Thursday, May 27, 2010

நீயளித்த நம்பிக்கை


உன்னைச் சுற்றி 
வருமென் நினைவுகளை 
புறந்தள்ளி 
என் நேசத்திற்கு 
பெரும்கொள்ளி 
வைத்துவிட முயல்கிறாய்
ஒருக்காலும் 
நீயளித்த நம்பிக்கை 
வார்த்தைகளுக்கு முன்னால் 
தோற்று திரும்பாதென் நேசம். 

சிம்பொனி


உன்னில் 
விழுந்து கிடக்குமென் 
இதயத்தின் கதறலே 
உன் செவியில் 
விழாத போது 
எந்த சிம்பொனி 
உன் காதுகளை எட்டும்?

இணையம்


உனக்கு 
இணையத்தைப் பற்றி 
தெரியவில்லை என்பதில் 
பெரிய வருத்தமில்லை.. 
உனக்கு 
என் இதயத்தையே 
புரிந்து கொள்ள முடியாத போது 
எதைத் தேடி 
எதைக் கண்டடைந்து 
என்னாகப் போகிறது.. ?

Tuesday, May 25, 2010

அழுது விடாதே.

என் மரணத்தில்
கூட அழுது விடாதே.
உயிர்த்தெழுந்து
விடப் போகிறேன்..
உன் கண்ணீர்
துளிகளைத் துடைக்க
..

சிறு பார்வை


மெல்லியத் திரையிட்டு 
மறைந்திருக்கும் காதலை 
எதைக் கொண்டு 
வெளிக்காட்ட? 
ஒற்றைக் கவிதையையும் 
சிறு பார்வையையும் 
விடுத்து... 

கல்லறை


எனக்கொரு 
கல்லறைக்
கட்டத் துவங்கினேன்
காதலெனும் 
கற்களால்..

உன் நிழலின் அடியொற்றி


உன்னைப் போல் 
எனக்குள் யாரும் வரப் போவதில்லை..
நீ தந்த இன்பத்தையும்
துன்பத்தையும் தரப் போவதில்லை..
பின் தொடர்கிறேன் 
உன் நிழலின் அடியொற்றி
ஒருநாள்
நிஜம் காண்பேனென.. 

நொடிக்கு நூறுமுறை


மாற்றத்தை 
நொடிக்கு நூறுமுறை 
நிகழ்த்துகிறாய்..
எனக்குள்
காலத்தை விடவும்..

நம்பிக்கை


நமது நேசத்திலுடனிருந்த 
இரவும், பகலும், நாயும்
கவிதையும், காகமும், 
விமானத்தின் பேரிரைச்சலும்
செல்லக்குட்டியும்
அலைபேசியும், குறுஞ்செய்தியும்
சமாதானப்படுத்துகின்றன..
நான் துவளுகையில்..
இன்னும் நம்பிக்கை
இழந்துவிடாதபடி..

வெளிக்காட்ட


கொஞ்சம் வாழ்ந்துவிடலாம்
வார்த்தைகளால் மட்டுமே
வெளிக்காட்ட முடிவதில்லை
என் காதலை..

ஒற்றை வார்த்தை


உன்னை நினைவூட்டாமல் 
இருப்பதில்லை
என் கைகளில் தவழும் 
புத்தகங்களின்
பக்கங்களில் 
ஏதேனும் 
ஒற்றை வார்த்தையேனும்..

‘சதா’ரணமானது


நீ அணைக்கத் தவறும்
எனது அழைப்புகள்
உனக்கு சாதாரணமானதே..
எனக்கு 
‘சதா’ரணமானது.. 

அதிபுத்திசாலி


அடிக்கடி 
நிரூபித்து விடுகிறோம்..
எந்த விஷயத்தையும்.. 
சமச்சீராய் அணுகச் சொல்லி
நீ அதிபுத்திசாலியெனவும்..
உனது விஷயத்தில் மட்டும்
சமச்சீரற்று இயங்கி
நான் அடிமுட்டாளெனவும்..

நூறுமடங்கு


உன்னுடன் 
இருசக்கரவாகனத்தில் 
செல்லும் போது
நூறுமடங்கு கவனமாயிருக்கிறேன்
ஒரு சிறு விபத்தும்
நிகழாதவாறு
என்னிலும் 
உன்னையதிகம் 
நேசிப்பதால்.. 

