Tuesday, January 26, 2010

சூரிய ஒளி


சூரிய ஒளியை 
கருப்பு உள்வாங்கி இழுக்கும் 
வெள்ளை வெளித்தள்ளும் 
நேசத்தில் நான் கருப்பும் 
நீ வெள்ளையுமாய்.. 

கவிதை கருவுற்றது..


புதிதாய் 
பிறந்த கவிதையொன்றை 
உனக்குத் தர 
காத்திருந்தேன் 
கவிதையும் காத்திருந்தது 
வெகுநேரம் 
கண்ணைய்ர்வதும் 
திடுக்கிட்டு எழுவதுமாய் 
உறங்கியிருந்தேன் 
கவிதை உறங்கவில்லை.. 
உன் நுழைந்து 
என்னோடு பகிர்ந்தாய் 
உன்னை 
காத்திருந்த கவிதை 
கருவுற்றது.. 

வெள்ளை நிழல்


நீண்ட இரவில் 
உன்னோடு பயணம் 
கண்ணாடிகளில் 
பார்வை பகிர்ந்து 
வேகத்தடைகளில் 
நிதானம் மீறி 
இயல்பாக எழும் பெருமூச்சு 
உன் எல்லை வந்ததும் 
இறங்கி ஏதோ பேச 
ஏறியதென் கோபம் 
திரும்பிப் பார்க்காமல் 
முன்னேறுகிறேன் 
எதையனுப்பி 
இந்த முறை 
சமாதனப்படுத்தப்போகிறாய்? 
நினைத்தபடியே 
உறங்கிப் போனேன்.. 
நள்ளிரவில் சத்தமிட்டு 
எனதறைக்குள் 
சமாதானம் பேச வந்தது.. 
உனது வெள்ளை நிழல்..

நேசக்கிடங்கு


என் சிந்தனைகளை 
சேமிக்கவும் 
செலவு செய்யவும் 
இயற்கை எனக்களித்த 
நேசக்கிடங்கும் 
அறிவும் அழகும் நிறைந்த 
பெட்டகமும் நீ 

அசைவு


எப்படி 
கண்டுகொள்கிறாய்
பேசாத போதும் 
பார்க்காத போதும் 
துயருறும் 
என் மனதின் அசைவுகளை..  

காலணி


கட்டிலுக்கடியில் 
கழற்றிப் போடப்பட்டிருந்த 
என் காலணியில்
கண்ணாடி மின்னியபடியிருந்தது    
விளக்குகளை அணைத்த பின்னும் 
என் கண்களிலிருந்து 
கசியும் ஒளியும் 
காலணியின் கல்லிலிருந்து 
வெளியாகும் ஒளியும் 
இருளை ஊடுருவி 
வெளிச்சமான நுலிழை அளவிலான 
மெல்லிய ஒளிப்பாதையை 
சமைக்க 
அதிலேறிப் பயணப்பட்டது 
எனக்கான கனவுகள் 
தன் அத்தனை தடைகளையும் 
உடைத்தபடி.. 

நிலவெது நீயெது


நிலவிருக்கும் திசைநோக்கி 
அழைக்கிறேன்
வந்தபின் 
நிலவெது நீயெது 
அறியாமல் 
குழம்பினேன் 
சற்று நேர தடுமாற்றத்திற்குப் பின் 
கண்டுகொண்டேன் 
பிரகாசமேறியிருக்கும் 
உன் கண்களையும் 
அது சிந்தும் புன்னகையையும்  வைத்து.. 

எதை கைக்கொள்ள?


உன்னை 
எனக்குள்ளிருந்து 
இறக்கிவிட சொல்கிறாய் 
கால் வைத்து நுழைந்திருந்தால் 
கோல் வைத்து விரட்டியிருப்பேன் 
கண் வைத்தல்லவா 
நுழைந்திருக்கிறாய்..
அங்குள்ள அறைகளை 
உருட்டியிருக்கிறாய்.. 
மலர் கொடுத்து வரவேற்றிருந்தால் 
காம்போடு கிள்ளி  எறிந்திருப்பேன்.. 
மணம் கொடுத்தல்லவா 
வரவேற்றேன் 
சுவாசத்தில் ஒளித்து வைத்தேன்..
எதை புறம் தள்ள? 
எதை கைக்கொள்ள? 

ஒளி உமிழ் ..இருள் குடி


பின்னிரவில் 
பதற்றத்துடன்
விழிப்பு வருகிறது 
கைப்பேசியை 
அழுத்தி மணி பார்க்கையில் 
உனது ஐந்து குறுஞ்செய்திகளும் 
இரண்டு தவறிய அழைப்புகளும் 
வந்திருக்க 
உன்னை அப்போதே 
தொடர்பு கொள்ளும்பொருட்டு 
குறுஞ்செய்திகளையும் 
அழைப்புகளையும் செய்கிறேன் 
பதிலிறுக்காத நிலையில் 
நீ உறங்கி போயிருப்பாயென 
உணர்ந்து இருள் மேய்கிறேன்.. 
அந்த பின்னிரவு விடிகாலை நோக்கி 
மெல்ல நகரத் துவங்கியது 
இருள் குடிப்பதும் 
ஒளி உமிழ்வதுமாய்.. 

