Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Friday, February 17, 2012

மழை


ஒரு மணி நேர மழைக்கே
தாங்காத சென்னை போலவே
ஒருமுறை திரும்பிப் பார்த்த
உன் பார்வைக்கே
தாங்காமல் திண்டாடுகிறது
என் மெல்லிய சிறுமூளை

மழைக்கால சாட்சி


இன்றிரவு பெய்த மழையை
ரசிக்க முடியவில்லை..
தன் வெண்துளி கரங்களால்
விடாமல் துரத்திய அதன் ஆக்கிரமிப்பு
ஐம்புலன்களையும்
சுருக்கிக் கொள்ள இட்டக் கட்டளை..

சேர்க்கையின் குறியீடெனவிருந்த நினைவுகளை
பிரிவின் குறியீடாக மாற்றிவிட்டது..

ஆழப்புதைந்த மதிப்பீடுகளை
அர்த்தமிழக்க செய்தததில்
மழைக்கு பங்குண்டு..
துயரும் புதிருமான முந்தைய நிகழ்வுகளுக்கு
முன்னொரு மழைக்காலம் சாட்சி எனும்
ஒரே காரணத்திற்காக.. 

Saturday, December 04, 2010

மழைத்துளி

உப்பிய பலூனாய் 
மேலே மேலே பறக்கிறேன்.. 
ஒரு சின்ன ஊசியுடன் 
என்னெதிரே வருகிறாய் 
மழைத்துளியின் வடிவில்.. 

மழை

என் காதலை 
மேகத்த்திடம் 
சொல்லியிருந்தால் 
மழை தந்திருக்கும்..
உன்னிடம் சொல்லியதால் 
வலி தந்தாய்.. 

என் வலியை 
உன்னிடம் சொல்லுகிறேன்.. 
முகம் திருப்புகிறாய்..
மரணத்திடம் சொல்லுகிறேன்..  
மீட்டு விடும்.. 

Friday, November 26, 2010

துளிமழை

என் நேசம் ஆக்கிரமிப்பின் 
வெளிப்பாடல்ல..
அக்கறையின் துளிமழை..

Saturday, November 20, 2010

மழை-2

அடித்துப் பெய்யும் மழை
உன் ஆழமான அன்பை சொல்கிறது.. 
தூறிச் செல்லும் மழை 
உன் அன்பை அழகாகச் சொல்கிறது.. 

மழை

உனக்கு 
பிடித்திருக்கும் 
சன்னலோர மழையை 
ரசிக்கிறாய்..
நனைய மட்டும் 
மறுக்கிறாய்.. 
மழையாய் நான்.. 

Saturday, November 13, 2010

மழை

இடைவிடாமல் 
பொழியும் 
உன் நினைவு மழையில் 
தாகம் மட்டும் 
தீர்ந்தபாடில்லை 

Tuesday, September 28, 2010

பெயரற்ற பறவை

பருவ மழையற்ற ஒரு தருணத்தில் 
அந்த விதையை என் நிலத்தில் 
விட்டுச் சென்றது
பெயரற்ற பறவையொன்று.. 

பருவமழை தப்பி பெய்த 
மறுநாள் மழையில் 
விதை வேர்பிடித்து..
பதினைந்தாம் நாள் திரும்பிய பறவைக்கு
ஆச்சர்யம் கொடுத்தது.. 

நாளாக ஆக விருட்சமாவதை 
கண்கூடாகக் கண்ட பறவை 
அதன் வசீகரத்தையும் 
அதன் கனிகளையும் 
பாராட்டியபடி இருந்தது.. 

பின்னொருநாள் 
சோர்வுடன் திரும்பிய பறவை 
அந்த மரத்தை விட்டுப் போவதாக சொல்ல 
நிலம் கதறியழுதது..  

எதையும் பொருட்படுத்தாத 
பெயரற்ற அந்த பறவை 
அதற்குப் பின் பகல்வேளைகளில் 
வருவதில்லை.. 

இலைகள் சிறிது சிறிதாக 
உதிரத் துவங்கின.. 
மரம் பட்டுப் போக துவங்கியது.. 
இன்னும் ஒரே ஒரு இலை மிச்சமிருக்கிறது ..
அந்த பறவையின் வருகைக்காக காற்றிலசைந்தபடி..

மழைத்துளி...

பெருமழை பெய்த 
இரவொன்றில் 
ஊடலிலிருந்த நமக்கிடையில் 
விழுந்த மழைத் துளிகளை ஒன்றாக்கி 
ஒற்றைவிரலால் 
கோடு கிழித்து நதியாக்கி 
உன் பக்கம் திருப்பினேன்..
அந்த நதியில் 
நீந்தி வந்தென் கரை சேர்ந்தாய்.. 
வெளியே மழை சற்றே குறைந்திருந்தது.. 

