Saturday, October 31, 2009

மீட்பு..

மீட்டப்படாத இசைக்கருவியும்
சூடப்படாத பூவும்
ஒன்றானதல்ல..
நாட்கள் கடந்தபின்னும்
இசைக்கும் இசைக்கருவி..
பூவிற்கோ வாசமும் போய்
சருகு மட்டுமே
எஞ்சியிருக்கும்..

காட்டுப்பூனை..

காட்டுப்பூனைஎன
துரத்தும்
கடந்த காலங்களின்
பிடியிலிருந்து
விடுவித்துக் கொள்ளவே
உன்னை நாடுகிறேன்..
கோரிக்கை ஏற்று
எனக்குமுன்னே
செல்கிறாய்..
வெளிச்சத்தை பரப்பியபடி..

என்ன செய்ய?


நானே உள்நுழையாதபடி
உள்சென்று பூட்டிக் கொண்டாய்..
வெளியேறவும் முடியாமல்
வெளியேற்றவும் இயலாமல்
வேடிக்கை பார்க்கிறேன்..
இன்னும் என்னதான்
செய்யப் போகிறாய் என?

வட்டம்..

உன் வட்டத்திற்குள்
நான் வந்துவிடாமல்
உன்னைச் சுற்றி
ஒரு வட்டத்தை
வரைகிறாய்..
உன்னைச் சுற்றியே
நானும் ஒரு வட்டம்
வரைகிறேன்..
அவரவர் வட்டத்திலிருந்து
பார்க்கிறோம்..
இரண்டிற்கும்
மையம் ஒன்றான வித்தையை...

Friday, October 30, 2009

மழை..

நாம் விடைபெறும்வரை
காத்திருந்து
பின்னர் பெய்த மழையில்
உருவான வாசம்
உன் வீட்டின் எல்லைவரை
நீண்டும்
என் சாலையில் தொடர்ந்தும்
வந்தது
ஒரு நூலின்
முன்பின் பகுதிகளாக..

சந்திப்பின் கடைசி நொடி..

சந்திப்பின்
கடைசி நொடிகளில்
மறைப்பதற்கு
எதுவுமில்லையென
விடைபெறுகிறோம்..
நமது காலடித்தடங்கள்
பேசித் தீர்க்கின்றன
மறைத்த விஷயங்களை..

எழுத்து..


எனது எழுத்துக்களில்
உறங்குகிறேன்..
நீ படித்துவிட்டு
சொல்லவிருக்கும்
சொற்கள்தான்
நித்திரை கலைக்கவோ
நிரந்தர தூக்கத்திற்கோ
இட்டுச் செல்லப் போகிறது..

Thursday, October 29, 2009

இதை தவிர..

வார்த்தைகளைத் தவிர
வேறொன்றும்
என்னிடம் வசீகரமில்லை..
நேசத்தை தவிர
என்னிடம்
அள்ளிக் கொடுக்க ஏதுமில்லை..
உண்மையை தவிர
உனக்கு சொல்வதற்கு
என்னிடம் பொய்களில்லை...
கவிதையை தவிர
உன்னை ஒளித்துவைக்க
எனக்கு மறைவிடம் தெரியவில்லை..

நட்பு..

ஒரு நட்பு
எப்போதும்
நட்பாக மட்டும்
இருப்பதில்லை..
சில நேரங்களில்
துரோகங்களாகவும் மாறும்..

ஒரு நட்பை
எப்போதும்
நட்பாக வைத்திருக்க
முடிவதில்லை..
சில நேரங்களில்
காதலாகவும் மாறும்..

வேர்..

வேறென்ன என
கேட்கும் போதெல்லாம்
என் படைப்பின்
வேர் நீயென
சொல்லத் தோன்றுகிறது..
ஆயினும்
மறைத்து வைக்கிறேன்
வேரோடு நேசிப்பையும்...
அறியாமல்
நாள்தோறும்
நீருற்றிபோகிறாய்
உன் வார்த்தைகளால்..

மையப்புள்ளி..


விடுதலைக்கும்
விலங்கிற்குமான
மையப்புள்ளியில்
சுழல்கிறேன்..
பலமாய் வீசும் காற்று
எந்த விட்டதில் சேர்க்குமோ?

கலைக்கிறேன்..