சில நிமிடத் துளி


உன்னுடன் நுழைகையில் 
அந்த சிறிய கடையும்
பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது..
ஒவ்வொன்றின் விலையையும்
விசாரித்துக் கூடைக்குள்
எடுத்து வைத்தபடி இன்னும் 
பார்வையிட்டு செல்கையில் 
விற்பனைப் பிரதிநிதியொருத்தி
வாய்த்திறமையால் 
ஒரு குளியல் சோப்பைத் 
தலையில் கட்ட 
மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டேன்..
வேண்டாமென்றால் இன்னும் பேசி
உன்னுடன் நானிருக்கும் 
சில நிமிடத் துளிகளையும்
பிடுங்கிக் கொள்வாளெனும் 
அச்சத்துடன்.. 

சாட்சியமாக.


உனது 
முந்தைய குறுஞ்செய்திகளை
அவ்வப்போது 
மீண்டும் எடுத்துப் படிக்கிறேன்..
அவை பிரதிபலிக்கின்றன
முந்தைய நமது
மனநிலையை..
அவை பிரதியாயிருக்கின்றன
சிற்சில நிகழ்வுகளின்
சாட்சியமாக..

வார்த்தைகள்


உன்னை அழைக்கும் போதெல்லாம்
‘இப்போதுதான் நினைத்தேன்’
என்று சொல்லும் 
வார்த்தைகளை
ரசிக்கிறேன்
உண்மையில்லாத போதிலும்..
ஏனெனில் அடிக்கடி 
சொல்லும் வார்த்தைகள்
உண்மையாகிவிடக் கூடுமாம்.. 

தனி இசை


உனக்கென தனி இசையினைப் 
பொருத்தியிருக்கிறேன்.. 
ஒவ்வொரு முறை 
அலைபேசி அலறும் போதெல்லாம் 
நீதானென
ஆவலோடு அணைக்கும் 
என்னை ஏமாற்றும் 
பிறருடைய அழைப்புகளைத் தவிர்க்க.. 

ஆயிரமாயிரம்


உனது 
ஒற்றைப் பார்வையில்
ஆயிரமாயிரம் வார்த்தைகளையும்

உனது 
ஒற்றை ஸ்பரிசத்தில்
ஆயிரமாயிரம் கனவுகளையும்

உனது 
ஒற்றைக் குறுஞ்செய்தியில் 
ஆயிரமாயிரம் எண்ணங்களையும் 
விரியச் செய்தாய்..

எனது 
ஆயிரமாயிரம் பாடல்களும்
ஆயிரமாயிரம் கவிதைகளும் 
உன்னிடம் 
ஒரு துளி காதலைக் கூடவா 
விதைக்காமலிருக்கும்..? 

Wednesday, May 19, 2010

மரிம்பா இசை

மரிம்பா இசையின் 
பாடலை மொழிபெயர்த்தாய்
உடன் பிறந்தோருக்காக..
அந்த இசையும் 
உன் மொழியும் 
தூவி சென்றது 
எனக்குள் சில கவிதைகளை..
அது 
இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது
உன் மொழிபெயர்ப்பிற்காய்..
எப்போதும் 
பொழியக் காத்திருக்கும் 
மேகமாய்.. 

Monday, May 17, 2010

உனக்குள்...

நான் செல்லும் வழியெங்கும்
உனக்கான கவிதைகளை
விதைத்துச் செல்கிறேன் ..
நான் தொலைந்து போகும்
ஒரு தருணத்தில்
என் சொற்களில் ஏறி பயணி..
அந்த சொற்களின் முடிவு நீ
புறப்பட்ட இடத்திலேயே
உன்னைச் சேர்க்கும்..
ஆம்..

ஒருநாள் 
யார் புலன்களுக்கும்
தெரியாமல்
தொலைந்து போயிருப்பேன்
உனக்குள்...

நாடக மேடை

உலகம் 
ஒரு நாடக மேடைதான் எனினும்
ஒத்திகை பார்க்க முடிவதில்லை
பிறப்பையும்
இறப்பையும்

Saturday, May 15, 2010

காதல்


எறும்பு கடிப்பதை 
போலானது காதல் 
எப்போது அந்த இடத்திற்கு 
வந்து சேர்ந்ததென தெரியாது.. 

