Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Tuesday, September 28, 2010

இனிவரும் நாட்களும்

எனது 
கடந்த சில நாட்கள் 
அழகுற நகர்கின்றன..
இனிவரும் நாட்களும்
அவ்வாறே அமையுமெனும் 
ஆழ்மன நினைப்பினூடே..

ஓடிவந்து மடியில் புரளும்
செல்லப் பிராணிகளை விரட்டாமல்
அரவணைத்து
பூட்டப்பட்டிருக்கும் எதிர்வீட்டுச்
செடிகளுக்கு நன்னீர் ஊற்றி
பயணத்தில் எதிர்ப்படும்
குழந்தைக்கு ஈரமுத்தம் கொடுத்து
சிக்னல்களில் 
எரிச்சல்படாமல் நிதானிப்பது
புரியாமல் திட்டுவோர்க்கு
புன்னகையளிப்பதென
கடந்த சில நாட்கள் 
அழகுற நகர்கின்றன..
நெடுந்தவத்தில் கைவரப்பெற்ற
நீ எனக்குள்ளிருக்கையில் 
அழகுறவே அமையும் 
இனிவரும் நாட்களும்.

Wednesday, September 15, 2010

புன்னகை

கதறியழும் என்னை 
அடித்தாவது 
அழுகை நிறுத்த 
முயற்சிக்கிறாய் 
நீ அடிக்க அடிக்க 
அழுகிறேன்..
நான் அழ அழ 
நீ அடிக்கிறாய்.. 
கண்ணீரை துடைத்துவிடேன்,,
புன்னகைக்கிறேன்.

உன் நினைவு

உன் நினைவுகளால் 
உருமாறி வருமென் 
நிலத்தை தாக்குகிறதுன் 
சொற்கள்.. 
சில சமயம் புன்னகை மலராக.. 
சில சமயம் பூகம்ப அதிர்வாக..

Saturday, May 15, 2010

கற்பூரமாய்


சொல்வதற்கு ஏதுமில்லை
செல்வதற்கும் பாதையில்லை
காற்றில் கரைகிறேன்
கற்பூரமாய்
உன் புன்னகையின்
வாசமேந்தி.. 

கண்ணீரும் புன்னகையும்


எவ்வளவோ விலகியிருந்து
நேசித்தும்
எவ்வளவோ அருகிருந்து
சண்டையிட்டும் 
ஆகிவிட்டது
இனி ஏது நிகழ்ந்தென்ன? 
கண்ணீரும் புன்னகையும் 
கைகோர்த்தே பயணிக்கையில்.. 

Saturday, September 12, 2009

எதை பரிசளிக்கப் போகிறாய்?



என் கண்களில்
கொஞ்சம் புன்னகையையும்
என் உதடுகளில்
கொஞ்சம் கண்ணீரையும்
ஏந்தி நிற்கிறேன்..
எதை பரிசளிக்கப் போகிறாய்?