Wednesday, February 24, 2010

நீயின்றி

நீ தாமதமாய்
திரும்பும் போதெல்லாம்
நான் தூங்கி விட்டேனா
என்றே கவனிக்கிறாய்
உனக்கு புரிவதில்லை
என் இமையே
நீயின்றி
விழியுறங்குவது எப்படியென?

எதிர் வீட்டுக் குழந்தை

எதிர் வீட்டுக் குழந்தை
என்னிடமிருந்து
தினமும்
ஒரு கையசைப்பையும்
ஒரு முத்தத்தையும்
பெற்று விடுகிறது
எந்த ஒரு தயக்கமும்
தடையும் இன்றி
நானும்
எதிர் வீட்டுக் குழந்தையாய்
பிறந்திருக்கலாம்
உனக்கு..

Friday, February 19, 2010

சில விருப்பங்கள்

என் காலுக்கான செருப்பு 
அழகானதா? 
பொருத்தமானதா? 
என்பதை விடவும் 
எனக்கு பிடித்தமனதா? 
என அறியும் உனக்கு 
தெரியாமலா போய் விடும்? 
எனது இன்னும் 
சில விருப்பங்கள் 

நறுமணம்

பரிசோதனை செய்யப்பட 
பல வாசனை திரவியங்களின் 
கலவைகளும் 
இருவரின் கைகளிலும் 
நறுமணம் வீசுகிறது.. 
நேரம் கடந்த பின்னும் 
இனி அதில் மிச்சமிருக்கப் போவது 
உனக்கு என் வாசமும் 
எனக்கு உன் வாசமும்.. 

Wednesday, February 17, 2010

மீட்டெடு

உன் தொடர்பிலிருந்து
துண்டிக்கப்படும் போது
என் பூமியின்
ஈர்ப்புவிசை
ஒழுங்கற்றதாகிறது..

என் கடலின் அலைகள்
கரைகளால்
விழுங்கப்படுகிறது..

என் அமைதியை
சிதறடிக்கிறது
மீட்டெடு
யாவற்றிலுமிருந்து
காத்திருக்கிறேன்
யுகம் யுகமாய்
உன் வருகைக்காக..

காற்றில் கலவாமலே

விலகிச் செல்வதின்
கணம் தாங்காமல்
அலையுறும் மனதின்
ஆற்றாமையைக்
கண்ணுறாமல் நகர்கிறாய்

மீண்டும் வெளியேற
எத்தனிக்கும் சொற்கள்
காற்றில் கலவாமலே
கரைந்து விடுகிறதென்
வெப்பத் தாக்குதலில்

சில சமயங்களில்
குழந்தையென புரண்டழுவதும்
சில சமயங்களில்
கட்டளையிடும் தொனியிலும்
வெளிப்படுமென் சொற்களில்
ஆங்காங்கே தூவியிருக்கிறேன்
உன் மீதான நேசத்தை..

நீயேயறியாத தருணத்தில்
உனக்குள் விழுந்து கிடக்குமது
உன் பார்வையின்
வழி கசிகிறது
நான் எதிர்படுகையில்..

Tuesday, February 16, 2010

அலையும் சுவாசம்

என் சுவாசம் வெளியேறுகிறது
உன்னைத் தேடி
நீ உள்ளே ஒளிந்து கொள்கிறாய்
சுவாசம் உள்ளே நுழைகிறது
நீ வெளியே ஓடி மறைகிறாய்
வெளியேறியும்
உள்ளிறங்கியும்
அலையும் சுவாசம்
உன்னைக் காண இயலாமல்
திரும்புகிறது
தன் கூட்டிற்கு
வெற்றுடம்புடன்...

இரவுகளைத் தவிர.

காதலர் தினத்தில்
உனக்கு பரிசளிக்க
என்னிடம் யாதுமில்லை
என் இரவுகளைத் தவிர..

துணை

கடற்கரையிலிருந்து
கடைசியாக வெளியேறிய நம்மை
வழிமறித்த அலை கெஞ்சியது..
அடுத்த அலை வரும் வரை
துணையிருக்கச் சொல்லி..
அலைக்குத் துணையாக
பேசியபடியிருந்தபோதில்
நமக்கு துணையாக
வந்தமர்ந்தது
காதல்...

Saturday, February 13, 2010

வரம்


உன் மடியில் 
மரணிக்கும் 
வரம் தருவாய்
உன் விழிகளில் 
வாழ்கிற 
வரமின்றி போனாலும்..

