கால்பந்தில் கோல் எடுப்பது.. மட்டைப்பந்தில் விக்கெட் எடுப்பது இறகுப்பந்தில் புள்ளிஎடுப்பது சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்துவது எல்லாவற்றிலும் வெற்றி தோல்வியை ஒருவரின் கண நேர பின்வாங்குதல் அல்லது நொடிநேர சுதாரிப்பு ஏதோ ஒன்று தீர்மானிக்கிறது.. காதல் விளையாட்டில் மட்டும்தான் ஒருவரின் வெற்றி இன்னொருவரின் வெற்றியாகவும் ஒருவரின் தோல்வி இன்னொருவரின் தோல்வியாகவும் மாறுகிறது.
உன் பேர் கொண்ட அமைச்சரிலிருந்து ஐந்து வயது பையன் வரை அனைவரையும் பிடித்துப் போகிறது என் நாணத்தையும் மகிழ்ச்சியையும் பூக்கச் செய்கிறது .. உன் பெயரின் நான்கெழுத்துக்கள்..
ஒவ்வொருமுறையும் வார்த்தை முத்துக்களை உதிர்த்து காதலா? நட்பா? என சொல்ல இதயம் பல்லாங்குழியில்லை.. மூடிய கையை நீட்டி ஒன்றைத் தேர்ந்தெடுக்க இது ஒத்தையா? ரெட்டையா? இல்லை.. சிறு தக்கையினை மணலில் மூடி வைத்து சரியான இடத்தைக் கண்டுபிடிக்கச் சொல்ல இது கிச்சுக் கிச்சு தாம்பாளமில்லை. மொத்தத்திலென் முடிவை மாத்திக் கொள்ளும் உத்தேசம் ஏதுமில்லை.. என் நேசமொன்றும் விளையாட்டுப் பொருளில்லை.