Wednesday, September 30, 2009

உனக்கான மழை..


நீ வருவாயென
நெடுநேரம்
காத்திருந்து கரைந்ததில்
நீ வரமுடியாதென
தெரிவித்த மறு நொடியில்
மழை வந்து
அழைத்துப்போனது
வீட்டிற்கு..

மழைத்துளி...

மழைத்துளியில்
நனைய வருகிறாயாவென
கேட்டதற்கு
நீ சரியென
தலையசைத்தத்தில்
பெருகி ஆறாக
வழிந்தோடியது..
நம்மிலிருந்து
பெரு மழைக்கான விதை..

ஈடுகட்ட..

இந்த இரவினை
உயிர்ப்புடன் அணுக
கற்றுத் தரும்
உனக்கு
என்ன வழங்கி
அதை ஈடுகட்ட...
என் வெளிகளில்
உலவ உன்னை
அனுமதிப்பதை தவிர..

வசந்தமாய்..

இல்லையென்று
ஒரு போதும் சொல்லிவிடாதே..
எப்போதாவது
ஆமென்று சொல்லும்
அந்த ஒற்றை
வார்த்தையை
எதிர்பார்த்தே
என் வாழ்நாள்
வசந்தமாக கழியட்டும்..

இரகசியம்..

உன்னிடம்
மறைப்பதற்கு
சில விஷயங்கள்
இருப்பது போல
என்னிடமும்..

நாம் பேசிக்கொள்ளும்
தருணங்களில்
ரகசியங்கள் வெளியேறி
நலம் விசாரித்துக்
கொள்கின்றன ஒன்றையொன்று..

முடிவிலி..


இத்துடன் முடிக்கலாம்
என்றுதான் தொடங்குகிறோம்..
ஒற்றையடி பாதையைப் போல்
அது முடிவிலியாய்
நீளுகிறது..

Tuesday, September 29, 2009

காதலின் வெளியில்..

உன் மீதான
நேசத்தை
எங்கே ஒளித்து வைப்பதென
தெரியாமல்
தற்காலிகமாக
கவிதைகளில் ஒளித்து
வைத்திருக்கிறேன்..
அதை
நீ கண்டுபிடிக்கும் பொழுதுகளில்
அது சிறகடிக்கும்
காதலின் வெளியில்...

Saturday, September 26, 2009

மனமிறங்கு ..

என் கண்கள்
அணை உடைத்துக்
கொண்டது மிதக்கிறேன்
அதன் ஆழத்தில்..

கொஞ்சம் மனமிறங்கி
பார்வை செலுத்து
அதன் வெப்பத்தில்
மீண்டெழுவேன்..

உன் வழி நோக்கி..


கடந்த கால
பயணங்களில்
பழுதான மனச்சாலையை
கடக்கும் பயணிகளில்
ஒருவனாய் இல்லாமல்
செப்பனிடுகிறாய்..

சீரனபின்னே
செல்லுமுன் வழி நோக்கி
பின் தொடருமிந்த சாலை..

இரவின் நிகழ்தகவு..

ஏதும் நிகழ மறுத்த இரவில்..
எல்லாம் நிகழ்ந்ததாக..
எண்ணுகிற மனம்
எல்லாம் நிகழ்ந்த இரவில்
ஏதும் நிகழாததாக
ஏங்கும்..
இது இரவின் நிகழ்தகவு..

உன்னில்..


உன்னில்
என்னை இனம்கண்ட
போதுதான்
அந்த விதைக்கு
நீருற்ற ஆரம்பித்தேன்..

Monday, September 21, 2009

திரும்பி போக முயற்சிக்கிறேன்..

உன் சிரிப்பிலும்
நல் வார்த்தைகளிலும்
தெரித்தஎன் மீதான
உனது அக்கறை
கூடுதலாக
உரிமை எடுக்கத்
தூண்டியிருக்கலாம்..
அவை
ஒரு காகத்திடமும்
சிற்றேறும்பிடமும்
கூட ஏற்படலாம்..
அதை அதீத உரிமையாகவும் ..
ஒரு உறவின் துவக்கமாகவும்
நினைத்துக் கொண்டது
எனது புரிதலின் குறைபாடு..
வந்த வழியே
திரும்பி போக முயற்சிக்கிறேன்..
சற்று
ஆசுவாசப்படுத்த
அனுமதி போதும்..

மகரந்தத் துகள்கள்..


