Wednesday, July 29, 2009

அன்புள்ள ஆயிஷாவிற்கு..

தோழி எப்படி இருக்கிறாய்?
உன் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?

நீண்ட நாள் கழித்து இப்போதுதான் ஞாபகம் வந்ததா? என்று நீ நினைக்கக்கூடும்.
ஞாபகங்கள் எப்போதும் அழிவதில்லை தோழி. அவ்வப்போது எதிர்ப்படும் பர்தா முகங்களை பார்க்கையிலும், உன் பேர் கொண்ட எழுத்துக்களை பார்க்கையிலும்,கேட்கையிலும் , எனக்குள் உன் குழந்தையின் பிஞ்சு பாதகங்கள் தழுவும் தோறும் , இஸ்லாமியப் பெயர்கள் என் செவிகளில் நழுவும் தோறும் உனது ஞாபகங்கள் என்னைத் தொட்டுச் செல்கிறது...

எப்படி இருக்கிறது உன் படிப்பு?
பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று விவாதங்கள் சூடேறும் போது நீயும் குழம்பிப் போய்தான் இருப்பாய்? என்ன செய்வது அவ்வப்போவது நம் மக்களுக்கு விவாதத்திற்கு ஏதேனும் ஒருபொருள்தேவைப்படுகிறதே.. எது எப்படியோ நீபடித்துக் கொண்டிருப்பாய் எனபது மட்டும் நீ சொல்லாமலே அறிந்து கொள்ள முடியும். ஏனெனில் போன வருடம் எட்டாம் வகுப்புக்கே கணக்குக்கும் ஆங்கிலத்திற்கும் அவ்வளவு ஆர்வமாய் உன் தம்பியிடமும் என்னிடமும் பாடம் கற்றுக் கொண்டாய்..

திருமணத்திற்கு பிறகு பெண்கள் படிப்பது இப்போது அதிகரித்து வருகிறது.. கணவனோ அல்லது கணவன் வீட்டாரோ படிக்க வைப்பார்கள்.. ஆனால் உனது நிலைமை தான் கொஞ்சம் தலை கீழ்.. இரண்டு குழ்ந்தைகளுடன் தாய் வீட்டில் இருந்து படிக்கக் கூடிய நிலைமை.. அம்மா அப்பாவிற்கு பாரமாய் இருக்கக் கூடாது என்பதும் உன் பிள்ளைகளுக்கு உன் சம்பாத்தியத்தில் செலவு செய்ய வேண்டும் என்பது உனக்கான அதிக பட்ச ஆசை என்பதை அறிவேன்.. ஆனால் ஆயிஷா ஒரு பெண் பொருளாதார சுதந்திரம் அடையாமல் முன்னேற்றமோ விடுதலையோ கிடைத்து விடாது என்பதுதான் உண்மை.

இஸ்லாமிய மதத்தில் கணவன் இரண்டு மூன்று திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவை இல்லை.. இந்த காரணமே பெரும்பாலும் அவர்களுக்கொரு துணிச்சலை வழங்குகிறது.. அது மட்டுமின்றி பெண் என்பவள் ஆணுக்கான அணிகலன் என்பதாக பார்க்கப்படும் சமூகப் பார்வையும் ஒரு காரணம். ஆண் தவறு செய்தால் அவன் ஆண்பிள்ளை என்று சொல்லும் சமூகம் ஒரு பெண் சரியாகவே ஒரு காரியத்தை செய்தாலும் ஒரு பெண்ணுக்கு இது தேவையா? என்றே சொல்கிறது. இது மாற வேண்டும்..நாம் தான் மற்ற வேண்டும்.

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே. இனம் பெருகுவதற்கான ஒரு ஏற்பாடே.
அது பெரும்பாலும் பெண்ணுக்குத் தான் பாதகமாக இருக்கிறது.திருமணம் வாழ்வின் புத்தகத்தில் ஒரு அத்தியாயம். அந்த அத்தியாயம்மட்டுமே புத்தகமாகி விடாது. உனக்கு அது கசப்பை வாரி தெளித்திருந்தாலும் அதற்குள் இரண்டு ஆலம் விதைகளை தூவி போயிருக்கிறது.. உன் குழந்தைகள் உனக்கு எல்லாமுமாய் ஆகி விட்டார்கள்.இனி அவர்களை ஆளாக்குவதே உனக்கான பெரும் பொறுப்பாக இருக்கும்.

