி..

என்னையும்
என் நேசத்தையும்
உனக்குள்
உலவ அனுமதித்தமைக்கு
என்றென்றும்
என் நன்றியை
எழுத்தில் பதிவு செய்கிறேன்..
எனக்குப் பிறகும்
உன்னிடம் அது நிலைத்திருக்கும்..

தனிமை..

நீ
இரவு
தனிமை
எனக்கு பிடித்த காரணத்தால்
இன்னும் நீட்டிக்க முயல்கிறேன்..
என் நாட்களை..

நிலவு


என் குரலின்
கண்ணீரை
உனக்கு கேட்கவிடாமல்
மறைக்கிறேன்..
ஆனால் என் இதயம்
அழும் ஓசை கேட்டு
நிலவு வந்து
ஆறுதல்
சொல்லிவிட்டு போகிறது....

வழி விடு

மழை துரத்தி வருகிறது
வழி விடு..
ஒளிந்து கொள்கிறேன்
உனக்குள்..

Tuesday, December 15, 2009

பந்து

நான் வெறும் காற்றாய்
உருவமற்று திரிகிறேன்..
உன் மனமெனும்
பந்தில்
அடைத்துக் கொள்..
உயிர் பெற்று துள்ளுவேன்..