Thursday, December 24, 2009

கருங்குவளை

கருங்குவளை மலரை
கையிலேந்தி நிற்கிறேன்..
அதனுள்ளிருக்கும்
ஒற்றை மகரந்தமாய்
எப்போது வந்தமர்வாய்..
என்னில் சேகரமாய்..

சுவாசம்


என் இதய துடிப்பின்
ஓசை கேட்டு
உன் துயில் களையும்
என்றால் அன்பே
என் சுவாசம்
சற்றுநேரம்
நிறுத்திவைப்பேன்..

குறுஞ்செய்தி


மேகத்திலிருந்து
சிந்தும் முதல்மழை துளி
மார்புரசும் குளிர்ச்சியாய்
உன் குறுஞ்செய்தி..

கவிதை..

திறந்தேதான் இருக்கிறது..
கவிதையோடு என் மனமும்
நீ வாசிப்பதற்கும்
வசிப்பதற்கும்..

Wednesday, December 16, 2009

அனுமதி..

என்னையும்
என் நேசத்தையும்
உனக்குள்
உலவ அனுமதித்தமைக்கு
என்றென்றும்
என் நன்றியை
எழுத்தில் பதிவு செய்கிறேன்..
எனக்குப் பிறகும்
உன்னிடம் அது நிலைத்திருக்கும்..

தனிமை..

நீ
இரவு
தனிமை
எனக்கு பிடித்த காரணத்தால்
இன்னும் நீட்டிக்க முயல்கிறேன்..
என் நாட்களை..

நிலவு


என் குரலின்
கண்ணீரை
உனக்கு கேட்கவிடாமல்
மறைக்கிறேன்..
ஆனால் என் இதயம்
அழும் ஓசை கேட்டு
நிலவு வந்து
ஆறுதல்
சொல்லிவிட்டு போகிறது....

வழி விடு

மழை துரத்தி வருகிறது
வழி விடு..
ஒளிந்து கொள்கிறேன்
உனக்குள்..

Tuesday, December 15, 2009

பந்து

நான் வெறும் காற்றாய்
உருவமற்று திரிகிறேன்..
உன் மனமெனும்
பந்தில்
அடைத்துக் கொள்..
உயிர் பெற்று துள்ளுவேன்..

Monday, December 14, 2009

சும்மா

சொல்வதையெல்லாம்
சொல்லிவ்ட்டு
சும்மாதான் என்கிறாய்
சும்மா
எதையாவது சொல்லாதே..

செல்லரி


எப்போதாவது
புரட்டும் விரல்களுக்காக
காத்திருக்கும்
கவிதை
செல்லரித்துப் போகும் வரை..

ஏன்

சிறைபடத் தானே
விரும்புகிறேன்..
ஏன் தப்பிக்க விடுகிறாய்?

சொட்டுச் சொட்டாய்


நீ உச்சரிக்கும்
வார்த்தைகளை
சொட்டு சிந்தாமல்
ஏந்திக் கொள்கிறேன்..
சொட்டுச் சொட்டாய்
நனைக்க துவங்கி
கடலாக மாறி மூழ்கடித்து
மிதக்க வைத்தாய்
உன் நேசத்தில்..

இமை திற

விடிய விடிய ஏதேதோ
விடாமல் பேசியவளை
ஆற்றுப்படுத்தி
தூங்கும்வரை
விழித்திருந்தாய் ..
விடிந்தபின் பார்க்கிறேன்
நாற்காலியில் அமர்ந்தபடியே
உறங்கி போயிருக்கிறாய்..
எழுந்திரு அன்பே எனும்
என் வார்த்தை
உன் காதுகளை
எட்டாமல் திரும்ப..
இன்னும் நெருங்கி
உன் காதுமடலருகில்
என் மூச்சின் வெப்பத்தை
செலுத்துகிறேன்..
இமை திறந்தாய்..
இதழ் சேர்த்து..

பெரு மழை

நீ பெரு மழை
நான் சிறு மணல்
சிறு மணலாய்
காத்திருக்கிறேன்..

பெருமழையின்  
வரவிற்காக..

இதயம்

உன்னிதயத்தில்
எனக்கு இடமில்லையென
தெரியும்
ஏனெனில்
உன்னிதயமே
என்னிடமல்லவா இருக்கிறது..

மழைக்காலம் சாட்சி


உன் இரவுகள்
என் வரவாலும்
என் இரவுகள்
உன் உறவாலும்
விழாக்கோலம் தரித்துள்ளது..

இரு மனதிற்குள்ளும் தானே
அசைவு விரிந்துள்ளது..
நம் நேசத்திற்கு
மழைக்காலம் சாட்சியாகும்..
நம் சந்திப்பு
நிலவுக்கு
இனிய காட்சியாகும்..

யாசி

நேரில் தான்
இடம்தர மறுக்கிறாய்..
அதனால்
கனவிலாவது
இடம் கேட்டு யாசிக்கிறேன்..

விளையாட அனுமதி


நாம் பேசும்வரை காத்திருக்கும்
இருவரின் தூக்கமும்
இன்று விளையாட அனுமதி  கேட்டது
பேசி முடிக்கும் வரை..
வெகுநேரம்
திரும்பாத இருவரின்
தூக்கத்தையும்
தேடுகையில்
ஒன்றின் மேல் ஒன்றாய்
நிலவொளியில்
பிணைந்திருக்க
இருவரும் ஓசையெழுப்பாமல்
திரும்பி
மீண்டும் பேச துவங்கினோம்..
அதன் காதுகளுக்கு கேட்காமல்..

கவிதை

என்னையும்
கவிதையையும் பிரிக்கிறாய்..
கவிதையைப் படிக்கிறாய் ..
மேடுகள் தோறும்
எழும்பி நிற்கிறேன் நான்..
என்னைப் படிக்கிறாய்
பள்ளங்கள் தோறும்
புதைந்து கிடக்கிறது
கவிதை..

இமை சேரும்

என்னருகில்
இருப்பதாய் நினை
கண்களை இமைகளால் தழுவு..
இரு புருவங்கள் சேரும்
நெற்றியின் மையத்தில்
இரு இதழ்கள் சேர்த்து
இழைக்கிறேன் என் வாசத்தை..

இணையும் நேரமிது


இந்த இரவு
அந்த நிலவு
இங்கு நான்
அங்கு நீ
இயற்கையும் இதயமும்
இயல்பாய் இணையும் நேரமிது..
ஒரு வகை போதை இது..

கனவின் நிஜம்

சிறுதூறல்
சூடான பச்சைத் தேநீர்
ஜன்னலோரத்தில்
நின்றபடி கையில் சில கவிதைகள்
இவைகளோடு
நெருக்கமாய் உன் ஸ்பரிசம்
எப்படியிருக்கும் என்றால்
கனவென்கிறாய்..
என் கனவின் நிஜம் நீ..

Tuesday, December 08, 2009

நட்சத்திரங்கள்

நள்ளிரவில்
உன் வீட்டு மொட்டைமாடியில்
உன்னைக் காணாத
நட்சத்திரங்கள்
என் வீட்டு சாளரத்தின் வழி
நுழைந்து
காரணம் கேட்டு
ஆறுதல் சொல்லிவிட்டு
திரும்பி செல்கின்றன..
ஒளி மங்கி..

அல்லிப் பூ

முல்லைக் காட்டின்
இளவரசனுக்கு
அல்லிப் பூவின் தூது
இன்னும் வந்து
சேரவில்லையா?

சிறப்பு தினமே

சிறப்பு தினங்களில்
உன்னை சந்திக்க 
வேண்டுமென
தவிப்பதில்லைஎன் நேசம்..
உன்னை சந்திக்கும்
தினமெல்லாம்
எனக்கு சிறப்பு தினமே..