உன்னிடம் இருக்கும்
கேள்விகளையும்
என்னிடம் இருக்கும்
பதில்களையும்
கலைத்துப் போடுகிறது
காலம்..
பொருத்தும் பணி
நமக்கானது..

Wednesday, October 28, 2009

உன் சிரிப்பினில்..


நீ சிரிப்பதை
சில மின்மினிகள்
விழித்து எழுந்து
பார்த்துவிட்டு
உறங்குகின்றன..
எங்கிருந்து வெளிச்சம்
வந்ததென குழப்பமுற்று..

கண்ணீர்..


உள்ளே கணம்
தாங்காமல் வெளியேறும்
கண்ணீருக்கும்
புரிவதில்லை
அதுவும்
இல்லாவிடில்
எங்கே அடைக்கலம்
கோருவேனென..

இடைவெளி..

உனக்கும்
எனக்குமான
இடைவெளியில்
உறங்கிக் கிடக்கிறது
நேசம்..
யார் முதலில்
தட்டி எழுப்புவதென
தயக்கத்தில்
திகைக்கையில்
மழைவந்து நிரப்பி
போகிறது..
அந்த இடைவெளியை..

தாமரைத் தண்டு..


குளித்துக் கொண்டே இருக்கிறாய்..
இதயத்தை சேறாக்கிவிட்டு
அச்சேற்றில் மலரும்
தாமரையின் தண்டு
ஒருநாள் உனக்கு
நீர்கொட்டும்
குழாயாக மாறட்டும்..

பரு..


தழுவப்படாத
கன்னங்களுக்கு
பருக்களை
பற்றி கவலையில்லை..

காற்றுவெளி..


பற்றி எரியட்டும்
உனக்கும்
எனக்குமான
உலவுதளம்..
நமக்கென
இருக்கிறது
காற்றுவெளி..

உறுதியாய்.. ..


முன்னிலும்
மிக உறுதியாகத்தான்
வெளிப்படுத்துகிறேன்..
எனது நேசம்
வலுவிழந்து திரும்புகையில்..

புரிதலின் வடிவம்..

துல்லியமாக
வரையறுத்து
சொல்லிவிடமுடியாதுதான்
இந்த உறவுக்கான பெயரை..

பறைசாற்ற கிடைத்த
ஆயுதத்தை
பதுக்குகிறோம் ..

மாறிக் கொண்டே
இருக்கிறது
இந்த புரிதலின் வடிவம்..

மெழுகுவர்த்தி..

பிரம்மாண்ட
நேசக்கிடங்கென
அறிந்திருக்கவில்லை..
உன்னை...
எரியும் மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில்
ஒளித்து வைத்திருக்கிறாய்
பலநூறு சூரியனை..

உன்னைப் போல் ஒருவன்...

நான் யாரிடமும்
கண்ணுற்றதில்லை
உன்னிடமிருந்து போலான
பாதுகாப்புணர்வை..

கேட்டறிந்ததுமில்லை
உனக்கிருப்பது போலான
தொலைநோக்குப் பார்வையை..

இனி எப்போதும்
மறப்பதற்கில்லை
இதயதசைகளின்
ஒரு துணுக்கிலிருந்தும்..

இசையின் வடிவம்..

உனது குரல்
ஊடுருவியது
உருக மறுத்த
பாறையின் ஆழத்தில் ..

எதிரொலிக்கிறது
இசையின் பிறிதொரு
வடிவமாய்..
நீ பேசும்தோறும்..

இதயம்..

இதயங்களைத்
தூக்கி எறிபவர்களின்
இதயமும்
ஒருநாள் தூக்கியெறியப்படும்...
அப்போதெழும்
முனகலின் வலி
தூக்கியெறியப்பட்ட
இதயங்களின்
கதவுகளைத் தட்டியபடியிருக்கும்..

உன் வரவு..


வெறிச்சோடியிருந்த
என் இரவுகளை
வெளிச்சமாக்கி
விடியலில் மறைகிறாய்..

பகலில் அங்குமிங்கும்
தேடி அலுத்துத் திரும்புமெனக்கு
மீண்டும் இரவில்
தரிசனம் தருகிறாய்..

சபிக்கப்பட்ட நொடிகளை
வாரமாக்கியும்
வரமான நாட்களை
சபித்தும்
விளையாடுமுனக்கு
தெரிந்துதானிருக்கும்
உன் வரவில்
புதுப்பிக்கப்படுகிறேனென...

