Wednesday, February 24, 2010

நீயின்றி

நீ தாமதமாய்
திரும்பும் போதெல்லாம்
நான் தூங்கி விட்டேனா
என்றே கவனிக்கிறாய்
உனக்கு புரிவதில்லை
என் இமையே
நீயின்றி
விழியுறங்குவது எப்படியென?

எதிர் வீட்டுக் குழந்தை

எதிர் வீட்டுக் குழந்தை
என்னிடமிருந்து
தினமும்
ஒரு கையசைப்பையும்
ஒரு முத்தத்தையும்
பெற்று விடுகிறது
எந்த ஒரு தயக்கமும்
தடையும் இன்றி
நானும்
எதிர் வீட்டுக் குழந்தையாய்
பிறந்திருக்கலாம்
உனக்கு..

Friday, February 19, 2010

சில விருப்பங்கள்

என் காலுக்கான செருப்பு 
அழகானதா? 
பொருத்தமானதா? 
என்பதை விடவும் 
எனக்கு பிடித்தமனதா? 
என அறியும் உனக்கு 
தெரியாமலா போய் விடும்? 
எனது இன்னும் 
சில விருப்பங்கள் 

நறுமணம்

பரிசோதனை செய்யப்பட 
பல வாசனை திரவியங்களின் 
கலவைகளும் 
இருவரின் கைகளிலும் 
நறுமணம் வீசுகிறது.. 
நேரம் கடந்த பின்னும் 
இனி அதில் மிச்சமிருக்கப் போவது 
உனக்கு என் வாசமும் 
எனக்கு உன் வாசமும்.. 

Wednesday, February 17, 2010

மீட்டெடு

உன் தொடர்பிலிருந்து
துண்டிக்கப்படும் போது
என் பூமியின்
ஈர்ப்புவிசை
ஒழுங்கற்றதாகிறது..

என் கடலின் அலைகள்
கரைகளால்
விழுங்கப்படுகிறது..

என் அமைதியை
சிதறடிக்கிறது
மீட்டெடு
யாவற்றிலுமிருந்து
காத்திருக்கிறேன்
யுகம் யுகமாய்
உன் வருகைக்காக..

காற்றில் கலவாமலே

விலகிச் செல்வதின்
கணம் தாங்காமல்
அலையுறும் மனதின்
ஆற்றாமையைக்
கண்ணுறாமல் நகர்கிறாய்

மீண்டும் வெளியேற
எத்தனிக்கும் சொற்கள்
காற்றில் கலவாமலே
கரைந்து விடுகிறதென்
வெப்பத் தாக்குதலில்

சில சமயங்களில்
குழந்தையென புரண்டழுவதும்
சில சமயங்களில்
கட்டளையிடும் தொனியிலும்
வெளிப்படுமென் சொற்களில்
ஆங்காங்கே தூவியிருக்கிறேன்
உன் மீதான நேசத்தை..

நீயேயறியாத தருணத்தில்
உனக்குள் விழுந்து கிடக்குமது
உன் பார்வையின்
வழி கசிகிறது
நான் எதிர்படுகையில்..

Tuesday, February 16, 2010

அலையும் சுவாசம்

என் சுவாசம் வெளியேறுகிறது
உன்னைத் தேடி
நீ உள்ளே ஒளிந்து கொள்கிறாய்
சுவாசம் உள்ளே நுழைகிறது
நீ வெளியே ஓடி மறைகிறாய்
வெளியேறியும்
உள்ளிறங்கியும்
அலையும் சுவாசம்
உன்னைக் காண இயலாமல்
திரும்புகிறது
தன் கூட்டிற்கு
வெற்றுடம்புடன்...

இரவுகளைத் தவிர.

காதலர் தினத்தில்
உனக்கு பரிசளிக்க
என்னிடம் யாதுமில்லை
என் இரவுகளைத் தவிர..

துணை

கடற்கரையிலிருந்து
கடைசியாக வெளியேறிய நம்மை
வழிமறித்த அலை கெஞ்சியது..
அடுத்த அலை வரும் வரை
துணையிருக்கச் சொல்லி..
அலைக்குத் துணையாக
பேசியபடியிருந்தபோதில்
நமக்கு துணையாக
வந்தமர்ந்தது
காதல்...

Saturday, February 13, 2010

வரம்


உன் மடியில் 
மரணிக்கும் 
வரம் தருவாய்
உன் விழிகளில் 
வாழ்கிற 
வரமின்றி போனாலும்..

Thursday, February 11, 2010

பலம்

என் பலமெல்லாம்
நீயாயிருக்க
எனக்கு அவசியமில்லை
பிற பலமும்
பிரபலமும்

கவிதை

எனது
எல்லா எழுத்துக்களிலும்
கவிதையைப் பார்க்கிறாய்
எனது
எல்லா கவிதையிலும்
காதலை வைத்திருக்கிறேன்

உன் சிரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு
வெளியாகும் அத்தனை
வார, மாத இதழ்களிலும்
காதல் கவிதைகளாக
வெளியாக என்னையும்
அனுப்பச் சொல்கிறாய்

உன்னைத் தவிர
வேறு யாருக்கும்
என் கவிதைகளைத் தர
விரும்புவதில்லை என்றேன்
ஏதோ புரிந்ததாய் சிரித்தாய்
என் கவிதையை விட ரசமானது
உன் சிரிப்பு

Wednesday, February 10, 2010

துணையாய்

என் வீடு வரை 
துணையாய் வந்தாய்
உன் வீடு வரை 
துணையாய் வந்தேன்
இருவரும் தனித்தனியாய்
வீடு திரும்ப 
துணையாய் வந்தது காதல்

Thursday, February 04, 2010

ஆதரவு

தலையனையின்றி
உறங்கும்
என் நேசத்திற்கு
என் கைகளும்
கவிதைகளுமே
ஆதரவு..

என் கவிதை

ஒழுங்காக மூடப்படாத
குழாயிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரா என் கவிதை?
இறுக்கி மூடியும்
கண்களிலிருந்து
வடிந்து போகும்
சொட்டு நீரே என் கவிதை.

Wednesday, February 03, 2010

காதலை மறைத்து

இந்த உலகில்
யாவற்றையும் விடவும்
கடினமானது
காதலை மறைத்து
இயங்குவது..
எல்லாவற்றையும் விட
வலியானது
காதலுற்றவரிடமே
அதை சொல்லமுடியாமல்
தவிப்பது..  

தக்கை

ஐம்புலன்களும் 
தப்பிக்க 
வழியற்று 
தத்தளிக்கிறது
அலையில் விழுந்த
தக்கையாய்
நீ அருகிருக்கையில்..

கரை

எழும்புவதும்
அடங்குவதுமாய்
என் வார்த்தைகள்
உன் கரை தொடாமலே
திரும்புகின்றன
ஒவ்வொருமுறையும்..

கடினம்

காதல் செய்வதா கடினம்?
அதை சொல்வதா கடினம்?
உண்மையாய்
காதல் செய்வது கடினம்..
அதை உரியவரிடம்
சொல்வது அதைவிட கடினம்..