உனக்களித்த வார்த்தைகள்
தீயினால் ஆனவை அல்ல..
மகரந்தத் துகள்களாலானவை..
நீ புன்னகைத்தால்
ஒட்டி கொள்ளும்..
நீ திரும்பிக் கொண்டால்
அவை காற்றில்
தன்னை கரைத்துக் கொள்ளும்..

இரவு நேர துடிப்புகள்

எனது
தவிப்பிலும்
துடிப்பிலும்
இளைப்பாறுகிறாய்...
ஒரு மாறுதலுக்காக
சில துளி
அக்கறையை
பரிசளித்தாய்..
அதற்காகவே
இந்த நேர துடிப்புகளை
உனக்கு விருந்தளிக்கிறேன்...

Thursday, September 17, 2009

மரணம் வரும் சுவடு..

மரணம்
இளைப்பாறிச் சென்றதற்கான
அறிகுறிகளை
வழிநெடுகும் காண முடிந்தது..

நேற்று இரவில்
கையசைத்து புன்னகையும்
தூவிச் சென்ற
கீழ்வீட்டுக் குழந்தை
அசைவற்று
உதடுபிரியா புன்னகையுடன்
கிடத்தப்பட்டிருக்கிறது..

போனவாரம்
நேர்காணலுக்காகச்
சந்தித்த எழுத்தாளர்
உடல்நலக்குறைவால்
உயிர்விட்டதாக வந்த
குறுஞ்செய்தியை
ஊர்ஜிதப்படுத்தியது
தொலைக்காட்சிசெய்தி...

இன்னுமாய்
கடந்த காலத்திலும்
மரணம் வந்து
சென்ற சுவடுகளைக்
காண்கையில்
துளிர்த்து விடுகிறது..
கண்ணீர் சரம்சரமாய்..

இப்போதும்
மரணம் அடிக்கடி வந்து போகிற
சலையோரத்தில்தான்
எனது தினசரி பயணமும்..
சாதிக்க நிறைய இருக்கிறது..
சந்திப்பேன்..
சாவகாசமாய்..

கடைசி குறுஞ்செய்தி

எந்த நிமிடமும்
எனது கடைசி
குறுஞ்செய்தி
கிடைக்கப்பெறலாம் ...
ஆதலால்
நட்பே
உடனுக்குடன் பதில்
அனுப்பிவிடு...
ஏனெனில் அது
நான் பெற இருக்கிற
கடைசிக் குறுஞ்செய்தியாகக்
கூட இருக்கலாம்...

Wednesday, September 16, 2009

மழை..

காற்று மேகத்தை
மேகம் மழையை
மழை வாசனையை
வாசனை ரசனையை
ரசனை கவிதையை
அனுப்பியிருக்கிறது...
இதில் கவிதை
எங்கே
ஒளிந்திருந்தது ?

நீயும் வண்ணத்துப்பூச்சியும்..


எனக்காக
வண்ணத்துப்பூச்சியும்
நீயும்
விழித்திருக்கும்
இந்த இரவு
எத்தனை அழகானது..

திருடு போன இரவு...

இரவுகளை
திருடிக் கொள்பவர்கள்
எல்லோரும்
இதயத்தைத்
திருடிக் கொள்வதில்லை..
ஆனால்
இதயம் திருடப்பட்டவர்கள்
எல்லோரும் இரவுகளில்
சல்லடை போட்டு
தேடுகிறார்கள்
திருடிய முகத்தையும்...
திருடப்பட்ட கணத்தையும்..

Tuesday, September 15, 2009

ஆறாத வடு

உன் மனதில்
வடு ஏற்பட
காரணமாக
இருந்திருக்கிறேன்
என்ற ஒற்றை வார்த்தை போதும்..
என் ஆயுள் முழுக்க
ஆறாத வடுவாக
துயரப்படுத்த..

விசில் சத்தம்..



தனது நடமாட்டத்தை
அறிவிக்கும்
விசில் சத்தத்தோடு
கடந்து போகும்
கூர்க்கா வெளிப்படுத்துகிறான்...
தெருக்களின் மீதான அக்கறையை..




இருளும் இம்மி ஒளியுமான
எனதறையிலிருந்து
எழும் கேவல்கள்
இன்னும் வீடுவந்து சேராத
அவனைத் தொட்டிருக்குமோ?

நினைவைத்தவிர..

உன்னைச் சந்திக்கவோ
பேசவோ
தொடர்புகொள்ளவோ
இயலாத சமயத்தில்
இந்த அறிவியல் சாதனங்கள்
எல்லாம் வெற்றாகிறது..