திருமணத்திற்கு பின் பெண்கள் சிரமப்படுவதற்கு காரணம் பல உண்டு.அதில் முதற்காரணம் பெண்ணை பெற்றவர்களுக்கு உண்டு. படிப்பை பாதியிலேயே நிறுத்துவது.. கணவனை மட்டும் கவனிப்பதே ஒரு பெண்ணுக்கான இலக்கணம் என்று பேசி பேசி நம்மையும் அதை ஏற்றுக் கொள்ள வைப்பது.. குடிகாரனாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வாழ பழக்குவது..இப்படி பல காரணங்கள் இருக்கிறது..

உனது விஷயத்தை எடுத்துக் கொள்.. நீ படிப்பில் படு சூட்டி என்று எத்தனை முறை உன் அம்மா சொல்லிருக்கிறார்கள். ஆனால் ஏழாம் வகுப்பு படித்த போதே பெரிய பெண்ணாகி விட்டாய் என்று உனக்கு திருமணம் முடித்து வைத்து விட்டார்கள். அதோடு உனது குழந்தைத்தனம் மறைந்து பொறுப்புகளை சுமக்கும் பெரிய பெண்ணாக அடையளாப் படுத்தப்பட்டு விட்டாய்..

சமீபத்தில் உன் பேர் கொண்ட படம் ஒன்றை பார்த்தேன் ..அது குறு நாவலாக முன்னரே வந்த போது நான் படித்திருக்கிறேன்..உன்னிடமும் அதை ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.. அந்த குறும்படத்தை பார்க்கையில் ஒவ்வொரு காட்சியிலும் உன் முகம் எனக்குள் வந்து போகிறது.. அந்த சிறுமி உன்னைபோலவே நன்றாக படிக்கக் கூடியவள்..இவளின் அறிவுத்திறனிறகு எந்த ஆசிரியையும் தீனி போட முடியாமல் போக ஒரே ஒரு ஆசிரியை மட்டும் அவளுக்குள் மறைந்திருக்கும் அறிவியல் அறிவையும் , மிக நுட்பமான மனதையும் கண்டு பிடித்து இவள் பின்னாளில் ஒரு விஞ்ஞானியாக வருவாள் என்று நினைக்க அந்த பெண்ணோ தன் வகுப்பு ஆசிரியைகளின் அடிக்கு பயந்து அடி வாங்கினால் வலிக்காமல் இருக்க மருந்தொன்று கண்டு பிடிக்கிறாள். அந்த மருந்தை தன்னிலே பரிசோதனை செய்யும் முயற்சியில் இறந்து போகிறாள்..அவளுக்கு நெருக்கமான விருப்பமான அந்த ஆசிரியை கதறுகிறாள்..
அந்த அழுகையில் ஒரு ஒரு உயிர் போய் விட்டதே என்ற கவலையும் அந்த குழந்தையின் உணர்வை மதிக்க தெரியாத அந்த ஆசிரியர்களையும் அவளைச் சார்ந்தவர்களையும் இனி என்ன செய்வீர்கள் என்ற பார்வையுடன் அரற்றுவாள் அந்த ஆசிரியை.

அந்த ஆயிஷாவின் கேள்விகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இன்னும் ஒரு பெண் விஞ்ஞானி கூட உருவாக வில்லை.? என்ற கேள்வி மட்டுமல்ல அவளின் ஒவ்வொரு கேள்வியும் எல்லோரையும் உலுக்கிக் கொண்டே இருக்கும் .

ஆயிஷா இன்னும் ஒன்றும் குறைந்து விடவில்லை..உன் குழந்தையும் நீயும் ஒன்றாக படிப்பதே உனக்கொரு ஆனந்தத்தை தரும் . அவர்கள் ஒன்றாம் வகுப்பு நீ பத்தாம் வகுப்பு அவ்வளவே.. தொடர்ந்து படி.. பாடப் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்து..

உனக்கான வெளி திறந்திருக்கிறது..பைக் ஓட்டக் கூட பர்தா போட்டுக் கொண்டு கற்றவள் ஆயிற்றே .. யோசி.. உன்னை பின்பற்றும் குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இரு.. உன் வார்த்தைகளால் அல்ல..செயல்பாடுகளால் அவர்களை பின்பற்ற செய்.. சில அடையாளங்களை நீ துறக்கும் போது உனக்கென ஒரு புது அடையாளம் உருவாகும் தோழி ஆயிஷா..

உன் நட்பில் இளைப்பாறும்
இவள் பாரதி

No comments: