எதிர் வீட்டுக் குழந்தை
என்னிடமிருந்து
தினமும்
ஒரு கையசைப்பையும்
ஒரு முத்தத்தையும்
பெற்று விடுகிறது
எந்த ஒரு தயக்கமும்
தடையும் இன்றி
நானும்
எதிர் வீட்டுக் குழந்தையாய்
பிறந்திருக்கலாம்
உனக்கு..
என் காலுக்கான செருப்பு அழகானதா? பொருத்தமானதா? என்பதை விடவும் எனக்கு பிடித்தமனதா? என அறியும் உனக்கு தெரியாமலா போய் விடும்? எனது இன்னும் சில விருப்பங்கள்
பரிசோதனை செய்யப்பட பல வாசனை திரவியங்களின் கலவைகளும் இருவரின் கைகளிலும் நறுமணம் வீசுகிறது.. நேரம் கடந்த பின்னும் இனி அதில் மிச்சமிருக்கப் போவது உனக்கு என் வாசமும் எனக்கு உன் வாசமும்..
என் சுவாசம் வெளியேறுகிறது
உன்னைத் தேடி
நீ உள்ளே ஒளிந்து கொள்கிறாய்
சுவாசம் உள்ளே நுழைகிறது
நீ வெளியே ஓடி மறைகிறாய்
வெளியேறியும்
உள்ளிறங்கியும்
அலையும் சுவாசம்
உன்னைக் காண இயலாமல்
திரும்புகிறது
தன் கூட்டிற்கு
வெற்றுடம்புடன்...
கடற்கரையிலிருந்து
கடைசியாக வெளியேறிய நம்மை
வழிமறித்த அலை கெஞ்சியது..
அடுத்த அலை வரும் வரை
துணையிருக்கச் சொல்லி..
அலைக்குத் துணையாக
பேசியபடியிருந்தபோதில்
நமக்கு துணையாக
வந்தமர்ந்தது
காதல்...
நமக்கிடையேயான
அத்தனை
இரகசிய வார்த்தைகளையும்
நீ சொன்ன போதும்
உன் குரல் மாறிய
இரகசியம் மட்டும்
பிடிபடாமல்
அல்லாடுகிறேன்..
இரவின் கைப்பிடிக்குள்
சிக்குண்டு..
உன் விரலும்
உன் குரலும்
பேசியதில் தானே
நம் நெருக்கமும்
நேசமும் இறுகியது..
இன்றுன் குரல் மாற்றத்தால்
என் இதயமும் மருகியது
இமைகளும் உருகியது
என்ன செய்ய போகிறாய்?
தனித்தனியாக தமனி சிறை
வலது இடது
என்றிருந்த
நான்கறைகளிலும்
ஒருவரே வசித்திருப்பதால்
அறைகளை பிரித்திருந்த
சுவர்களை இடித்து
ஒரே அறையாக்கிவிட்டேன்..
இனி உலவித்திரியலாம்
வெளியெங்கும்
தடைகளின்றி..
சாட்சிகள் ஏதுமில்லை
என் இரகசிய
வார்த்தைகளுக்கு..
அதனூடான அர்த்தங்களுக்கு
காட்சிகள் தொலைந்த பின்னும்..
ஏந்தி நிற்கிறேன்
சிந்திய கனவுகளை சேகரித்து
பொங்கி நிற்கும்
கண்ணீரை உள்விழுங்கி