மீட்டப்படாத இசைக்கருவியும் சூடப்படாத பூவும் ஒன்றானதல்ல.. நாட்கள் கடந்தபின்னும் இசைக்கும் இசைக்கருவி.. பூவிற்கோ வாசமும் போய் சருகு மட்டுமே எஞ்சியிருக்கும்..
காட்டுப்பூனைஎன துரத்தும் கடந்த காலங்களின் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளவே உன்னை நாடுகிறேன்.. கோரிக்கை ஏற்று எனக்குமுன்னே செல்கிறாய்.. வெளிச்சத்தை பரப்பியபடி..
உன் வட்டத்திற்குள் நான் வந்துவிடாமல் உன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைகிறாய்.. உன்னைச் சுற்றியே நானும் ஒரு வட்டம் வரைகிறேன்.. அவரவர் வட்டத்திலிருந்து பார்க்கிறோம்.. இரண்டிற்கும் மையம் ஒன்றான வித்தையை...
நாம் விடைபெறும்வரை காத்திருந்து பின்னர் பெய்த மழையில் உருவான வாசம் உன் வீட்டின் எல்லைவரை நீண்டும் என் சாலையில் தொடர்ந்தும் வந்தது ஒரு நூலின் முன்பின் பகுதிகளாக..
வார்த்தைகளைத் தவிர வேறொன்றும் என்னிடம் வசீகரமில்லை.. நேசத்தை தவிர என்னிடம் அள்ளிக் கொடுக்க ஏதுமில்லை.. உண்மையை தவிர உனக்கு சொல்வதற்கு என்னிடம் பொய்களில்லை... கவிதையை தவிர உன்னை ஒளித்துவைக்க எனக்கு மறைவிடம் தெரியவில்லை..
வேறென்ன என கேட்கும் போதெல்லாம் என் படைப்பின் வேர் நீயென சொல்லத் தோன்றுகிறது.. ஆயினும் மறைத்து வைக்கிறேன் வேரோடு நேசிப்பையும்... அறியாமல் நாள்தோறும் நீருற்றிபோகிறாய் உன் வார்த்தைகளால்..
உனக்கும் எனக்குமான இடைவெளியில் உறங்கிக் கிடக்கிறது நேசம்.. யார் முதலில் தட்டி எழுப்புவதென தயக்கத்தில் திகைக்கையில் மழைவந்து நிரப்பி போகிறது.. அந்த இடைவெளியை..
முயலும் போதெல்லாம் நழுவி போகிறது சிறு சிறு சந்திப்புகள்.. தானே மனமிறங்கி நம்மை சந்திக்க வைக்கும் ஒரு பெரிய சந்திப்பு.. அளவற்ற நேசத்தை புரிந்துகொள்ளுமது நம்மிடையே தங்கிவிடக்கூடும் நிரந்தரமாய்..
எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வதைப் போலவே.. என் கண்ணீரையும் வலிகளையும் கூட எடுத்துக் கொள்கிறாய்.. யாரழைத்த போதும் முகம் காட்டாமல் தேம்பியழும் அவை தேற்றுவாரின்றி குழந்தையென ஓடி ஒளிகிறது உன் பின்னால்..
எல்லா தருணங்களிலும் எனக்குள்ளிருந்து என்னைச் சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கி ஒரு கருப்புப்பெட்டியாய் உண்மையினை எடுத்தியம்பும் அதைத் தவிர யாரிடம் என்னை எடுத்துரைக்க முடியும்?
என் பிரியங்களை தோட்டத்தின் நடுவில் புதைத்திருக்கிறேன்.. அவை மண்ணிற்கும் மண்ணின் மீதுள்ள புல்லிற்கும் எந்த வித சேதாரமுமின்றி வளர்ந்து கிடக்கிறது.. தாவரப் பெண்ணாய்..
உனது பிறந்த நாளிலாவது எனது நேசத்தை வெளிப்படுத்திவிட வேண்டுமென உனக்கென தயாரித்த பரிசினை உனக்களிக்காமல் பத்திரப்படுத்துகிறேன்.. நிராகரிப்பெனும் ஆயுதத்தை நீயேந்தினால் எனது நேசம் நிராயுதபாணியாகிவிடுமென..
இறந்து போய்விட்டேனென கருதி இடுகாட்டுக்கு எடுத்துப் போய்விடாதே.. உன் மீதான அளவற்ற காதலாலும் நீ காட்டும் அக்கறையினாலும் மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன்.. சிறிது நேரம் கழித்து நெற்றிமுடி கோதி மலர்த்து.. மலருவேன் மணம் பரப்பி..
அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் மகிழுந்துகளில் பேருந்துகளில் சில நேரங்களில் நடந்தபடி பின் தொடர்கிறாய் என்னை அடைய.. கேட்டுக் கொள் மரணமே என்னை நேசிக்க யாருமில்லாத போது நீயென்னை நேசிக்க அனுமதி தருகிறேன்..
கோபமாய் ஒரு மின்னஞ்சலோ குதூகலமாய் ஒரு குருஞ்செய்தியோ அனுப்ப வேண்டாம்.. தவறியாவது ஒரு துண்டித்த அழைப்பை செய்.. இந்த பனிப்போருக்கு முடிவு கட்டி விடலாம்..