Friday, October 16, 2009

சந்திப்பு..

முயலும் போதெல்லாம்
நழுவி போகிறது
சிறு சிறு சந்திப்புகள்..
தானே மனமிறங்கி
நம்மை சந்திக்க வைக்கும்
ஒரு பெரிய சந்திப்பு..
அளவற்ற நேசத்தை
புரிந்துகொள்ளுமது
நம்மிடையே
தங்கிவிடக்கூடும் நிரந்தரமாய்..

சேமிப்பு கிடங்கு..

நீயெனக்கு
ஒருபோதும்
தொல்லையாக முடியாது..
ஏனெனில்
என் பிரியங்களை
உன்னில் சேமித்து
வைத்திருக்கிறேன்..
நீ அவற்றை
செலவழிக்காத போதும்..

குழந்தையென..

எல்லாவற்றையும்
விளையாட்டாக
எடுத்துக் கொள்வதைப் போலவே..
என் கண்ணீரையும்
வலிகளையும் கூட
எடுத்துக் கொள்கிறாய்..
யாரழைத்த போதும்
முகம் காட்டாமல்
தேம்பியழும் அவை
தேற்றுவாரின்றி
குழந்தையென ஓடி ஒளிகிறது
உன் பின்னால்..

கவிதை..

எல்லா தருணங்களிலும்
எனக்குள்ளிருந்து
என்னைச் சுற்றி
நடப்பவற்றை
உற்று நோக்கி
ஒரு கருப்புப்பெட்டியாய்
உண்மையினை
எடுத்தியம்பும்
அதைத் தவிர
யாரிடம் என்னை
எடுத்துரைக்க முடியும்?

பிரியம்...

என் பிரியங்களை
தோட்டத்தின் நடுவில்
புதைத்திருக்கிறேன்..
அவை மண்ணிற்கும்
மண்ணின் மீதுள்ள
புல்லிற்கும்
எந்த வித
சேதாரமுமின்றி
வளர்ந்து கிடக்கிறது..
தாவரப் பெண்ணாய்..

Tuesday, October 13, 2009

என்னில் நீ இலையானாய்..


நீர்த்தேக்கத்தை
சலனப்படுத்த
பாறைகள் தேவையில்லை ..
நீர்ப்பரப்பின்
ஓரமிருக்கும்
மரத்திலிருந்து அல்ல
எங்கோ பறந்து செல்லும்
ஒற்றை இலை போதுமானது

பிறந்த நாள் பரிசு..

உனது
பிறந்த நாளிலாவது
எனது நேசத்தை
வெளிப்படுத்திவிட வேண்டுமென
உனக்கென தயாரித்த
பரிசினை
உனக்களிக்காமல்
பத்திரப்படுத்துகிறேன்..
நிராகரிப்பெனும்
ஆயுதத்தை
நீயேந்தினால்
எனது நேசம்
நிராயுதபாணியாகிவிடுமென..

வலிநீக்கி..


உனது
நினைவுகளின்
அழுத்தம் தாளாமல்
வலியில்
சுருண்டு
விழும் போதெல்லாம்
உட்செலுத்துகிறேன்
உனது நினைவுகளை
வலிநீக்கியாக..

பூக்கள். . .

ஊருக்கு
பூக்களையும்
உனக்கு
என் வேர்களையும்
அறிமுகப்படுத்துகிறேன்
வேரின் சுவாசமான
நீ
கடந்து போகிறாய்..
வேர்களில்
பூக்களைத்தூவி..

இழப்பு..


ஒன்றை
இழந்தால்தான்
அதன் மதிப்பறிய
முடியுமெனில்
என் மதிப்பை
நீயறிய வேண்டாம்..
என்னை இழந்து
நானும் கூட..

நூலாக..


இரு துணிகளை
இணைக்கும்
நூலைப் போலத்தான்
நம் விலகலை
இணைத்திருக்கிறது..
இந்த பிறந்ததினம்
உன் வாழ்த்தெனும்
நூலில்..

Monday, October 12, 2009

இரவுக்குத் துணை

எனது
தூக்கத்தை
உனது நினைவுகளுக்கு
இரவல் கொடுத்துவிட்டு
விழித்திருக்கிறேன்..
இரவுக்குத் துணையாய்..

சாலையாய்..


