Saturday, November 13, 2010

வழிமுறை

அனைத்து விதமான 
வழிமுறைகளையும் 
கையாளுகிறோம்..
விட்டு விட நீயும்..
விடாமலிருக்க நானும்..

அன்பு

என் அன்பு 
பூரணத்துவமானது 
எனில் பலிக்கட்டும். 
இல்லை 
உன் பிடிவாதத்தில் 
பலியாகட்டும்.

காதல்

ஏமாற்றியது 
நீயோ நானோ 
அல்ல. 
ஏமாந்து போனதென்னவோ 
காதல் தான்.

குரல்

எவ்வழி சென்றாலும் 
எனக்குள்ளே 
ஒரு வலியாய்
உன் குரல்

ஆறுதல்

ஆறுதல் தேவை இல்லை.. 
ஆறாமல் இருக்கும் வரை தான் 
நினைத்ததை முடிக்கும் வேகம் இருக்கும்.

நீ

நீ நினைத்திருக்கிற 
யாவும் நடக்கும் என 
நள்ளிரவில் 
பிறந்ததின வாழ்த்துக்கள் சொல்லி 
மகிழ்வூட்டினாய்..
நான் நினைத்திருக்கும் 
நீ என்னுடன் கைகோர்த்து  
நடந்தால் போதும்..

சுவாசம்

காரணங்கள் சொல்வதற்கில்லை 
சில விஷயங்கள் தோன்றுவதற்கும் 
மறைவதற்கும்
சுவாசம் நடைபெறுவதை போல.. 

மழை

இடைவிடாமல் 
பொழியும் 
உன் நினைவு மழையில் 
தாகம் மட்டும் 
தீர்ந்தபாடில்லை 

விதைகள்

விதைத்தவன் உறங்கினாலும் 
விதைகள் உறங்குவதில்லை 
நேசத்தை விதைத்தாய் 
நொடிதோறும் விருட்சமாகிறேன்.. 

கால்கள்

காலாற நடந்து செல்கையில் 
கைகளைப் பற்றி கொண்டோம்.. 
கால்கள் நடப்பதை விட்டு 
பறந்து செல்கிறது..

தற்கொலை

காலத்தை வீணாக்குவது 
தற்கொலைக்கு சமம்.. 
காதலை வீணாக்குவது 
கொலைக்கு நிகர்..

குறுஞ்செய்தி

பண்டிகைக் கால நாட்களை எண்ணி 
விரைவாகவும், 
நிறைவாகவும் 
வேலை செய்யும் தொழிலாளியின் 
மனநிலைதான் எனக்கும்..
நீ சந்திக்க வருகிறாய் என்று குறுஞ்செய்தி 
அனுப்பியதில் இருந்து,.. 

Tuesday, September 28, 2010

பெருந்தாகமும் ... போர்க்கோபமும்

கையேந்தி நிற்குமென் நேசத்திற்கு 
எரிச்சலை தருமுனக்கு 
இப்போது தெரியாது..
அந்த கைகளுக்குப் பின்னாலிருக்கும் 
பெருந்தாகமும் ...
போர்க்கோபமும்

மகிழ்வு

மிகுந்த துக்கத்திலிருக்கையில்
தூங்கிவிடுவது வழக்கம்..
இப்போது தாக்கும் 
இந்த துக்கத்திலிருந்து மீளவும்  
தூங்கப் போகிறேன்.. 
இனி எப்போதும் எனை 
துக்கம் தாக்க முடியாதெனும் 
மகிழ்வுடன்.. 

உன் பிம்பம்.

நீ காயப்படுத்திய 
இதயத்தை 
நீயே சுமந்து சென்று விடு.. 
அதிலிருந்து வழியும் 
இரத்தக் கறைகளில் 
நிழலாடுகிறது..
உன் பிம்பம்.. 

பெயரற்ற பறவை

பருவ மழையற்ற ஒரு தருணத்தில் 
அந்த விதையை என் நிலத்தில் 
விட்டுச் சென்றது
பெயரற்ற பறவையொன்று.. 

பருவமழை தப்பி பெய்த 
மறுநாள் மழையில் 
விதை வேர்பிடித்து..
பதினைந்தாம் நாள் திரும்பிய பறவைக்கு
ஆச்சர்யம் கொடுத்தது.. 

நாளாக ஆக விருட்சமாவதை 
கண்கூடாகக் கண்ட பறவை 
அதன் வசீகரத்தையும் 
அதன் கனிகளையும் 
பாராட்டியபடி இருந்தது.. 

பின்னொருநாள் 
சோர்வுடன் திரும்பிய பறவை 
அந்த மரத்தை விட்டுப் போவதாக சொல்ல 
நிலம் கதறியழுதது..  

எதையும் பொருட்படுத்தாத 
பெயரற்ற அந்த பறவை 
அதற்குப் பின் பகல்வேளைகளில் 
வருவதில்லை.. 

இலைகள் சிறிது சிறிதாக 
உதிரத் துவங்கின.. 
மரம் பட்டுப் போக துவங்கியது.. 
இன்னும் ஒரே ஒரு இலை மிச்சமிருக்கிறது ..
அந்த பறவையின் வருகைக்காக காற்றிலசைந்தபடி..

மழைத்துளி...

பெருமழை பெய்த 
இரவொன்றில் 
ஊடலிலிருந்த நமக்கிடையில் 
விழுந்த மழைத் துளிகளை ஒன்றாக்கி 
ஒற்றைவிரலால் 
கோடு கிழித்து நதியாக்கி 
உன் பக்கம் திருப்பினேன்..
அந்த நதியில் 
நீந்தி வந்தென் கரை சேர்ந்தாய்.. 
வெளியே மழை சற்றே குறைந்திருந்தது.. 

ஒரு தொடக்கமும், ஒரு முடிவும்..

எப்போது வேண்டுமானாலும் 
நிகழ்ந்துவிடக்கூடிய 
தொடக்கமொன்றும் 
முடிவொன்றும் 
இருவருக்குமிடையில் 
மௌனித்திருக்கிறது.. 

உன் பிடிவாதத்தைத் 
தூக்கிஎறிந்து ஒரு தொடக்கத்தையோ 
என் பிடிவாதத்தை 
தொடர்ந்து ஒரு முடிவையோ 
எட்டிவிடக் கூடிய காலம் 
வெகுதொலைவில் இல்லை..
எப்போது வேண்டுமானாலும் 
நிகழ்ந்துவிடும் 
ஒரு தொடக்கமும், ஒரு முடிவும்.. 

ஊசி

மௌன வாளால் 
வெட்டி சாய்ப்பதைவிடவும் 
வலிக்கிறது.. 
உன் வார்த்தை ஊசிகள் 

வலி

வலியிலிருந்து 
தப்பித்து செல்ல 
ஓடி ஒளிகிறேன் இரவுக்குள்..
இரவில் கரைந்திருக்குமுன் குரல்  
என் வலியினை  
சிறிது சிறிதாய் உண்ண
வலியிருந்த இடங்களில் 
முந்தைய வலிகள் மறைந்து 
புதிய வலி பிறந்தது..