கைத்தொட்டிலிலிடு


உரம் விழுந்தழும் 
குழந்தையென காதல் 
உன் மன முறத்திலிட்டு 
புடைத்து 
கைத்தொட்டிலிலிடு
அழுகை நிறுத்தி 
அமைதி நிலவ..

மகிழ்வும் தவிப்பும்


காதல் எனும் சொல்லுக்குள்
மட்டும் அப்படி 
என்னதான் இருக்கிறதோ?
வலியும் சுகமுமாய்
மகிழ்வும் தவிப்புமாய்
திளைப்பும் திகைப்புமாய்
முதலும் முடிவுமாய் 
வானும் பூமியுமாய் 
இப்படி யாவுமாய் 
நிறைந்து நிறைக்குமிந்த காதலில் 
அப்படி 
என்னதான் இருக்கிறதோ?

எனது வேர்


நேற்றிரவு 
உனதழைப்பையேற்க
இல்லச் சூழலும்
இதயச் சூழலும்
சரியாயிருக்கவில்லை.. 

ஏதேனும் ஒரு முடிவைச் சொல்
என வீட்டிலும்
இதுதான் என் முடிவென நீயும்
எனைத் துண்டாடிய போதும்
என் பயணத்தில் 
யாதொரு மாற்றத்தையும்
புகுத்த விரும்பவில்லை..

மனிதனை வெல்லும் 
சூழலைவிட 
சூழலை வெல்லும் மனிதனை
நேசிக்கிறேன்..

அந்த நேசிப்பினூடே
சின்னஞ்சிறியதாய் துளிர்க்கிறது
இன்னுமாய் எனது வேர்.. 

நம்பிக்கை


ஒரு இதயத்தின் துடிப்பை
நிறுத்த அதிக பிரயத்தனம்
செய்ய வேண்டியதில்லை..
அதன் நம்பிக்கையின் முனையில் 
சற்றே ஒற்றைச் சொல்லால் 
உராய்த்துச் செல்வதே
போதுமானது..

ஒரு மகிழ்வின வேரை பிடுங்க
அதிக முயற்சி தேவையில்லை..
அதன் பூக்களின் இதழ்களை 
சற்றே காலடியில் மிதித்துச் 
செல்வதே போதுமானது..

ஒரு மரணத்திற்கான 
வரவேற்பிற்கு 
எப்போதும் அதிக முயற்சியும் 
பிரயத்தனமும் தேவையாயிருப்பதில்லை.. 
ஒரு பிறப்பிற்கான கடும்முயற்சியையும்
நம்பிக்கையையும் போல்.. 

காதலுடன்


உனக்கும் 
எனக்குமான 
காரணங்கள்
அப்படியே இருக்கின்றன
இருப்பினும்
எப்போதும் போல்
காதலுடன்
நீ மிதமாகவும்..
நான் மிகையாகவும்..

ஆயுளில் பாதி


யாரும் யாரையும்
எச்சரிக்கையாயிருக்கும்படி
சொல்லவில்லை..

சிக்கியவர்கள்
மற்றவர்களும் 
சிக்கட்டும் என்றும்
தப்பித்தவர்கள்
மற்றவர்கள் 
மாட்டிக் கொள்ளட்டுமென்ற
காரணத்தாலும் எச்சரிக்கை
செய்யவில்லை போலும்..

சக்கரவியூகத்தில்
உட்செல்லும் 
அபிமன்யுவுக்கு
வெளியேற தெரியாதை போல
காதலில் 
நுழைந்தவர்கள்
வெளியேற 
யாரும் கற்றுத் தருவதில்லை..

தானே விழுந்து
தானே மயங்கி
தானே எழுந்து 
நிற்கும் போது
வாழ்க்கை
ஆயுளில் பாதியைக் 
கடந்திருக்கும்.. 

நன்றி..


உன் வார்த்தைகளை 
என் வசதிகேற்றவாறு புரிந்துகொண்டதற்கு 
மன்னித்துவிடு..
என் வார்த்தைகளை 
நான் உதிர்க்காத போதும் புரிந்ததற்கு 
நன்றி..

உன் அன்பினை
ஆயுள்வரை கேட்டு அடம்பிடித்தமைக்கு 
மன்னித்துவிடு.. 
என் அன்பினை 
கண்ணீர் வெள்ளமாக மாற்றியமைக்கு 
நன்றி.. 

