Saturday, May 15, 2010

காட்சிப் பிழையாய்


காட்சிப் பிழையாய் 
நகருமென் கணங்களில் 
சரியாய் பொருந்தியிருக்கிறாய்..

எங்கெங்கு காணினும் 
நீயே தோன்றுகிறாய்..

குறைந்த தூர, நீண்ட தூர பயணத்தில்
பேருந்திற்காக காத்திருக்கையில்
பேருந்தில் ஜன்னலோரத்தில் தலைசாய்க்கையில்
எங்கேனும் மண்வாசம் உணருகையில்

திடீரென மழை நனைக்கையில்
கொளுத்தும் வெயிலில் மரநிழல் எதிர்ப்படுகையில்
முடியைக் கலைக்கும் ஜன்னல் காற்றில்
குழந்தைகளுடன் குதூகலிக்கையில்

சொந்தங்கள் பலவும் பேசுகையில்
நண்பனின் திருமணத்தில்
தூரத்து உறவினரின் இரங்கலில்
பாட்டியென் கைபற்றி பேசிய கணங்களில்

பசி வயிற்றைக் கிள்ளியெறியும் போதில்
வயிறு நிரம்பியிருக்கும் வேளைகளில்
அலுவலக வேலை நேரங்களில்
அமைதியை நாடும் தனிமையில்

மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்கையில்
அதுனூடாக இரகசிய வார்த்தைகளை இடுகையில்
மெல்லிசையில் மனம் லயிக்கையில்
குறுஞ்செய்தி வருகயில் எழும் ஒலியில்

தொலைபேசி அழைப்பு வருகையில்
சிக்னலில் பரபரக்கையில்
படுக்கையில் ஓய்வெடுக்கையில்
நாளிதழ்கள் வாசிக்கையில்

கவிதைகள் படிக்கையில் 
கனவுகளை நினைக்கையில்
எண்ணங்களை சொல்கையில்
ஏக்கங்கள் எழுதுகையில்
துயரம் மேலிட அழுகையில் 

மகிழ்ச்சி எட்டிப்பார்க்கையில்
படுவேகத்தில் நிதானிக்கையில்
ரசனை மிகுகையில்
காலை எழுமுன் உருண்டு புரள்கையில்

இரவு நித்திரையில் வீழ்கையில்
இதயம் துடிக்கும் தோறும்
இமைகள் மூடியிருக்கும் போதும்
வாழ்தலின் தூண்டுதலிலும்

மரணத்தின் விளிம்பிலும்
எங்கெங்கு காணினும்
காட்சிப் பிழையாய்
சரியாய் பொருந்தியிருக்கிறாய்!

No comments: