Friday, February 17, 2012

உண்மை


ஏதோ ஒன்றை
பெறும் போது
ஏதோ ஒன்றை
இழந்துவிடுகிறோம்
என்பதும் உண்மை

காதும் மனதும்


காதும் மனதும்
ஒன்றுதான் போலும்..
தம்மில் சேரும் அழுக்குகளைத்
தானே அகற்றும்
வித்தை தெரிந்தவை.. 

மழை


ஒரு மணி நேர மழைக்கே
தாங்காத சென்னை போலவே
ஒருமுறை திரும்பிப் பார்த்த
உன் பார்வைக்கே
தாங்காமல் திண்டாடுகிறது
என் மெல்லிய சிறுமூளை

கனவு


தொட்டுவிடும் தூரத்தில்
நம் கனவுகள்..
தொடர்கிறேன்
உன் வார்த்தைகளில் ஊறி..
உன் பார்வையில் ஏறி.. 

யாதுமாகி


வெட்டுப்பட்ட இடம் துளிர்க்கும்
காயம்பட்ட மனம் ஆறும்
தேடலிருந்தால் கிடைக்கும்
உண்மையிருந்தால் நிலைக்கும்
அலைபாய்ந்த நேசம் இளைப்பாறும்
யாவும் கண்டேன் உன் வருகையில்
யாதுமாகி நிற்பேன் உன் வாழ்க்கையில் 

வெறுமைக் கோப்பை



 நிரம்பிருந்த என் வெறுமைக் கோப்பைகளை
ஒவ்வொன்றாய் களவாடிப் போனாய்..
துயர் வழிந்திருந்த என் காலச் சருகுகளை
காற்றாகவே பறக்க செய்தாய்..
தேம்பித் திரிந்த என் மௌனங்களை
சொட்டு சொட்டாய் விடுவித்தாய்..
சமரசத்திற்குடன்படாத என் நேசத்தை
உடன்படிக்கை ஏதுமின்றி பாதுகாத்தாய்..
விதை பழுதா? நிலம் பழுதா? கேட்டு
முடிக்கும் முன் அறுவடைக்கு வந்து நின்றாய்..
பிழை என்னிலா? அவனிலா?
எந்த கேள்வியின் எழுப்புதலுமின்றி
என்னுடனே வாழ சம்மதித்தாய்..
என்னில் எதுவுமின்றி உன்னிடம் வருகின்றேன்..
உன்னை நிரப்பி என்னை ஆளச் செய் இப்பேருலகை.. 

ஒரே ஒரு வேற்றுமை



புதிய காதலுக்கும்
பழைய காதலுக்கும்
ஒரே ஒரு வேற்றுமையும்
பலப்பல ஒற்றுமையும்
இருக்கிறது..

நெடுநேரம் பேசுவது
இரவுகளில் கரைவது
பார்க்கத் துடிப்பது
படித்ததை பகிர்வது
பிடித்ததை செய்வது
இப்படி ஒற்றுமை பலப்பல..

வேற்றுமை என்னவெனில்
ஏதோவொரு காரணத்திற்காக
உங்களாலோ
அவளா(னா)லோ
நிராகரிக்கப்பட்ட
மறுதலிக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
காதலுக்கு
வாழ்தலின் அர்த்தம் உணர்த்தி
நம்பிக்கையின் நீரூற்றும் பாங்கே... 

தலையும் பூவுமாய்


என்னை
என்னிடமிருந்து கடத்திப் போன
முக்கிய குற்றவாளிகளில்
முதல் இடம்பிடிக்கக்கூடியது
காதல்தான்..

என்னை
என்னிடமே திருப்பித் தந்த
முக்கிய நிரபராதிகளில்
கடைசியில் இடம்பெறக்கூடியதும்
காதல்தான்

எனது நாணயத்தின்
தலையும் பூவுமாய் இருந்த காதல்
உருமாறத் துவங்கியிருக்கிறது
பச்சைபடர்ந்த தாள்களாய்.. 

அத்துணை உணர்வுகளின் கலவை


எனக்குள்
தேடித் திரிந்த
வேண்டி தவித்த
சொல்லத் துடித்த
அத்துணை உணர்வுகளின்
கலவையாக
உணரக் கிடைத்தாய்...

இனி எப்போதும்
உன்னை தவறவிடுவதற்கில்லை..
கடந்து போன
எனது பழைய பக்கங்களிலும்
உன்னை இட்டு நிரப்பியே
ஞாபகங்களை செம்மைப் படுத்துகிறேன்..

மென்மனச் சிட்டுக்குருவி


கொத்தி கொத்தி உண்ணும்
சிட்டுக்குருவியின்
பெரும்பசியோடு
உன் நினைவுகளைக் கொறிக்கிறேன்

கொறிக்க கொறிக்க கூடுகிறது
உன் நினைவின் பசி..

--------------


கொத்தி கொத்தி உண்ணும்
சிட்டுக்குருவியின்
பெரும்பசியொத்தது
உன் நினைவு தானியங்களைக்
கொத்தி தின்னும்
என் மென்மனச் சிட்டுக்குருவியும்

சந்திப்பிற்கு பின்..


நான் விரும்பிய காதலின்
அத்துணை சாயல்களும் கொண்டு
நான் பார்த்திராத
புதிய சாயலொன்றுடன்
வந்தாய்
என் சாபங்கள் மறைந்து
தேவதையானேன்
உன் சந்திப்பிற்கு பின்..

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்


எல்லாம் தீர்ந்த பின்னும்
ஏதோ மிச்சம் இருப்பதகாவே
கற்றுத் தரும் காதலை
உணர்பவர்கள்
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.. 

இனி வரும் காலம்


என் கனவுகளின் நாயகனுக்கு....
உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பூத்துச் சிரிக்கின்றன
பெயர் தெரியா பூக்கள்..
பறந்து திரிகின்றன
பெயர் அறியா பறவைகள்..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
சாரல் அடிக்கின்றது ...
பார்த்தறியா மேகத்திலிருந்து
கூதல் பிடிக்கின்றது 
உணர்ந்தறியா காற்றிலிருந்து..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பார்க்கும் முகங்கள்
உன் முகமாகின்றன..
கேட்கும் பெயர்கள்
உன் பெயராகின்றன..

ஏதுமற்ற
எதிர்பார்ப்புகளற்ற
பயணத்தினூடே
வழித்துணையாய் வந்து
வாழ்க்கைத் துணையானாய்

இதுவரை வாழ்வு கசந்தபோதும்
இனி வரும் காலம் வசந்தமாகும்


மழைக்கால சாட்சி


இன்றிரவு பெய்த மழையை
ரசிக்க முடியவில்லை..
தன் வெண்துளி கரங்களால்
விடாமல் துரத்திய அதன் ஆக்கிரமிப்பு
ஐம்புலன்களையும்
சுருக்கிக் கொள்ள இட்டக் கட்டளை..

சேர்க்கையின் குறியீடெனவிருந்த நினைவுகளை
பிரிவின் குறியீடாக மாற்றிவிட்டது..

ஆழப்புதைந்த மதிப்பீடுகளை
அர்த்தமிழக்க செய்தததில்
மழைக்கு பங்குண்டு..
துயரும் புதிருமான முந்தைய நிகழ்வுகளுக்கு
முன்னொரு மழைக்காலம் சாட்சி எனும்
ஒரே காரணத்திற்காக.. 

சிதிலமடைந்த ஞாபகங்கள்


இன்னும் விசாரிக்கப்படாமல்
நிலுவையில் நிற்கக்கூடிய
கேள்விகள் சிலவற்றிற்கு
பதிலேதும் இல்லை..

ஆவணப்படுத்தப்பட்ட
உனது ஆணவங்களை
தூக்கி எறியவோ
நெருப்பில் எரிக்கவோ கூடவில்லை

உறுதிமொழியற்ற
பேச்சுவார்த்தைகளுக்கு
உடன்போக்கு சென்ற
உயிருக்கு தற்போது நினைவு இல்லை..

