உன் மீதான
நேசத்தை
எங்கே ஒளித்து வைப்பதென
தெரியாமல்
தற்காலிகமாக
கவிதைகளில் ஒளித்து
வைத்திருக்கிறேன்..
அதை
நீ கண்டுபிடிக்கும் பொழுதுகளில்
அது சிறகடிக்கும்
காதலின் வெளியில்...
உன் சிரிப்பிலும் நல் வார்த்தைகளிலும் தெரித்தஎன் மீதான உனது அக்கறை கூடுதலாக உரிமை எடுக்கத் தூண்டியிருக்கலாம்.. அவை ஒரு காகத்திடமும் சிற்றேறும்பிடமும் கூட ஏற்படலாம்.. அதை அதீத உரிமையாகவும் .. ஒரு உறவின் துவக்கமாகவும் நினைத்துக் கொண்டது எனது புரிதலின் குறைபாடு.. வந்த வழியே திரும்பி போக முயற்சிக்கிறேன்.. சற்று ஆசுவாசப்படுத்த அனுமதி போதும்..
உனக்களித்த வார்த்தைகள் தீயினால் ஆனவை அல்ல.. மகரந்தத் துகள்களாலானவை.. நீ புன்னகைத்தால் ஒட்டி கொள்ளும்.. நீ திரும்பிக் கொண்டால் அவை காற்றில் தன்னை கரைத்துக் கொள்ளும்..
எனது தவிப்பிலும் துடிப்பிலும் இளைப்பாறுகிறாய்... ஒரு மாறுதலுக்காக சில துளி அக்கறையை பரிசளித்தாய்.. அதற்காகவே இந்த நேர துடிப்புகளை உனக்கு விருந்தளிக்கிறேன்...
எந்த நிமிடமும் எனது கடைசி குறுஞ்செய்தி கிடைக்கப்பெறலாம் ... ஆதலால் நட்பே உடனுக்குடன் பதில் அனுப்பிவிடு... ஏனெனில் அது நான் பெற இருக்கிற கடைசிக் குறுஞ்செய்தியாகக் கூட இருக்கலாம்...
இரவுகளை திருடிக் கொள்பவர்கள் எல்லோரும் இதயத்தைத் திருடிக் கொள்வதில்லை.. ஆனால் இதயம் திருடப்பட்டவர்கள் எல்லோரும் இரவுகளில் சல்லடை போட்டு தேடுகிறார்கள் திருடிய முகத்தையும்... திருடப்பட்ட கணத்தையும்..
என்றாவது ஒருநாள்
உனது எல்லாத் தொடர்புகளிலிருந்தும்
முற்றிலும் துண்டிக்கப்படுவேன்..
அப்போது
மரணம் என்னைத்
தூக்கிச் சென்றிருக்கும்..
உனது தேடுதலில்
கண்டெடுக்கப்படும்
உயிரற்ற எனதுடலில்
சிந்தும் உன் கண்ணீர்
எனதுடலின் ஏதேனும்
ஒரு துளை வழி
நுழைந்தாலே
உயிர் பெற்று எழுவேன்..
மரணத்தின் வாழ்த்தோடு..
உன்னிடம் பேச வேண்டுமென நானும்
என்னிடம் பேச வேண்டுமென நீயும்
நினைத்துக் கொள்ளும் நிமிடங்களில்
எங்கோ ஒரு செடியில்
ஏதோ ஒரு பூ மலர்கிறது ..
நம் நினைவுகள்
சந்தித்துக் கொண்டதின்
சாட்சியாக ...