ஆடுகளம்

ஆட்டத்தின் 
ஆரம்பத்தை அறிந்தவனே
விதிகளை மீறி
ஆடுகளத்தில் நுழைந்தாய்
அதற்கு பெயர்
அழுகுணி ஆட்டமே
இதில் தோற்பவர்
வென்றவராகவும்
வென்றவர்
தோற்றவராகவும்
கருதப்படும்..
விருப்பம் இருந்து
விதிமுறைகள் அறிந்து
விளையாடத் தயாராயிருப்பவர்கள்
காலத்திற்குள் காலடி வைக்கவும்.
மற்றவர்கள் பார்வையாளராக
வெளியே நிற்கவும்..

புன்னகை

என் அதிகாலை 
தொடங்குவதும் 
இரவு போர்வைக்குள் 
அடங்குவதும் 
உன் புன்னகையின் 
வெளிச்சத்தில்.. 

வருகை


என் நொடிகளை 
நாட்களை 
நிமிடங்களை 
வெயிலும் மழையுமான 
பருவ காலத்திற்கு 
மாற்றியதுன் வருகை.. 

உன்னைவிட


ஒரு வருடம் 
ஒரு மாதம் 
ஒரு நாள் 
உன்னை விட 
வயது குறைவாயிருக்கலாம் 
நேசம் வைப்பதில்
உன்னைவிட 
ஒரு அங்குலமேனும் 
அதிகப்படியானவள் 
என்பதை மறுக்க இயலாது 
நீயும் கூட.. 

Monday, January 25, 2010

நந்தியாவட்டை

மொட்டுவிட்டிருந்த 
நந்தியாவட்டையின் 
ஒவ்வொரு இதழ்களிலும் 
உனக்கும் எனக்குமான சில சொற்கள் 
ஒளிந்திருந்தன.. 

வீட்டில் யாரும் பார்க்குமுன் 
பறித்து வந்து 
புத்தகத்தின் பக்கங்களில் 
வைத்து மூடினேன்.. 

இரண்டொரு நாட்களுக்குப் பின் 
பிரித்த புத்தகத்திலிருந்து 
விழுந்தது.. 
நந்தியாவட்டையும் 
குட்டி நந்தியாவட்டையும்.. 

Saturday, January 23, 2010

விழிகள்.

பண்பலை
கேட்டபடியே
உறங்கிப் போயிருந்தேன்..
நீ எனதறையில்
நுழைந்த போது ...

காதுகளிலிருந்து
கருவியினை
கழற்றி வைத்திவிட்டு
முடிகோதி
அருகமர்ந்தாய்..

உனது வாசம்
என் நாசி தொட
விழித்துப் பார்த்தேன்..
உற்றுப் பார்த்த
உன் விழிகளில் இருந்து
பெருகிய நேசத்தை
சிதறாமல் ஏந்தியது
என் விழிகள்..

நடுநிசி

எப்போதும்
பின்னிரவில்
விரல் கொண்டு தேடுகிறாய்
நாள் முழுதும்
உன்னைத்  தொடருமெனக்கு
அந்த நடுநிசியில்
சிறு ஆறுதலை
தருகிறது..
உன் தேடுதல்..

தோள்

பகல் நேர
வெயிலின் கொடுமை
இரவு நேர
பனியின் கடுமை
ஏதும் செய்திடாது
உன் தோள் பற்றி
செல்லுமென்னை..

இரை

நெருக்கடியான
வேலைகளுக்கு
இடையிலும்
கிடைக்கும் துளி
நேரத்தையும்
உன் நினைவின் பசிக்கு
இரையாக்கி விட்டு
பசித்திருக்கிறேன்..

சட்டை பை

விழி மூடி
கிடக்கையிலும்
உன் நினைவு ஓடிக் கடக்கிறது
நொடிதோறும்..
ஒரு அடி கொடுத்து
உறங்க வைக்கிறேன்..
வாய் பொத்தி
அழுதது
கண்ணயர்ந்த போது
மீண்டும் எழுந்தோடுகிறது..
உன் சட்டைப்பை நோக்கி..

Friday, January 22, 2010

குட்டித் தொப்பை

என் குட்டித் தொப்பை 
மேலெழும்பும் போதெல்லாம் 
நீ அவை பற்றி 
சொன்ன விளக்கங்களும் 
கேலிகளும் 
எழும்பி அடங்குகின்றன..