ஓய்ந்து போன முயற்சிகளுக்கு
உரமூட்ட உனது சாயலில்
ஆனால் உன்னைப் போலல்லாத
நிழல் ஒன்று நிஜமானது

பழையவை துறந்து
புதியவை பிறந்த நாளொன்றில்
முன் சுவடுகளை அழிக்கும்
நோக்கம் தலை எடுக்குமுன்
மன்னிக்கவோ மறக்கவோ
தயாராக இருந்தது 
சிதிலமடைந்த என் ஞாபகங்கள்.. 

மூன்றாம் நபர்



காதலற்ற வாழ்விற்கும்
கவிதையற்ற வாழ்விற்கும்
சிறு நூலிழை வித்தியாசம்
ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

இரவுகள்தோறும் ஊறித் திளைத்த
இரண்டும் ஒன்றையொன்று
வெறித்துப் பார்த்ததன்
காரணமும் புரியவில்லை..

மிக நீண்ட போராட்டம்
தேவைப்பட்டதை
இரண்டின் வரவிலும்
உணர்ந்த கணத்தை மறக்கவில்லை..

வெற்றி தோல்வி குறித்த
அவசியமின்றி நகர்ந்த நொடிகளில்
நஞ்சு கலந்த துயரமொன்று
பரவிப் படர்ந்ததை கவனிக்கவில்லை..

எவர் கேள்விகளுக்கும்
பதில் சொல்ல தயாரில்லாத
இரண்டும் ஒருநாள்
தற்கொலை செய்துகொண்டதையும்
இதுவரை மூன்றாம் நபர் யாருக்கும்
தெரிவிப்பதற்கு
காதலோ கவிதையோ உயிருடன் இல்லை..

காதல் கதை


என் காதல்
கதையாகிவிடுமோ
எனும் தவிப்பில் நான்..

உன் கதையே
காதலுக்கு மூலமானதின்
பூரிப்பில் நீ..

இனி காதல்
கதையாக வேண்டாம்..
கதையும்
காதலாக வேண்டாம்..

கவிதையும் காதலுமாய்
சேர்ந்திருப்போம்..
மனதில் மனமாய்
வாழ்ந்திருப்போம்..



எனதின் நானும் நானின் எனதும்..



நகர்ந்து நகர்ந்து மறையும்
பயணக் காட்சிகளாய்
என் தேர்வுகளும் தேடல்களும்...

உருகி உருகி உறையும்
பனிக்கட்டிகளாய்
என் ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

விலகி விலகி இணையும்
தண்டவாளங்களாய்
என் நேசிப்பும் வாசிப்பும்..

தோற்க தோற்க முயலும்
மழைத்துளியாய்
என் பயணமும் பாதையும்..

இருள இருள ஒளிரும்
தொலைதூர வெளிச்சமாய்
என் கனவுகளும் கற்பனைகளும்

விழ விழ எழும்
கடலலையாய்
எனதின் நானும் நானின் எனதும்..

அறுவடை



உன்னை எந்த சமயத்திலும்
எந்த காரணத்திற்காகவும்
வெறுக்க மாட்டேன்..
ஏனெனில் வெறுப்பின்
வலியறிந்தவள் நான்..

மறுதலிக்கவோ
நிராகரிக்கவோ
புறக்கணிக்கவோ
உதாசீனப்படுத்தவோ
தெரியாது என் நேசத்திற்கு..

தெரிந்ததெல்லாம்
நேசிக்க மட்டுமே..
அதன் மூலம் காயம் கொள்ளவும்..

அதற்கு மேல்
இம்மியும் அறிந்திராத
என் நேசத்தை உனக்குள்
விதைத்திருக்கிறேன்..

அதன் நிழலில்
நீ இளைப்பாறும்
நாள் வரும்வரை
விலகியிருக்கட்டும்
நம் இருவருக்குமான
நெருக்கம்...

அந்த விலகலில் 
துளிர்த்துக் கொண்டே இருக்கும்
யாராலும் அறுவடை செய்து 
முடிக்க முடியாத
பெரும் விளைச்சல்..

உன்மடி


அழுதழுது
தேம்பி கண்ணயர்ந்து
கனவில் உன் மடியில்
தலைசாய்க்கிறேன்..
தூக்கத்தில் புரண்டு படுக்கையில் உணர்ந்தேன்
உன்மடியில் என் தலையிருப்பதை...