நினைத்த நேரத்தில்
நினைவைத் தவிர
வேறென்ன
நம்மை ஒன்று சேர்க்கும்?

Monday, September 14, 2009

மரணத்தின் வாழ்த்தோடு..


என்றாவது ஒருநாள்
உனது எல்லாத் தொடர்புகளிலிருந்தும்
முற்றிலும் துண்டிக்கப்படுவேன்..
அப்போது
மரணம் என்னைத்
தூக்கிச் சென்றிருக்கும்..
உனது தேடுதலில்
கண்டெடுக்கப்படும்
உயிரற்ற எனதுடலில்
சிந்தும் உன் கண்ணீர்
எனதுடலின் ஏதேனும்
ஒரு துளை வழி
நுழைந்தாலே
உயிர் பெற்று எழுவேன்..
மரணத்தின் வாழ்த்தோடு..

Saturday, September 12, 2009

வெள்ளை பொய்களும்.. கருப்பு உண்மைகளும்..


அந்த முதல் சந்திப்பில்
சில வெள்ளைத்தாள்
சுற்றப்பட்ட பொருட்களைப்
பரப்பி வைத்திருந்தாய்..

அவைகளை
வீட்டிற்கு எடுத்து வந்து தினமும்
விளையாடி கொண்டிருந்தேன்..

ஒருநாள் இரவு
கையில் வைத்திருந்த அந்த பொருள்
பால்கனி வழியாக உருண்டோடியது..
அதிலிருந்து தெறித்தது..
சில வெள்ளை பொய்களும்..
சில கருப்பு உண்மைகளும்..

நமக்கிடையே...

எனது தூக்கத்தைக்
கலைக்க வேண்டாமென நீயும்
கலைக்க வேண்டுமென
பொய் தூக்கத்தில் நானும்
மருகிய அந்த நொடியில்
மின்மினி பூச்சியொன்று
நமக்கிடையே வந்தமர்ந்தது..

எதை பரிசளிக்கப் போகிறாய்?



என் கண்களில்
கொஞ்சம் புன்னகையையும்
என் உதடுகளில்
கொஞ்சம் கண்ணீரையும்
ஏந்தி நிற்கிறேன்..
எதை பரிசளிக்கப் போகிறாய்?

சந்திப்பின் சாட்சியாக.. .


உன்னிடம் பேச வேண்டுமென நானும்
என்னிடம் பேச வேண்டுமென நீயும்
நினைத்துக் கொள்ளும் நிமிடங்களில்
எங்கோ ஒரு செடியில்
ஏதோ ஒரு பூ மலர்கிறது ..
நம் நினைவுகள்
சந்தித்துக் கொண்டதின்
சாட்சியாக ...

ஒரு பூ உதிர்கிறது..

யார் முதலில்
பேசுவதென தயங்கி
நிற்கையில்
எங்கோ ஒரு சரத்தில்
ஏதோ ஒரு பூ
உதிர்ந்து போகிறது..

நீ இல்லாத பொழுதுகளில்




உனது குறுஞ்செய்திகளை
சேமிக்கிறேன்..
நீ இல்லாத பொழுதுகளில்
அவை என்னோடு
பேசியபடியிருக்கும்
உன் மனதின் அசைவுகளை..

கண்ணீரின் சுவடு



*தாமதமாய் வீடு
திரும்புவாயென
தெரிந்தும்
காத்திருந்து காத்திருந்து
சில துளி கண்ணீருடன்
தூங்கிப் போகிறேன்..
விடிகாலையில் பார்க்கிறேன்
உனது உதடுகளில்
கண்ணீரின் சுவடு...

காத்திருந்த மழை




நடுசாமத்தில்
யாருமறியாமல் எனக்காக
காத்திருந்த மழை விடியலில் சற்று
கண்ணயர்ந்திருக்கிறது
தெருவெங்கும்..

மழைக்கான அறிகுறி











வீடுகளில் தஞ்சம் புக
இரவெல்லாம் போராடிய
மழைக்கான அறிகுறிகள்...
ஜன்னலோரக் கம்பிகளிலும்..
நேற்று மாலை எடுக்க மறந்த
மொட்டைமாடி துணிகளிலும்...

துளி மழை




நீ என் காதுகளில்
துளி மழை ஊற்றினாய்..
இதோ என் கைகளில்
பிரசவிக்கிறது அது
துளித்துளியாய்..