Friday, February 17, 2012

பிரியங்களின் அந்தாதி


அதீத பிரியங்களின் பொருட்டு
எழுகிற சிறு சிறு சண்டைகளில்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

அதீத கோபங்களில் பொருட்டு
எறியப்படும் வார்த்தைகள் வடிந்தபின்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

அதீத எச்சரிக்கையின் பொருட்டு
உருவாகிற தவறுகளின்
தடயங்கள் மறைந்தபின்
மீதம் இருக்கிறது அதே பிரியம்

பிரியத்தை அழித்து
மீள் உருவாக்கம் செய்யும் போதும்
பிரியத்தை பிரியத்தால்
துரத்தும் போதும்
சிந்துகிறது ஓராயிரம் பிரியங்கள்

பிரியம் தொலைக்கப்பட்டு
மீண்டும் கிடைக்கும் போதும்
பிரியம் புதைக்கப்பட்டு
மீண்டும் வளரும் போதும்
உருவாகிறது ஆயிரமாயிரம் பிரியங்கள்

பிரியத்தை பிரியத்தைக் கொண்டே
அறுக்க முடியும்
வைரத்தைப் போல
பிரியத்தை பிரியத்தைக் கொண்டே
உருவாக்க முடியும்
தண்ணீரைப் போல
------------

தண்ணீரைப் போல
பிரியங்கள் எல்லா நூல் இழைகளிலும்
ஊடுருவி தனக்கான இயங்குதளத்தை
வடிவமைத்துக் கொள்கிறது

தண்ணீரைப் போல
எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது
தண்ணீரைப் போல சலனமடைகிறது
தண்ணீரைக் குடிப்பது போல
யாராவது ஒருவர் பிரியத்தைக் காலிசெய்துவிடுகின்றனர்
தண்ணீரைப் போல மூழ்கடித்துவிடுகிறது சில பிரியம்

தண்ணீரைப் போல இடம் பொருள் ஏவலுக்குத் தகுந்தபடி
தன்னை மாற்றிக் கொள்கிறது பிரியம்
பிரியங்கள் மாறும் போதும்
தாகம் தணிக்கத்தான் செய்கிறது சிலவகை தண்ணீர்
தண்ணீரின் குணம் மாறும்போதும்
மாறாமலிருக்கிறது சிலவகை பிரியம்

---------------

பிரியம் கொண்ட மனதின் மகிழ்வுகளும்
பிரிந்து கொண்ட மனதின் வலிகளும்
பிரியம் கொண்ட ஒரு மனதால்தான்
புரிந்துகொள்ளப்படும்

பிரியம் கொள்ளுமுன் யாரும்
பிரிவோம் என்று நினைப்பதில்லை
பிரிந்தபின் யாரும் பிரியமில்லை
என்று மறுப்பதில்லை

நம்பிக்கையால் துளிர்க்கும் பிரியம்
ஒருபோதும் வெட்டப்படுவதில்லை
துரோகத்தால் வெட்டப்படும் பிரியம் மட்டும்
எப்போதும் துளிர்ப்பதில்லை

பிரியத்தின் எதிரி பெரும்பாலும்
பிரியங்களின் சாயல் கொண்டவை..

பிரியத்தின் நிழலில்
உறங்குவதற்கும்
இளைப்பாறுவதற்கும்
காத்துக்கிடக்கின்றன
ஏராளமான இதயங்கள்

-----------------------

இதயங்கள் பலவகைப்படும்
இரக்கமுள்ள இதயம்
எதையும் தாங்கும் இதயம்
வலியுள்ள இதயம்
இவையாவற்றுக்கும் மாறான இதயம்
இப்படி...

அவையாவும் அப்படியாவதற்கு
காரணம் ஒன்றே
அதீத பிரியம்..

1 comment:

Unknown said...

பிரமாதம். வரிகள் வைரங்கள். வரவேற்கின்றேன்
www.negamafazan.blogspot.com