மழைக்குப்
பிந்திய
சாலையைப் போல
உன்னை
சந்தித்ததற்குப்
பிறகான
என் மனதும்..

சந்திக்க..

இன்றாவது
சந்தித்துவிடுவேன்
என்றுதான்
ஒவ்வொருநாளும்
தயாராகிறேன்..
தட்டிக்கழித்தே போகிறாய்..
நடுநிசியில்
வீட்டிற்குத் திரும்புகிறேன்..
ஏமாற்றங்களை
வாசலில் விட்டுவிட்டு..
எதிர்பார்ப்புகளை
மடித்துத் தலைக்கு
வைத்துவிட்டு
மீண்டும் தயாராகிறேன்..
நாளையேனும்
உன்னை சந்திப்பேனென..

காதலின் பெயரால்..

எல்லாம் வல்ல
காதலின் பெயரால்
அந்த கனியைக் கொடுத்தேன்..
நீ தின்று தீர்த்து
தூக்கி எறிந்தாய்..
இன்னொரு கனியைக்
கையில் வைத்தபடி..

மீண்டும் விதையாக
மண்ணில் கிடக்கிறேன்
முளைவிட..

ஒளியும்.. இருளும்..

கனவுதானெனினும்
வாழப் பிடிக்கிறது..
அதன் இருள் பூசிய
தூரிகைகளில்...
நனவுதானெனினும்
தப்பிக்க முயற்சிக்கிறேன்..
அதன் ஒளி கக்கிய பிடிகளில்..

விழிப்பும்.. உறக்கமும்.


இரவில் விழித்துக் கொள்ளும்
இதயமும்
பகலில் உறங்கிப் போகும்
மூளையும்
மறைத்து வைத்திருக்கின்றன..
ஆபத்துகளை..

இரவு..


அந்த இரவில்
நீ வரமாட்டாயென்பதை
அடுத்த இரவு
வரை
சொல்லவே இல்லை..

Friday, October 09, 2009

கண்ணீர்..


இந்த கண்ணீர்
துளிகளுக்கு
மாற்றாக
உங்களால்
ஒரு சொல்லைக்
கூட விதைக்க முடியாது..

Thursday, October 08, 2009

மூர்ச்சை..

இறந்து போய்விட்டேனென கருதி
இடுகாட்டுக்கு எடுத்துப்
போய்விடாதே..
உன் மீதான
அளவற்ற காதலாலும்
நீ காட்டும் அக்கறையினாலும்
மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன்..
சிறிது நேரம் கழித்து
நெற்றிமுடி கோதி மலர்த்து..
மலருவேன் மணம் பரப்பி..

தூது..


நீயேற்றுக் கொள்ளாமல்
போனாலும்
என் காதலை என்னிடம்
பத்திரமாகத் திருப்பித் தர
எதை / யாரை தூதனுப்ப?

அனுமதிக்கிறேன்..

அவ்வப்போது
இருசக்கர வாகனங்களில்
மகிழுந்துகளில்
பேருந்துகளில்
சில நேரங்களில்
நடந்தபடி
பின் தொடர்கிறாய்
என்னை அடைய..
கேட்டுக் கொள் மரணமே
என்னை நேசிக்க
யாருமில்லாத போது
நீயென்னை
நேசிக்க அனுமதி தருகிறேன்..

Wednesday, October 07, 2009

பனிப்போர்..

கோபமாய்
ஒரு மின்னஞ்சலோ
குதூகலமாய்
ஒரு குருஞ்செய்தியோ
அனுப்ப வேண்டாம்..
தவறியாவது
ஒரு துண்டித்த அழைப்பை செய்..
இந்த பனிப்போருக்கு
முடிவு கட்டி விடலாம்..

காதல் தவிர..


காதலைத் தவிர
உனக்குக் கொடுக்க
என்னிடம் யாதொன்றுமில்லை..
எனக்கு தர
உன்னிடம் அது கூட இல்லை..


மௌனம்..

மௌனத்தைக்
கேடயமாக
பயன்படுத்துவதாய்
பெருமை கொள்ளாதே..
அது எனக்கெதிராக
நீயேந்தும் ஆயுதம்..
மௌனத்தை புதை..
வார்த்தைகளை விதை..
முளைவிடட்டும்
மீண்டும்
கலகலப்பும் கவிதையும்..