அருகிருந்து


எல்லோருடன்
இருக்கும் போதும்
யாருக்கும் கேட்காமல்
நீயும் நானும்
பேசிக் கொள்வதை
அருகிருந்து
ரசிக்கின்றது...
நமக்கிடையேயான
நெருக்கமும்
நேசமும்..

நம் பேரை

இரு ஊர்களுக்கு
இடைப்பட்ட மரங்கள் தோறும்
எழுதப்பட்டிருக்கும்
எங்களையெல்லாம்
அழித்துவிட்டு
உன் பேரையும்
என் பேரையும்
செதுக்கி வைப்பேன்..
காற்று மட்டுமல்ல..
மரங்களை கடந்து போகும்
மனங்களைஎல்லாம்
நம் பேரை உச்சரிக்க..

உறங்கச் செல்

நட்சத்திரங்களே
விழித்திருந்தது போதும்..
உறங்கச் செல்லுங்கள்...
நானும் அவனும்
துயில இருக்கிறோம்..

தூண்டி விடு

உன் குரலுக்கும்
அது பேசும் வார்த்தைகளுக்கும்
என்னுள்
புதைந்திருக்கும்
ஆற்றலை தூண்டி விடும்
சக்தி இருக்கிறதை
உணர்கிறேன்...

கவிதை வானில்

உன் வார்த்தைகள்
என்னுள் நுழைந்து
தனக்கான
இணை வார்த்தைகளைத்
தேர்ந்தெடுத்து
சிறகு விரிக்கிறது
கவிதை வானில்..

முரணாய் இயங்கு


வேகத்தைக்
கூட்டிக் குறைத்து செல்கிறேன்..
நினைவுகளும்
அவ்வாறே  இம்சிக்கிறது...
காரணங்கள் ஏதுமின்றி
உணர்வுகள்
சில நிமிடங்களுக்கொரு முறை
மாறி மாறி மறைகின்றன..
இன்னும் இன்னுமாய்
என்னை நானே
அதிகம் நேசிப்பதாகவும்
வெறுப்பதாகவும்
முரணாய் இயங்குகிறேன்...
எப்படி
இவைகளுக்கு
முடிவு கட்டுவதென
தடுமாறி தத்தளிக்கிறேன்..
மீட்டுச் செல்லவோ
மீட்டிச் செல்லவோ
யாருமின்றி...

துயில்


உன் துயில் களையும்
நேரத்திற்காக
காத்திருக்குமென்
நேசம்
உன் புறக்கணிப்பில்
நசுங்கி
மயங்கி சரிகிறது...

நிஜமேது


புனைவு கடந்தென்
நிஜத்தைத் தேடுகிறாய்..
கனவுகளில்
வாழும் எனக்கு
நிஜமேது ?

பதியமிடு

கண்ணீரில்
தத்தளிக்கும் என்
பிரியத்தை
கரைசேர்க்க
உன் வார்த்தைகளை
பதியமிடு....

ஏக்கங்கள்

குளிர் மிகுந்த இரவுகளில்
உனது குரலின்
மெல்லிய ஸ்பரிசத்தில்
கதகதப்பை
உணருமென்
ஏக்கங்கள்
சில நாட்களாய்
நடுங்குகிறது
அதீத குளிரில்..

காதலின் பல்லவி

நீ
கொடுத்துவிடுவாஎன நானும்
நான்
எடுத்துக் கொள்வேன் என நீயும்
பத்திரப்படுத்துகிற
நேசம்
கிளைத்துப் பூக்கிறது..
அதன் வாசத்தில்
தேனீக்கள்
ரீங்காரமிட்டு இசைக்கின்றன..
காதலின் பல்லவியோன்றை..

நேரம் கடந்த பின்னும்..

உன்னிடம்
பேசியபடியே தூங்கிப் போகிறேன்..
புறப்பட்டு பாதியில்
தடைபட்டு நிற்கும்
வார்த்தைகள் தானே
சிறகசைத்து பறந்து வந்து விடுகிறது...
அதற்கான நேரம்
கடந்த பின்னும்..

