Friday, February 17, 2012

நமக்கிடையேயான யாவும்


பொங்கும் உன் மகிழ்வு
ஏங்கும் உன் பாசம்
தாங்கும் உன் துயரம்  
தூங்கும் உன் அழகு
யாவற்றையும் அறியும் முதல் தோழியாய்
உன்னை நேசிக்கும் இறுதிக் காதலியாய்
தொடரும் என் பயணத்தில்
மாறியும் மாறாமலுமாய் இருக்கிறது
நமக்கிடையேயான யாவும்.. 

வலி


கடும் காய்ச்சலாலும்
கொடும் வயிற்றுவலியாலும்
பெரும் கழுத்துவலியாலும்
நீ அவதிப்பட்டு அழும்போதெல்லாம்
வலியில் சுருண்டு போகிறேன்
இரைவிழுங்கிய மலைப்பாம்பென

இரண்டும்


வந்து வந்து மறைகின்றன...
மகிழ்வின் போது
கோபத்தில் முகம் திருப்பியதும்
கோபத்தின் போது
வாரியணைத்துக் கொண்டதும்

தாயுமானவன்


கோபம் வந்தால் அரற்றி
கொஞ்சம் கழித்து அரவணைத்து 
பசியறிந்து பரிமாறி
துயரறிந்து துணிவூட்டி
யாதுமாகி நின்றாள் என் அம்மா
தாயுமாகி வந்தாய் நீ

பிறவியின் பயன்


இந்த பிறவியின் பயனை
அடைந்துவிட்டேனென்று
உணர்ந்தபோது
நீயுன் காதலை
எனக்கு கையளித்துக் கொண்டிருந்தாய்..

கசப்பு


எனது அத்துணை
கசப்புகளையும்
செரித்து வெளித்தள்ளும்
பக்குவம் வாய்த்திருக்கிறது
உனது காதலுக்கு..

சந்திப்பின் முன்னும் பின்னும்

சந்திப்பின் முன்னும் பின்னுமான
நிகழ்வுகளை
அசைபோடும் ஒவ்வொரு முறையும்
திகைப்பும் வியப்பும் மேலிடுகிறது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
நாமறியாமல் துளிர்த்த நேசம்
இன்று விருட்சமாகி நிற்கும் பேரழகைக் கண்டு..

Saturday, December 04, 2010

அடையாளம்

எல்லாமே அனுபவம்தான் 
வாழ்வதும்.. 
வீழ்வதும்..
வாழ்வது வெற்றியின் அடையாளம்..
வீழ்வது வெற்றியின் அலங்கோலம். 
வாழவிரும்புகிறேன்.. 
அடையாளத்தோடு

செத்துப் போ

போராடி வாழ்ந்து 
போராடி வாழ்ந்து 
போரடித்து விட்டது..
கொஞ்சம் செத்துப் போகலாம்.. 
போராடாமல்.

மழைத்துளி

உப்பிய பலூனாய் 
மேலே மேலே பறக்கிறேன்.. 
ஒரு சின்ன ஊசியுடன் 
என்னெதிரே வருகிறாய் 
மழைத்துளியின் வடிவில்.. 

மழை

என் காதலை 
மேகத்த்திடம் 
சொல்லியிருந்தால் 
மழை தந்திருக்கும்..
உன்னிடம் சொல்லியதால் 
வலி தந்தாய்.. 

என் வலியை 
உன்னிடம் சொல்லுகிறேன்.. 
முகம் திருப்புகிறாய்..
மரணத்திடம் சொல்லுகிறேன்..  
மீட்டு விடும்.. 

Wednesday, December 01, 2010

காதல்

நான் சொல்வதெல்லாம் காதல் 
காதலைத் தவிர
வேறொன்றுமில்லை..

நாளொரு மேனி

வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் 
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக 
உன்னால் கண்டுகொள்ளப்படாத 
நேசத்தை.. 

நேசம்

என் நேசம் 
உன்னைக் காயப்படுத்தினால் 
நிறுத்திக் கொள்வேன்
என் சுவாசத்தை.. 

Tuesday, November 30, 2010

சாலை விதி

சாலை விதிகள் 
மட்டுமே 
பழக்கபட்ட எனக்கு 
உனது காதலின் விதிகள் 
புதிதுதான்.. 
விதி கொல்லுமோ?
அல்லது 
விதியை கொல்வேனோ? 
விளையாட துணிந்துவிட்டேன்..
உனது விதிகளோடு.. 

சிறு பிள்ளை

பெரிதாக ஒன்றுமில்லாத 
விஷயத்தை 
பெரிதாக்கி 
சிறு பிள்ளையென 
காட்டுகிறாய்..
சிறிதாக 
நடப்பவற்றை 
பெரிதாக்கி 
பேசுகையில் 
உணர்கிறேன் 
நானும் சிறு பிள்ளையென.

நேசம்

உனக்காக எழுதப்பட்ட
உன்னால் எழுப்பப்பட்ட 
கவிதைகளை 
புத்தகமாக்கும்   
முயற்சியில் 
இருவரும் தேர்ந்தெடுக்கிறோம்..
நான் வாசிக்க 
நீ ஆமோதிக்க 
ஆயிரம் கவிதையில் 
ஆறேழு கவிதை தவிர 
அத்தனையையும் 
தேர்ந்தெடுத்தோம்.. 
அத்துணை கவிதைகளும் 
ஏக்கத்துடன் பார்க்கின்றன.. 
நம்மை தேர்ந்தெடுத்த 
நேசம் அனாதையாய் அலைவதை.

உடை

உடைத்து விடக் காத்திருக்கிறாய் 
ஒரு நேசத்தை 
உருவாக்கிட காத்திருக்கிறேன் 
ஒரு உறவை..

புன்னகை

புன்னகையோடு நீ பேசுகிற நாட்கள் எனக்குள் 
விசிறிக் கொண்டிருக்கின்றன.. 
மீண்டும் மீண்டும்
அனல் கொண்ட காதலை

இயலாமை

முன்னிரவில் 
காயமாக்கி திரும்பும் 
உன் வார்த்தைகள் 
பின்னிரவில் 
காயமாற்றி 
உறங்குகின்றன.. 
இரண்டின் போதும் 
விழிப்பற்று கிடக்கிறது 
என் இயலாமை..