Showing posts with label இரவு. Show all posts
Showing posts with label இரவு. Show all posts

Tuesday, September 28, 2010

‘வெண்ணிற இரவு’

‘வெண்ணிற இரவு’ பற்றி
நள்ளிரவில் 
பேச்சைத் துவக்கி
அதிகாலை வரை நீட்டித்தாய்..
மாறிப்போயிருந்தது
அடுத்தடுத்த 
என் இரவுகள்
வெள்ளையாக.

Wednesday, September 15, 2010

உன் கண்கள்

பரிச்சயமான வீட்டின் 
அனைத்து 
அறைகளுக்கும் 
சென்று திரும்பும் இருளில்
கைகளே கண்ணாகிறது..

பரிச்சயமற்ற 
என் உள்ளத்தின் 
அறைகளைத்
தொட்டுச் செல்லும் 
உன் கண்கள் கைகளாகிறது..

உறக்கம்.

தூங்கும் நேரத்தில் 
பேசலாமென 
துண்டிக்கிறாய் இணைப்பை.. 

பேசுகிறேன்
அந்நேரத்தில் 
நாளை பேசலாமென்று 
தூங்கிப் போகிறாய்

தூங்குமுன்னை ஏக்கமாய் 
பார்த்தபடி 
விழித்திருக்கிறதென் உறக்கம்..

Saturday, June 12, 2010

இன்னும் ஒரே இரவு.

''துயர்மிகு வரிகளை இன்றிரவு 
நான் எழுதக் கூடும்"
பாப்லோ நெரூடாவின்
அந்த வரிகள் 
என்னை அழுத்திக் கொண்டேயிருக்கிறது.. 
  
நீ இரவாகும் போது 
நான் நிலவென்றும் 
நீ நிலவாகும் போது 
நான் இரவென்றும் 
நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள் 
வலியை அதிகப்படுத்துகிறது.. 

ஒவ்வொரு முறையும் 
உன் வரவால் 
அலங்கரிக்கப்பட்ட இரவு 
மூன்று நாட்களாக 
மூளியாயிருக்கிறது.. 

நீ வந்துவிட்டால் 
இனி ஒவ்வொரு இரவும் 
முழுநிலவின் உச்சம்.. 
உன் வருகைக்காக
என்னிடமிச்சமிருக்கிறது 
இன்னும் ஒரே இரவு..

Saturday, May 15, 2010

தேவதை


சில சமயம் தேவதையாகவும்
பல சமயம் இராட்சசியாகவும்
உருமாற்றும்
மந்திரவித்தை
நள்ளிரவில் 
மொட்டைமடியில் 
நிலவைப் பார்த்தபடி
பேசும் உன் குரலுக்கு உண்டு..

இருளை இழுத்துப் போர்த்தியபடி..


காதுக்குள் இசை வழிந்திருக்க 
கண்களில் கனவுகள் கசிந்திருக்க 
நிகழ்காலத்தில் வருங்காலம் வடிந்திருக்க 
மெல்ல இருள் முடிந்து விடிந்திருக்க 
அக்கணத்தில் உன் வருகை நிகழ்ந்தது 
அனைத்தையும் துடைத்துவிட்டு 
அடைக்கலமாகிறேன்   உன் வெப்பத்திற்குள்
இருளை இழுத்துப் போர்த்தியபடி.. 

கடிபட்ட இரவு


பாம்பிடம் கடிபட்ட இரவு 
தூங்காமலே 
கழிய வேண்டுமென்பதாய் 
உன்னிடம் 
கடிபட்ட என் சிந்தனை 
ஒவ்வோர் இரவும் 
தூங்காமலே திரிகின்றது..

நமது நிழல்கள்..


நீயும் நானும்
எங்கே நின்று கொண்டிருக்கிறோம் 
என்பதை
புரிந்து கொள்ளக் கூடியது..
இந்த இரவில் நாம் பேசும் 
வார்த்தைகள் என்கிறாய்..

நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
இருப்பதை மறைத்துக்
கொண்டு பேசுவதை
கேலி செய்கின்றன
நமது நிழல்கள்..

Thursday, December 31, 2009

சமபலம்

காலையில்
என் முன் நிற்கும் போது
உன் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறேன்..

மாலையில்
உன் முன் நிற்கும் போது
என் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறாய்..

இரவு வரட்டும்
இருவரும் சமபலத்தோடு
சந்திப்போம்..
என் பலத்தை
உனக்கு முழுதாகவும்
உன் பலத்தை
எனக்கு முழுதாகவும்
பரிமாறிக் கொள்ள..

நிலவு இரவு

எனக்கு நீ நிலவாகும் போது
உனக்கு நான் இரவாகிறேன்..
உனக்கு நான் நிலவாகும் போது
எனக்கு நீ இரவாகிறாய்..
இரவோடு நிலவும்
இந்த உறவு
பூத்தபடி இருக்கும்
பல நூறு இரவுகளிலும்..

Wednesday, September 30, 2009

ஈடுகட்ட..

இந்த இரவினை
உயிர்ப்புடன் அணுக
கற்றுத் தரும்
உனக்கு
என்ன வழங்கி
அதை ஈடுகட்ட...
என் வெளிகளில்
உலவ உன்னை
அனுமதிப்பதை தவிர..

Saturday, September 26, 2009

இரவின் நிகழ்தகவு..

ஏதும் நிகழ மறுத்த இரவில்..
எல்லாம் நிகழ்ந்ததாக..
எண்ணுகிற மனம்
எல்லாம் நிகழ்ந்த இரவில்
ஏதும் நிகழாததாக
ஏங்கும்..
இது இரவின் நிகழ்தகவு..