தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Tuesday, November 30, 2010
சாலை விதி
சாலை விதிகள்
மட்டுமே
பழக்கபட்ட எனக்கு
உனது காதலின் விதிகள்
புதிதுதான்..
விதி கொல்லுமோ?
அல்லது
விதியை கொல்வேனோ?
விளையாட துணிந்துவிட்டேன்..
உனது விதிகளோடு..
சிறு பிள்ளை
பெரிதாக ஒன்றுமில்லாத
விஷயத்தை
பெரிதாக்கி
சிறு பிள்ளையென
காட்டுகிறாய்..
சிறிதாக
நடப்பவற்றை
பெரிதாக்கி
பேசுகையில்
உணர்கிறேன்
நானும் சிறு பிள்ளையென.
நேசம்
உனக்காக எழுதப்பட்ட
உன்னால் எழுப்பப்பட்ட
கவிதைகளை
புத்தகமாக்கும்
முயற்சியில்
இருவரும் தேர்ந்தெடுக்கிறோம்..
நான் வாசிக்க
நீ ஆமோதிக்க
ஆயிரம் கவிதையில்
ஆறேழு கவிதை தவிர
அத்தனையையும்
தேர்ந்தெடுத்தோம்..
அத்துணை கவிதைகளும்
ஏக்கத்துடன் பார்க்கின்றன..
நம்மை தேர்ந்தெடுத்த
நேசம் அனாதையாய் அலைவதை.
உடை
உடைத்து விடக் காத்திருக்கிறாய்
ஒரு நேசத்தை
உருவாக்கிட காத்திருக்கிறேன்
ஒரு உறவை..
புன்னகை
புன்னகையோடு நீ பேசுகிற நாட்கள் எனக்குள்
விசிறிக் கொண்டிருக்கின்றன..
மீண்டும் மீண்டும்
அனல் கொண்ட காதலை
இயலாமை
முன்னிரவில்
காயமாக்கி திரும்பும்
உன் வார்த்தைகள்
பின்னிரவில்
காயமாற்றி
உறங்குகின்றன..
இரண்டின் போதும்
விழிப்பற்று கிடக்கிறது
என் இயலாமை..
Friday, November 26, 2010
முத்தம்.
பயப்படாதே..
நமக்கிடையேயான
சிறு அனுபவங்களும்
கவிதையாவதைப் போல்
ஆகிவிடாது
நம் முதல் முத்தம்..
துளிமழை
என் நேசம் ஆக்கிரமிப்பின்
வெளிப்பாடல்ல..
அக்கறையின் துளிமழை..
மனம்
என்னை அதிகம் புரிந்து
வைத்திருப்பதாக காட்டுகிறாய்
உணர்வதில்லை..
அதை விட உன்னை அதிகம்
புரிந்து வைத்திருக்குமென் மனம்
காட்டுவதில்லை..
உணர்வதால்..
ஈர்ப்பு
இருதுருவங்களின் ஈர்ப்பு குறையலாம்
கடுகளவேனும்..
என் பெருங்காதலின் ஈர்ப்பு குறையாது
அணுவளவும்..
துண்டுசீட்டு
சாலையோரங்களில்
விநியோகிக்கப்படும்
துண்டுசீட்டுகளை
வாங்கி பறக்கவிடும்
பாதசாரியைப் போல நீ..
துண்டுசீட்டாய் என் காதல் ..
Saturday, November 20, 2010
அரட்டைப்பெட்டி
நீ
பதிலிறுக்க மறுக்கும்
மின்னஞ்சலின் அரட்டைப்பெட்டி
பச்சை ஒளிர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறது..
நீ பதிலுருக்காவிட்டாலும் பார்த்தபடியிருப்பதை
சொற்கள்.
நிர்வாணமாய் நகரும்
என் நேரத்தில்
ஆடை உடுத்தி
அழகு பார்க்கிறது
உன் சொற்கள்..
அடையாளம்
காதலுக்கான அடையாளங்களென
சுட்டிக்காட்டிய அனைத்தையும்
தவிர்க்க முயல்கிறாய்..
அதுவே ஒரு அடையாளமாய்
காட்டிக்கொடுக்கிறது
உன் நேசத்தை .
மழை-2
அடித்துப் பெய்யும் மழை
உன் ஆழமான அன்பை சொல்கிறது..
தூறிச் செல்லும் மழை
உன் அன்பை அழகாகச் சொல்கிறது..
மழை
உனக்கு
பிடித்திருக்கும்
சன்னலோர மழையை
ரசிக்கிறாய்..
நனைய மட்டும்
மறுக்கிறாய்..
மழையாய் நான்..
Sunday, November 14, 2010
விலை
எந்த விலை கொடுத்தும்
பெற முடியாது
நம்பிக்கையையும்
காதலையும்
ஏனெனில்
இரண்டும்
விலைமதிப்பற்றது.
திரும்பிப்பார்
உனக்கான யாவும்
தீர்ந்து
முடிந்தபின்
திரும்பிப்பார்
நின்றிருப்பேன்..
காதலின் கையைப் பிடித்தபடி..
வார்த்தை
இவ்வளவு நாட்கள்
வெளிப்படுத்தப்பட்ட
நேசத்திற்கு
விலை கொடுக்க
தயராகிறாய்..
உன் வார்த்தைகளால்..
பெற்றுக் கொள்வேன்
என் மௌனத்தால்.
காயங்கள்
என்னிடமிருந்து
ஏதேதோ
பெற்றிருக்கிறாய்..
உன்னிலிருந்து
அள்ளிக்கொண்டது.. ஒன்றுதான்..
காலத்தாலும் மீட்க முடியாத
காயங்கள்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)