Saturday, December 05, 2009

நிழற்படமாய்


உன்
நினைவுகளில்
நான் மங்கலாகும் போது
நிழற்படமாய் மட்டுமே
நிறைந்திருப்பேன்..

Wednesday, December 02, 2009

அடையாளம்

உன்னைத் தவிர
வேறு யாருக்கும்
அடையாளம்
தெரியாத நிலையில்
தேடி வருகிறேன்..
எனக்கு முன்னே
என் காதல்
உலவியபடியிருந்தது
உன்னருகே..

வரப்பு


உடல்நிலை சரியில்லாத
உன்னைப் பார்க்க விரும்பி
எப்படியோ நீயிருக்கும்
முல்லைகாட்டினைக்
கண்டிபிடித்த போது
'உரியவர்கள் அழைக்காமல்
உள்ளே வரமாட்டேன்' என்ற
வாக்குறுதி நினைவுக்கு
வர வரப்பிலே நிற்கிறேன்..

இலைகள்

சில மனங்களைப் போல
மரங்களும் நினைவுகளை
சுமந்தே அசைகின்றன...
மனங்கள் சொல்ல விரும்புவதை
இலைகள் சொல்லும்
இதயம் ஏற்றுக்  கொள்ளுமாறு..

வருகை

உன் வருகை நிகழட்டும் .
என் கையிலிருக்கும்
ரோஜாவின் இதழ்கள்
காய்ந்து உதிர துவங்கும் முன்..
என்னிடம் இருக்கும்
சாவி தொலையும் முன்..

மரத்தின் இலைகள்

எப்போதும்
நாம் சந்திக்கும் இடத்தில்
நீ வராத போதும்
சற்று நேரம்
காத்திருந்து விட்டு வருகிறேன்..
நாம் மீண்டும்
அவ்விடத்தில்
சந்திக்கும் போது
என் ஏக்கங்களை
அந்த மரத்தின் இலைகள்
உன்னிடம் தனியே சொல்லும்..
--

Tuesday, December 01, 2009

காது

ஏன் எட்டவில்லை
உன் காதுகளை..
என் அழுகையும்..
அழைப்பும்..

புள்ளியாய்

நீ வரும்வரை
புள்ளிவைத்தபடியிருக்கிறேன்
ஒவ்வொரு புள்ளியின்
நடுவிலும்
இன்னுமோர் புள்ளியையும்
வைத்துவிட்டு
திரும்பி பார்க்கிறேன்..
அதன் மையத்தில்
நானுமோர் புள்ளியாய்
உருமாறி..
எப்படி மீட்டெடுக்க போகிறாய்..? ..

பலன்


உன்னுடைய
முயற்சியை
பாதியில் கைவிடும்போது
விட்ட இடத்திலிருந்து
நான் துவக்குவேன்
அதன் பலன்
கிடைக்கும் வரை..

உன் காலடியில்..

நான்
நெருங்கும்போதெல்லாம்
உறைந்து போகிறாய்
உன் பணிகளில்..
நீ நெருங்கும்போது
கரைந்தே போயிருக்கிறேன்
உன் காலடியில்..

துடிப்பு

உன்னில் இடம் கேட்டு
உன்னையே சுற்றிவந்து
அடம்பிடித்த இதயத்தை
ஆற்றுபடுத்தி
திருப்பி அனுப்பினாய்..
மனமுடைந்த  நிலையில்
முடிவை நோக்கி
பயணிக்கையில்
நீ இடம் கொடுக்க
துணிந்து எழுப்புகிறாய்..
அது தன் துடிப்பினை 
கேட்கும் சக்தியையும்
இழந்து வெகுநேரமாகிறது..

பொடியன்

டியர்
செல்லம்
கண்ணா
அன்பே
உயிரே
அழகே
அறிவே
இதயமே இப்படி எத்தனை
வார்த்தைகளை இட்டு
நிரப்பினாலும்
பொடியனுக்கு ஈடாகாது
ஒருபோதும்..