Wednesday, July 29, 2009

தேவதையும் செல்லக்குட்டியும்

ரயிலுக்காய் காத்திருக்கிறாள் தேவதை ...
இன்னும் சற்று நேரத்தில் செல்லக்குட்டி வந்துவிடக் கூடும் ...
இரண்டு மாத பிரிவினை இருவரும் தாங்கிகொண்டதன் காரணம் செல்லக்குட்டி நிச்சயம் தேவதையுடன் சென்னையில் ஒன்றாய் தங்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கையே... ரயில் வரும் ஓசை தொலைதூரத்தில் கேட்க ஆவலுடன் எட்டிபார்த்து கொண்டிருக்கிறாள் தேவதை ..

செல்லக்குட்டியை உங்களுக்கு நிச்சயம் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .அதுவும் தேவதையைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன்..
ஏனெனில் தேவதையின் எல்லாமுமாய் இருக்கும் செல்லக்குட்டிக்கு வயது இரண்டை தொட்டுக் கொண்டிருக்கிறது..செல்லக்குட்டி வீட்டுக்கு வந்ததிலிருந்து செல்லக்குட்டி இல்லாமல் தேவதை வெளியே செல்வதில்லை.. அந்தளவிற்கு இருவருக்கும் பிணைப்பு.. மழை , வெயில் என்று பாராமல் ஊர் சுற்றி வருவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை...

ஒருமுறை சென்னை சென்ற தேவதை செல்லக்குட்டியை வீட்டிலேயே விட்டு விட்டு போய்விட திரும்பி வரும் வரை அதன் வயிற்றுக்குள் ஒன்றும் இறங்க வில்லை.. ஒருவாரம் கழித்து திரும்பிய தேவதை முதல் வேலையாய் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஓடிப்போய் செல்லக்குட்டியை பார்த்தால் அது குற்றுயிரும் குலை உயிருமாய் கிடந்தது..மீண்டும் செல்லகுட்டி பழைய நிலைக்கு திரும்ப இரண்டு நாட்கள் ஆனது..அதிலிருந்து செல்லக்குட்டியை விட்டு ஒரு போதும் பிரிவதில்லை என்ற வாக்குறுதியினை தேவதை தனக்குதானே கொடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது..

செல்லக்குட்டியுடன் வெளியே செல்லும் தோறும் மற்றவர்களின் கவனம் இவர்கள் மீதுதான் பாயும்.. தேவைதைக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றாலும் கூட இன்னொரு பக்கம் வருத்தமாய் இருக்கும். காரணம் பல நேரங்களில் செல்லக்குட்டிக்கு எதுவும் வாங்கிகொடுக்க முடியாத நிலைமை.

இரவு நேரங்களில் யாருமற்ற நெடுஞ்சாலையில் செல்வதென்றால் மார்பில் விழும் முதல் மழைத்துளியைப் போல் அவ்வளவு சுகமானது.. இருவரும் செல்கிற நீண்ட தூர பயணத்தில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்களும் இருவருக்கும் பெரிதாய் தெரிந்ததில்லை..

தேவதை வேலை நிமித்தமாய் மீண்டும் சென்னை செல்ல இந்தமுறை செல்லக்குட்டியை எப்படியாவது இரண்டொரு நாளில் அழைத்துப் போய்விட வேண்டும் என்ற எண்ணினாள். ஆனால் நினைத்தபடி எதுவும் நடக்க வில்லை.. ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை..மனிதர்கள் அன்ரிசர்வில் செல்வதே பெரும்பாடு..இதில் செல்லக்குட்டியை எப்படி கூட்டி செல்வது..? என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவாறு தேற்றி செல்லக்குட்டியை அடுத்தவாரம் அனுப்பி வைக்கும் படி வீட்டில் சொல்லிவிட்டு சென்னை கிளம்பினாள் தேவதை..

ஆனால் அது நினைத்தபடி நடக்கவில்லை..இதோ வந்துவிடும்..அதோ வந்துவிடும்.என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தது..
தேவதை தங்கியிருந்த வீட்டில் உள்ளவர்கள் இன்னும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்..எப்பொழுதும் செல்லக்குட்டியை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்ததில் தேவதையைக் காட்டிலும் மற்றவர்கள் செல்லக்குட்டியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியபடி இருந்தனர்..
செல்லக்குட்டி தங்குவதற்கும் அந்த வீட்டில் ஏற்பாடு செய்தாயிற்று..ஆனால் செல்லக்குட்டிதான் வந்தபாடில்லை..

இரண்டு மாத முயற்சிக்குப்பின் இதோ செல்லக்குட்டியின் வருகை .. செல்லகுட்டி வந்திறங்கியது.. சாக்குப்பையினுள் தன்னை பாதி மறைத்து கொண்டிருந்தது செல்லக்குட்டி.. கவுண்டரில் பணம் கட்டிவிட்டு செல்லக்குட்டி மேல் சுற்றப்பட்டிருந்த சாக்கினை அகற்றி பார்த்தால் செல்லக்குட்டிக்கு முதுகில் ஒரு கீறலும் கழுத்தில் ஒரு தழும்பும் இருந்தது.. தேவதைக்கு கண் கலங்கி விட உடன் வந்திருந்த தேவதையின் சித்தப்பா ஒருவாறு தேற்றி இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்...

கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவடைந்த செல்லக்குட்டி இப்போது தேவதையுடன் மீண்டும் பயணத்தை துவக்கியது.. அவள் எப்போது செல்லக்குட்டியை அழைத்தாலும் ஆசையை ஒட்டிக்கொள்ளும்.. அடுத்தவர் கை பட்டாலோ உயிரற்று கிடப்பது போல் தன்னை வெளிப்படுத்தும்..

தேவதை அலுவலகம் முடிந்து திரும்ப அன்று அதிகாலை மூன்று மணியாகி விட்டது.. இருப்பினும் அந்த நேரத்தில் செல்லக்குட்டியுடன் வீட்டிற்கு புறப்பட தயாரானாள். சாலையில் அவர்களை கடந்து செல்லும் வாகனங்கள் இவர்களை கவனிக்காமல் செல்லவில்லை.. செல்லக்குட்டிஎங்கும் நிற்காமல் சென்றது அந்த நாளில்தான்.. எந்த சிக்னலிலும் நிற்கவில்லை.. செல்லகுட்டி அரைமணிநேரத்தில் வீடு வந்து சேர்த்துவிட்டது.. அந்த அதிகாலை தூரலில் சில்லிட்டு நனைந்த செல்லக்குட்டியை துடைத்து விட்டு மாடிப்படிஏறினால் தேவதை.. செல்லக்குட்டியிலிருந்து வடிந்த தண்ணீர் மெது மெதுவாய் வெப்பத்தை குறைத்துவிட்டு குளிரத் தொடங்கியது..

தேவதை யாரிடமும் எப்போதும் வண்டி என்று சொன்னதில்லை செல்லக்குட்டியை ....

No comments: