Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts

Friday, February 17, 2012

ஒரே ஒரு வேற்றுமை



புதிய காதலுக்கும்
பழைய காதலுக்கும்
ஒரே ஒரு வேற்றுமையும்
பலப்பல ஒற்றுமையும்
இருக்கிறது..

நெடுநேரம் பேசுவது
இரவுகளில் கரைவது
பார்க்கத் துடிப்பது
படித்ததை பகிர்வது
பிடித்ததை செய்வது
இப்படி ஒற்றுமை பலப்பல..

வேற்றுமை என்னவெனில்
ஏதோவொரு காரணத்திற்காக
உங்களாலோ
அவளா(னா)லோ
நிராகரிக்கப்பட்ட
மறுதலிக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
காதலுக்கு
வாழ்தலின் அர்த்தம் உணர்த்தி
நம்பிக்கையின் நீரூற்றும் பாங்கே... 

Thursday, May 27, 2010

நீயளித்த நம்பிக்கை


உன்னைச் சுற்றி 
வருமென் நினைவுகளை 
புறந்தள்ளி 
என் நேசத்திற்கு 
பெரும்கொள்ளி 
வைத்துவிட முயல்கிறாய்
ஒருக்காலும் 
நீயளித்த நம்பிக்கை 
வார்த்தைகளுக்கு முன்னால் 
தோற்று திரும்பாதென் நேசம். 

Tuesday, May 25, 2010

நம்பிக்கை


நமது நேசத்திலுடனிருந்த 
இரவும், பகலும், நாயும்
கவிதையும், காகமும், 
விமானத்தின் பேரிரைச்சலும்
செல்லக்குட்டியும்
அலைபேசியும், குறுஞ்செய்தியும்
சமாதானப்படுத்துகின்றன..
நான் துவளுகையில்..
இன்னும் நம்பிக்கை
இழந்துவிடாதபடி..

Saturday, May 15, 2010

நம்பிக்கை


ஒரு இதயத்தின் துடிப்பை
நிறுத்த அதிக பிரயத்தனம்
செய்ய வேண்டியதில்லை..
அதன் நம்பிக்கையின் முனையில் 
சற்றே ஒற்றைச் சொல்லால் 
உராய்த்துச் செல்வதே
போதுமானது..

ஒரு மகிழ்வின வேரை பிடுங்க
அதிக முயற்சி தேவையில்லை..
அதன் பூக்களின் இதழ்களை 
சற்றே காலடியில் மிதித்துச் 
செல்வதே போதுமானது..

ஒரு மரணத்திற்கான 
வரவேற்பிற்கு 
எப்போதும் அதிக முயற்சியும் 
பிரயத்தனமும் தேவையாயிருப்பதில்லை.. 
ஒரு பிறப்பிற்கான கடும்முயற்சியையும்
நம்பிக்கையையும் போல்.. 

வாழப்பிரியப்படும் ஏக்கம்..


என் இரவுகளில் கரைந்துருகி 
பகல்களின் சாலைகளில் 
வழிந்தோடுமென் நேசத்தை
காலத்தின் கைப்பையிலிருந்து 
மீட்டுவிடும் முயற்சியில்
தோற்பதே வாடிக்கையாயிருக்கிறது..
என்றேனும் வெற்றிகிட்டிவிடுமென
நம்பிக்கையின் ஒளிக்கீற்றில் 
ஓடிக் கொண்டிருக்கிறதென் நேசம் 
வாகனங்களில் அடிபட்டுவிடாத 
எச்சரிக்கையுடனும்..
வாழப்பிரியப்படும் ஏக்கத்துடனும்..

நம்பிக்கை


வசீகரிக்கவும்
நெருங்கி அன்பு செய்யவுமான
எனக்கான சாத்தியங்களை
ஒளித்து வைக்கப் போவதில்லை..

எப்போதும் போலான 
அல்லது 
அதைவிட இன்னும்
மேலானவற்றை 
உருவாக்க முயல்கிறேன்..

‘நம்பிக்கை’ எனும் வார்த்தைக்கு
உயிர் கொடுக்கும் சிலரில் 
நானும் இருந்துவிட்டு போகிறேன்..