நீ கண்ணை மூடி
யோசிக்கும் போது
உனக்கு இதம் தருபவை
எதுவென்று கேட்டேன்..
இரவு வானம்
இரு கைகள் கோர்க்கும் ஸ்பரிசம்
ஆட்டுக்குட்டிகள்
புத்தகங்கள்
தூவானம்
எங்கிருந்தோ
வருடிப்போகும் இசை..
இப்படி சொல்லி போனாய்..
எனக்கு உன் வார்த்தைகளைத் தவிர
வேறெதுவும் இதம் தருவதில்லை..
நான் காணாது போனால்
எவ்வளவு நேரத்திற்கு
பின் என்னை தேடுவாய்?
உன் குறுஞ்செய்திக்கு
என்னிடமிருந்து பதில்
வராவிடில்
எவ்வளவு நேரத்தில்
அழைப்பாய் ?
நீ அழைத்து
பதில் வராவிடில்
உன் அடுத்தகட்ட
நடவடிக்கை என்ன?
இந்த கேள்விக்கெல்லாம்
பதில் கிடைத்துவிட்டது இன்று..
இனி நீ உன் வேலையை பார்க்கலாம்..
உன்னைப் பார்க்க
வேண்டுமானால்
புகைப்படம் இருக்கிறது..
நீ இதுவரை பேசிய
அனைத்தும் எனக்குள்
உறைந்திருக்கிறது...
நீ அனுப்பிய
உன் எண்ணங்கள்
என் குறுஞ்செய்தி
பெட்டியில் சேகரமாயிருக்கிறது
பின் உன்னிடம்
பேச என்ன இருக்கிறது?
என்றுதானே என்ன தோன்றுகிறது?
அதற்குமொரு காரணம் இருக்கிறது..
உன் குரல் கேட்டுதான்
என் இமை திறப்பு மாறுபடும்..
பரம்பரை அறிந்த டார்வின்.. புன்னகையை மீட்டெடுக்கிற டாவின்சி.. மொழிகளின் மூலமறியும் கால்டுவெல்.. பயணத்தை ஊக்கப்படுத்துகிற சாங்கிருத்தியன் புரட்சிகள் பேசும் பாரதிதாசன்... இவர்கள் ஒரு தராசிலும் நீயொரு தராசிலும் பூமியின் மையப்பகுதி அசைவற்று நிற்கிறது..
பின்னிரவில் பிரயோகித்த அனைத்து ஆயுதங்களும் வலுவிழந்து திரும்ப நிராயுதபாணியானாய்... உன் ஆற்றாமை கண்டு வலுவிழந்த ஆயுதங்கள் மொத்தமாய் எனைத்தாக்க மீண்டெழுந்தேன்.. நானுமோர் ஆயுதமாய் உனக்கு வலு சேர்க்க..
'காதலைச் சொல்வதற்கு சில வழிகள்' என்ற புத்தகத்தை புரட்டாமல் பார்த்துவிட்டு நகர்ந்தாய் நானும் அவ்வாறே செய்தேன்.. அதுவே நம் காதலைச் சொன்ன வழிகளில் ஒன்றாயிற்று..
தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் நேரங்களில் இதயத்தின் அறைகளில் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் உலவும் விவாதங்களை முடிவுக்கு கொண்டுவருகிறதுன் அழைப்பு..