Thursday, February 11, 2010

பலம்

என் பலமெல்லாம்
நீயாயிருக்க
எனக்கு அவசியமில்லை
பிற பலமும்
பிரபலமும்

கவிதை

எனது
எல்லா எழுத்துக்களிலும்
கவிதையைப் பார்க்கிறாய்
எனது
எல்லா கவிதையிலும்
காதலை வைத்திருக்கிறேன்

உன் சிரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு
வெளியாகும் அத்தனை
வார, மாத இதழ்களிலும்
காதல் கவிதைகளாக
வெளியாக என்னையும்
அனுப்பச் சொல்கிறாய்

உன்னைத் தவிர
வேறு யாருக்கும்
என் கவிதைகளைத் தர
விரும்புவதில்லை என்றேன்
ஏதோ புரிந்ததாய் சிரித்தாய்
என் கவிதையை விட ரசமானது
உன் சிரிப்பு

Wednesday, February 10, 2010

துணையாய்

என் வீடு வரை 
துணையாய் வந்தாய்
உன் வீடு வரை 
துணையாய் வந்தேன்
இருவரும் தனித்தனியாய்
வீடு திரும்ப 
துணையாய் வந்தது காதல்

Thursday, February 04, 2010

ஆதரவு

தலையனையின்றி
உறங்கும்
என் நேசத்திற்கு
என் கைகளும்
கவிதைகளுமே
ஆதரவு..

என் கவிதை

ஒழுங்காக மூடப்படாத
குழாயிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரா என் கவிதை?
இறுக்கி மூடியும்
கண்களிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரே என் கவிதை.

Wednesday, February 03, 2010

காதலை மறைத்து

இந்த உலகில்
யாவற்றையும் விடவும்
கடினமானது
காதலை மறைத்து
இயங்குவது..
எல்லாவற்றையும் விட
வலியானது
காதலுற்றவரிடமே
அதை சொல்லமுடியாமல்
தவிப்பது..  

தக்கை

ஐம்புலன்களும் 
தப்பிக்க 
வழியற்று 
தத்தளிக்கிறது
அலையில் விழுந்த
தக்கையாய்
நீ அருகிருக்கையில்..

கரை

எழும்புவதும்
அடங்குவதுமாய்
என் வார்த்தைகள்
உன் கரை தொடாமலே
திரும்புகின்றன
ஒவ்வொருமுறையும்..

கடினம்

காதல் செய்வதா கடினம்?
அதை சொல்வதா கடினம்?
உண்மையாய்
காதல் செய்வது கடினம்..
அதை உரியவரிடம்
சொல்வது அதைவிட கடினம்..

Monday, February 01, 2010

யாரோ ஒருவர்

"உங்களுக்காக
யாரோ ஒருவர் 
எங்கேயோ காத்திருக்கிறார்.. 
அவர்களைத் தொடர்பு கொள்ள..."
இணையம் சொல்லும் வரிகளை 
பின்தொடர்ந்து செல்கிறாய்..
உனக்காக 
உன்னருகில் 
நான் காத்திருப்பதை 
அறியாமல்.. 

கண் வலை

யார் வலையிலோ
சிக்கிய மீனை விடுவித்து 
வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாய்.. 
உன் கண் வலையில்
சிக்கி ஊசலாடும் 
என்னை எப்போது 
விடுவிக்கப் போகிறாய்? 

புது திசை

மென் ஒளியில் 
கரைந்தொழுகும் 
என் இரவினை 
வண்ணமாகவும் 
வாசமாகவும் 
மாற்றிட 
சிறு தூரிகையும்..
ஒரு மலரும் 
தந்தாய்.. 

உன்னையே இரவாக 
சித்தரித்தேன்.. 
என்னையே இருளாக 
கத்தரித்தேன் 

விடியல் கண்டது
ஒரு புது இசையை..
விழிகள் கண்டது 
ஒரு புது திசையை .. 

ஒற்றை ஞாயிறு


மாதத்தில் 
எப்போதாவது 
ஒய்வு கிடைக்கும் 
ஒற்றை ஞாயிற்றுக்கிழமையிலும் 
சந்திக்க முடியவில்லை .. 
உடல் வலியோடு 
மன வழியும் 
சேர்ந்து கொள்ள 
அடுத்து ஒய்வாகும்
ஞாயிறுக்காக 
ஆயத்தமாகிறேன்.. 
வலிமறந்து இப்போதிருந்தே.. 

கைப்பேசி

இத்தனை நாளாய்
இம்சித்து வந்த
உன் கைப்பேசியை
மாற்றி விட்டாயென
சந்தோசப்படுவதா?
அதனால் உன் குரல் மாறி
போனதற்கு
வருத்தப்படுவதா?

இன்றிரவு

உறங்கும் முன்
நான் கேட்டு சிலிர்த்துப் போகும்
உன் குரல்தானே
இன்றிரவு
என் உறக்கத்தைப்
பறித்துப் போனது..

என் வார்த்தை

ஒரு மழலைப் போல
விளையாடி
ஒரு மழையைப் போல
உறவாடிய
நீதானா பேசினாய்?
உன் குரலால்
என் வார்த்தைகளை..

இரவின் கைப்பிடி

நமக்கிடையேயான
அத்தனை
இரகசிய வார்த்தைகளையும்
நீ சொன்ன போதும்
உன் குரல் மாறிய
இரகசியம் மட்டும்
பிடிபடாமல்
அல்லாடுகிறேன்..
இரவின் கைப்பிடிக்குள்
சிக்குண்டு..

என்ன செய்ய

உன் விரலும்
உன் குரலும்
பேசியதில் தானே
நம் நெருக்கமும்
நேசமும் இறுகியது..
இன்றுன் குரல் மாற்றத்தால்
என் இதயமும் மருகியது
இமைகளும் உருகியது
என்ன செய்ய போகிறாய்?

உன் குரல்

நம் சந்திப்பின் மூலமும் 
என் நேசிப்பின்
ஆழம் கூடியதும் 
என் நெஞ்சிற்குள் 
வேர் கொண்டதும் 
என் கண்களின் 
நீர் துடைத்ததும் 
இன்றென்னை 
தவிக்க வைத்ததும் 
உன் குரல் தானே 
நம்புகிறேன் நீதானென..
ஆயினும் இதயம் 
வெம்புகிறதே 
என் செய்வேன் சொல்லடா? 

நிலவு

முன்னெப்போதையும் விட
பிரகாசமானது
இன்றைய நிலவென்றாய்
உன் கண் சிந்தும்
புன்னகையை விடவா?

ஒரே அறை

தனித்தனியாக
தமனி சிறை
வலது இடது
என்றிருந்த
நான்கறைகளிலும்
ஒருவரே வசித்திருப்பதால்
அறைகளை பிரித்திருந்த
சுவர்களை இடித்து
ஒரே அறையாக்கிவிட்டேன்..
இனி உலவித்திரியலாம்
வெளியெங்கும்
தடைகளின்றி..

காய்ச்சல்

காய்ச்சலடிப்பதால்
சந்திக்க
வரமுடியாதென்றாய்..
நீ
வராததால்
வந்துவிட்டது
எனக்கும் காய்ச்சல்

இதயம்.

காய்ச்சலில்
உடல் சூட்டால்
அவதிப் படுகிறாயென
அறிந்ததிலிருந்து
கொதித்துக் கிடக்கிறதென்
அறைகளற்ற இதயம்..

ஒற்றை வார்த்தை

உன் இதழில் மலரும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் உதிர்க்கிறேன்
ஆயிரமாயிரம்
சொற் பூக்களை.. 

கனவு

சாட்சிகள் ஏதுமில்லை
என் இரகசிய
வார்த்தைகளுக்கு..
அதனூடான அர்த்தங்களுக்கு
காட்சிகள் தொலைந்த பின்னும்..
ஏந்தி நிற்கிறேன்
சிந்திய கனவுகளை சேகரித்து
பொங்கி நிற்கும்
கண்ணீரை உள்விழுங்கி

தலையணை

கவனிப்பாரற்ற நிலையில்
இயங்கும்
உடலும் மனமும்
சோர்வுற்று
தடுமாறும் நேரங்களில்
கண்ணீரை ஏனும் தனக்குள்
உறுஞ்சிக் கொள்கிறதென்
தலையணை
தலைவனைப்போல்..

எடை

சாய்ந்தழ
ஒரு தோளுக்காகவும்
தலை சாய்த்தழ
ஒரு மடிக்காகவும்
ஏங்கும் கண்ணீர்த் துளிகளின்
எடை
அனைத்து துயரங்களின்
எடையை விடவும்
கூடுதலானது..