உன் ஆளுமையில் 
நானறியாது வசப்பட்டதற்கு 
மன்னித்துவிடு..
என் ஆளுமைகளின் 
மொத்த வெளியிலும் நீ தெரிவதற்கு 
நன்றி.. 

ஒருமுறை உனக்கு 
உச்சபட்ச வலி தந்தமைக்கு 
மன்னித்துவிடு..
தினந்தோறும் எனக்கு 
வலியின்றி வேறெதுவும் தராமைக்கு 
நன்றி..

நிகழ்காலத்தைப் பற்றி
உன்பின்னே அடிதொடர்ந்தமைக்கு 
மன்னித்துவிடு.. 
இறந்தகாலத்தைப் பற்றி 
எனதன்பினை ஏற்றுக்கொள்ளாமைக்கு 
நன்றி..


உன் இரவுகளில் 
அனுமதியின்றி நுழைந்தமைக்காக
மன்னித்துவிடு.. 
என் இரவுகளை
நீ ஆக்கிரமிப்பு செய்ததற்கு 
நன்றி..

உன் இமைகளை 
வருடி திறந்தமைக்காக 
மன்னித்துவிடு..
என் இமைகளில்
நீ குடியிருப்பதற்கு நன்றி.. 

என் இதழ்களில்
தவழும் புன்னகையில் 
தடுமாறியதற்கு 
மன்னித்துவிடு..
என் இதழ்களில் 
சிறிதளவேனும் புன்னகை தந்தமைக்கு 
நன்றி.. 

‘காதல்’ எச்சரிக்கை..


காதல் 
ஒரு மோசமான வியாதி..
ஒவ்வொருவருக்கும்
விதவிதமாய் வந்துவிடும்..

ஒன்றைப் போலானதாய்
இன்னொன்று இருக்காது..
ஆரம்பத்திலேயே
அதன் அறிகுறிகளை 
கண்டறிந்துவிட்டால்
குணமாக்க 
நூறு சதவீதம் வாய்ப்புண்டு..

முற்றவிட்டுவிட்டால்
என்ன செய்தும்
யாராலும் காப்பாற்ற இயலாது..
மருந்திருந்தும் 
குணப்படுத்த இயலாத 
ஒரு மோசமான வியாதி.. 

இந்நோய்க்கான
மருந்து விசித்திரமானது..
ஒவ்வொருவருக்கும்
வேறுபாடானது..

பசி, தூக்கத்தில் 
மாற்றமேற்படுவதே 
முதல் அறிகுறி..
அப்போதே சரி செய்துவிட வேண்டும்..
முற்றிய நிலையில் 
முற்றிலுமாய் 
பசி, தூக்கம், வேலை 
இன்னபிறவற்றையும் 
செயலிழக்கச் செய்யும்.. 

இதற்கென 
தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத 
நிலையில் 
எதிர்பாலரிடம் எச்சரிக்கை உணர்வும்
இதயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுமே..
தற்போதைய 
தற்காப்பு முறையாக இருக்கிறது..

இதன் மூலம் தண்டோரா போட்டு
சொல்லப்படுவதென்னவென்றால்
காதல் எனும் வியாதி
வராமல் காத்துக் கொள்ளுங்கள்..

அறிகுறிகள் தெரிந்தால்
உடனே அக்கம்பக்கம் சொல்லி
அரற்றாமல்
தானே தீர்வு காணவும் முயலாமல்
தடுப்பூசி தேடி அலையாமல் 
கிள்ளி எறியுங்கள்
சிறு தழும்போடு போய் விடும்..

முற்றிய நிலையில் உடலெங்கும்
உள்ளமெங்கும்
தழும்புகள் மட்டுமே
எஞ்சியிருக்கும்..
எச்சரிக்கை
இது ‘காதல்’ எச்சரிக்கை..
உயிரைப் பறிக்கும் 
‘காதல்’ எச்சரிக்கை.. 

நேசம்‘சாப்பிட்டாயா’வென
வேளைக்கொரு தரம் கண்காணிப்பு..

‘எங்கே இருக்கிறாய்’ என
மணிக்கொருமுறை விசாரிப்பு..

மனநிலையறியத் துடிக்கும்
ஒருவித தவிப்பு..