Saturday, May 15, 2010

அழிவுறா எழுத்து


சிதைவுற்ற பொழுதுகளை
சீராக்கியும்
மங்கிப் போன கனவுகளுக்கு 
ஒளியேற்றியும்
வெறிச்சோடியிருந்தயென் பூமியில் 
விதையூன்றியும்
மேகங்களைத் திரட்டி
மழைபொழிந்தும்
பசுமை நிறைத்த உன் நேசத்திற்கு
எதைக் கொடுத்து ஈடாக்குவேன்?
அழிவுறா எழுத்துக்களில்
உன்னை வாழவைப்பதை தவிர.. 

கண்ணீர்த்துளிகள்


அவசியமற்றதாக இருக்கிறது
நேற்று நள்ளிரவிலிருந்து
இன்று அதிகாலை வரை 
தூறும் மழை..
எனது பேச்சினைப் போல்..
வாசனையோடு
வெப்பத்தையும் 
வெளிக்கிளப்பிய மழைக்கு
எப்படி தெரியப் போகிறது?
மழையோடு போட்டி போடுமென் 
கண்ணீர்த்துளிகள்.. 

காட்சிப் பிழையாய்


காட்சிப் பிழையாய் 
நகருமென் கணங்களில் 
சரியாய் பொருந்தியிருக்கிறாய்..

எங்கெங்கு காணினும் 
நீயே தோன்றுகிறாய்..

குறைந்த தூர, நீண்ட தூர பயணத்தில்
பேருந்திற்காக காத்திருக்கையில்
பேருந்தில் ஜன்னலோரத்தில் தலைசாய்க்கையில்
எங்கேனும் மண்வாசம் உணருகையில்

திடீரென மழை நனைக்கையில்
கொளுத்தும் வெயிலில் மரநிழல் எதிர்ப்படுகையில்
முடியைக் கலைக்கும் ஜன்னல் காற்றில்
குழந்தைகளுடன் குதூகலிக்கையில்

சொந்தங்கள் பலவும் பேசுகையில்
நண்பனின் திருமணத்தில்
தூரத்து உறவினரின் இரங்கலில்
பாட்டியென் கைபற்றி பேசிய கணங்களில்

பசி வயிற்றைக் கிள்ளியெறியும் போதில்
வயிறு நிரம்பியிருக்கும் வேளைகளில்
அலுவலக வேலை நேரங்களில்
அமைதியை நாடும் தனிமையில்

மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்கையில்
அதுனூடாக இரகசிய வார்த்தைகளை இடுகையில்
மெல்லிசையில் மனம் லயிக்கையில்
குறுஞ்செய்தி வருகயில் எழும் ஒலியில்

தொலைபேசி அழைப்பு வருகையில்
சிக்னலில் பரபரக்கையில்
படுக்கையில் ஓய்வெடுக்கையில்
நாளிதழ்கள் வாசிக்கையில்

கவிதைகள் படிக்கையில் 
கனவுகளை நினைக்கையில்
எண்ணங்களை சொல்கையில்
ஏக்கங்கள் எழுதுகையில்
துயரம் மேலிட அழுகையில் 

மகிழ்ச்சி எட்டிப்பார்க்கையில்
படுவேகத்தில் நிதானிக்கையில்
ரசனை மிகுகையில்
காலை எழுமுன் உருண்டு புரள்கையில்

இரவு நித்திரையில் வீழ்கையில்
இதயம் துடிக்கும் தோறும்
இமைகள் மூடியிருக்கும் போதும்
வாழ்தலின் தூண்டுதலிலும்

மரணத்தின் விளிம்பிலும்
எங்கெங்கு காணினும்
காட்சிப் பிழையாய்
சரியாய் பொருந்தியிருக்கிறாய்!

Wednesday, September 30, 2009

உனக்கான மழை..


நீ வருவாயென
நெடுநேரம்
காத்திருந்து கரைந்ததில்
நீ வரமுடியாதென
தெரிவித்த மறு நொடியில்
மழை வந்து
அழைத்துப்போனது
வீட்டிற்கு..

மழைத்துளி...

மழைத்துளியில்
நனைய வருகிறாயாவென
கேட்டதற்கு
நீ சரியென
தலையசைத்தத்தில்
பெருகி ஆறாக
வழிந்தோடியது..
நம்மிலிருந்து
பெரு மழைக்கான விதை..

Saturday, September 12, 2009

காத்திருந்த மழை




நடுசாமத்தில்
யாருமறியாமல் எனக்காக
காத்திருந்த மழை விடியலில் சற்று
கண்ணயர்ந்திருக்கிறது
தெருவெங்கும்..

மழைக்கான அறிகுறி











வீடுகளில் தஞ்சம் புக
இரவெல்லாம் போராடிய
மழைக்கான அறிகுறிகள்...
ஜன்னலோரக் கம்பிகளிலும்..
நேற்று மாலை எடுக்க மறந்த
மொட்டைமாடி துணிகளிலும்...

துளி மழை




நீ என் காதுகளில்
துளி மழை ஊற்றினாய்..
இதோ என் கைகளில்
பிரசவிக்கிறது அது
துளித்துளியாய்..