எதையேனும் பகிர்கையில்
தோன்றும் பூரிப்பு..

இவையேதும் இல்லாவிடினும்
ஒன்றும் மாறப்போவதில்லை..

வெட்டாமலிருந்தாலும் 
வளரும் நகத்தினைப் போல்..
பேசாமலிருந்தாலும்
பெருகும் நேசம்.. 

கற்பிசில காரணங்களைக் 
கற்பித்துக் கொண்டு
முடியாதென்கிறாய்..

எந்தவொரு
காரணமுனில்லாமல்
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

காலத்தின் கோப்பை


என்னுடைய அழைப்பை
அலட்சியப்படுத்துகிறாய்..

பிறகு பேசலாமென
பதிலுக்குக் காத்திராமல்
துண்டிக்கிறாய்..

பரிதாபத்துடன்
திரும்பும்
மிதமிஞ்சிய நேசத்தின் 
நிலை கண்டு 
வலிக்கத்தான் செய்கிறது..

இருப்பினும்
எப்போதாவது 
நீ வேண்டி நிற்க
நேருமென 
பதப்படுத்தி வைக்கிறேன்
களங்கமற்ற நேசத்தை
காலத்தின் கோப்பைக்குள்.. 

இது வேலை நேரம்காதல் செய்வதா?
வேலை செய்வதா?
குழப்பத்துடன் சிந்திக்க ஆரம்பித்தேன்..

வேலை காதலையும் 
காதல் வேலையையும்
அனுமதிப்பதில்லை..
சிறிது உட்கார்ந்து யோசித்தேன்..

இரண்டிற்கும் சமமான 
நேரத்தை
ஒதுக்கலாமென்றல்
காதலும் வேலையும்
ஒன்றானதல்ல..
சிறிது எழுந்து யோசித்தேன்..

காதலை வேலையாகவும்
வேலையைக் காதலாகவும்
செய்யலாமெனில் 
நிகழ்த்துதலில் ஏற்படும்
சிரமங்கள் உறுத்தின..
சிறிது நடந்து யோசித்தேன்..

ரகசியம் பிடிபட்டது
காதல் நேரத்தில் 
காதலையும்
வேலை நேரத்தில் 
வேலையையும் 
செய்வதென தீர்மானிக்கையில்
அவனிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தது..
அலைபேசியை அணைத்து விட்டு 
கணிணியை இயக்கினேன்..
இது வேலை நேரம்.

அக்கறைஎதைக் கொடுத்து 
இடமாற்றுவாய்?
இத்துணை தூரம் 
கடந்து வந்த 
அன்பினையும்..
அக்கறையையும்..

பெருவலி..
வெம்மை நிறைந்தயென் 
பகல் போதில் 
வேதனையுடன்
வந்தமர்கிறது 
உனது நிராகரிப்பில் 
கருக்கொண்ட பெருவலி.. 

கவிதை


நாம் சந்திப்புகளை
நொடி நொடியாய்
நினைவுபடுத்த 
நம்மைத் தவிரவும்
ஒன்றிருக்கிறது..
வேறெது?
இந்த கவிதைகள்தான்!

சிறு அசைவுகள்


உன்னைப் பற்றிய 
கவிதைகளை வாசிக்கும் போது
உன் கண்களிலும்
உதடுகளிலும்
தெறிக்கும் 
சிறு அசைவுகள்
சொல்லிவிடக் கூடும்
என் மீதான காதலை.. 

நேசத்தின் கையளிப்பு


ஒரு காலைப் பொழுதில்
கதவிடுக்கில்
விரல்பட்டு நசுங்கியதாக
நீயும்
குளிக்கும் போது
எனது நகத்தாலான பெருங்கீறலை
நானும்
சொல்லிக் கொண்டோம்..
பின்னர் வந்த நாட்களில்
அது பற்றிய விசாரிப்புகள்
கடந்த பின்னும் 
எஞ்சியிருக்கும் தழும்புகள்
நினைவுபடுத்துகின்றன
நேசத்தின் கையளிப்புகளை..

தேவதை


சில சமயம் தேவதையாகவும்
பல சமயம் இராட்சசியாகவும்
உருமாற்றும்
மந்திரவித்தை
நள்ளிரவில் 
மொட்டைமடியில் 
நிலவைப் பார்த்தபடி
பேசும் உன் குரலுக்கு உண்டு..

சாத்தியம்


சாத்தியமற்றவைகளை
சாத்தியப்படுத்தவும்
சாத்தியமானவைகளை
சாத்தியமற்றதாக்கவும்
காதலுக்கு 
யார் தான் கற்றுத் தந்ததோ?

சமாதி


சம்மதம்
கேட்ட பிறகுதான்
காதலிக்க வேண்டுமென்றால் 
காதல்
என்றைக்கோ
சமாதியாயிருக்கும்.. 

கடல்..


ஒரே அலையில் 
என்னை நனைத்தது கடல்..
ஒவ்வொரு முறையும்
உன்னை நனைக்காமல்
திரும்பிச் செல்கிறது..
கடலுக்குத்
தெரிந்திருக்கிறதென் மனது
நீ என் காதலில்தான் 
நனைய வேண்டுமென.. 

சொற்களில் முட்களேந்தி..

அடிக்கடி திட்ட செய்து 
திட்டும்போதெல்லாம் புன்னகைத்து 
படக்கென கோபமூட்டி 
கோபத்தில் மௌனித்து 
திடீரென மகிழ்ச்சி தந்து 
திட்டமின்றி தீண்டல் நிகழ்த்தி 
மனசு முழுக்க 
மலர் பரப்பிக் கிடக்கிறாய்..
சொற்களில் மட்டும் 
முட்களேந்தி..

இருளை இழுத்துப் போர்த்தியபடி..


காதுக்குள் இசை வழிந்திருக்க 
கண்களில் கனவுகள் கசிந்திருக்க 
நிகழ்காலத்தில் வருங்காலம் வடிந்திருக்க 
மெல்ல இருள் முடிந்து விடிந்திருக்க 
அக்கணத்தில் உன் வருகை நிகழ்ந்தது 
அனைத்தையும் துடைத்துவிட்டு 
அடைக்கலமாகிறேன்   உன் வெப்பத்திற்குள்
இருளை இழுத்துப் போர்த்தியபடி.. 

யாவற்றுக்குமிடையில்

வாய்த்திருக்கும் இப்பிறவியில் 
வாய்த்திருக்கும் ஒரு வாழ்க்கையில் 
வாய்த்திருக்கும் சந்தர்ப்பத்தில் 
வாய்த்திருக்கும் முழு நேசத்தில் 
வாய்த்திருக்கும் மிச்ச ஆயுளில் 
வாழ்ந்துவிட துடிக்கிறேன் 
வாய் திறந்தே வதைக்கிறாய்..
மௌனத்தாலும் உதைக்கிறாய்
புன்னகைத்தே சிதைக்கிறாய் 
மரணக்குழியில் புதைக்கிறாய்
யாவற்றுக்குமிடையில் 
கொஞ்சம் நேசத்தையும் 
விதைக்கிறாய்.. 

கடிபட்ட இரவு


பாம்பிடம் கடிபட்ட இரவு 
தூங்காமலே 
கழிய வேண்டுமென்பதாய் 
உன்னிடம் 
கடிபட்ட என் சிந்தனை 
ஒவ்வோர் இரவும் 
தூங்காமலே திரிகின்றது..

நினைக்கும் தோறும்..


கவனத்தின் போதாமையாலும் 
கயவர்களின் திருட்டு தனத்தாலும் 
செல்லைத் தொலைத்து விட்டு 
எண்கள் தொலைந்து போனதற்காகவும் 
வீட்டில் திட்டு வாங்க வேண்டியிருக்குமெனவும் 
குற்றுணர்வின் விளிம்பு நிலையிலும் 
பதறும் மனதின் துடிப்பிற்கு மத்தியில் 
காதலாலானவனுக்கு 
நேசத்திலும் கோபத்திலும் 
பெறப்பட்ட 
காதலியின் 
மீட்க முடியாக குறுஞ்செய்திகள் 
பற்றிய சிந்தனை 
வதைத்தெடுக்கும்
நினைக்கும் தோறும்.. 

கற்பூரமாய்


சொல்வதற்கு ஏதுமில்லை
செல்வதற்கும் பாதையில்லை
காற்றில் கரைகிறேன்
கற்பூரமாய்
உன் புன்னகையின்
வாசமேந்தி..