Tuesday, September 28, 2010

பெருந்தாகமும் ... போர்க்கோபமும்

கையேந்தி நிற்குமென் நேசத்திற்கு 
எரிச்சலை தருமுனக்கு 
இப்போது தெரியாது..
அந்த கைகளுக்குப் பின்னாலிருக்கும் 
பெருந்தாகமும் ...
போர்க்கோபமும்

மகிழ்வு

மிகுந்த துக்கத்திலிருக்கையில்
தூங்கிவிடுவது வழக்கம்..
இப்போது தாக்கும் 
இந்த துக்கத்திலிருந்து மீளவும்  
தூங்கப் போகிறேன்.. 
இனி எப்போதும் எனை 
துக்கம் தாக்க முடியாதெனும் 
மகிழ்வுடன்.. 

உன் பிம்பம்.

நீ காயப்படுத்திய 
இதயத்தை 
நீயே சுமந்து சென்று விடு.. 
அதிலிருந்து வழியும் 
இரத்தக் கறைகளில் 
நிழலாடுகிறது..
உன் பிம்பம்.. 

பெயரற்ற பறவை

பருவ மழையற்ற ஒரு தருணத்தில் 
அந்த விதையை என் நிலத்தில் 
விட்டுச் சென்றது
பெயரற்ற பறவையொன்று.. 

பருவமழை தப்பி பெய்த 
மறுநாள் மழையில் 
விதை வேர்பிடித்து..
பதினைந்தாம் நாள் திரும்பிய பறவைக்கு
ஆச்சர்யம் கொடுத்தது.. 

நாளாக ஆக விருட்சமாவதை 
கண்கூடாகக் கண்ட பறவை 
அதன் வசீகரத்தையும் 
அதன் கனிகளையும் 
பாராட்டியபடி இருந்தது.. 

பின்னொருநாள் 
சோர்வுடன் திரும்பிய பறவை 
அந்த மரத்தை விட்டுப் போவதாக சொல்ல 
நிலம் கதறியழுதது..  

எதையும் பொருட்படுத்தாத 
பெயரற்ற அந்த பறவை 
அதற்குப் பின் பகல்வேளைகளில் 
வருவதில்லை.. 

இலைகள் சிறிது சிறிதாக 
உதிரத் துவங்கின.. 
மரம் பட்டுப் போக துவங்கியது.. 
இன்னும் ஒரே ஒரு இலை மிச்சமிருக்கிறது ..
அந்த பறவையின் வருகைக்காக காற்றிலசைந்தபடி..

மழைத்துளி...

பெருமழை பெய்த 
இரவொன்றில் 
ஊடலிலிருந்த நமக்கிடையில் 
விழுந்த மழைத் துளிகளை ஒன்றாக்கி 
ஒற்றைவிரலால் 
கோடு கிழித்து நதியாக்கி 
உன் பக்கம் திருப்பினேன்..
அந்த நதியில் 
நீந்தி வந்தென் கரை சேர்ந்தாய்.. 
வெளியே மழை சற்றே குறைந்திருந்தது.. 

ஒரு தொடக்கமும், ஒரு முடிவும்..

எப்போது வேண்டுமானாலும் 
நிகழ்ந்துவிடக்கூடிய 
தொடக்கமொன்றும் 
முடிவொன்றும் 
இருவருக்குமிடையில் 
மௌனித்திருக்கிறது.. 

உன் பிடிவாதத்தைத் 
தூக்கிஎறிந்து ஒரு தொடக்கத்தையோ 
என் பிடிவாதத்தை 
தொடர்ந்து ஒரு முடிவையோ 
எட்டிவிடக் கூடிய காலம் 
வெகுதொலைவில் இல்லை..
எப்போது வேண்டுமானாலும் 
நிகழ்ந்துவிடும் 
ஒரு தொடக்கமும், ஒரு முடிவும்.. 

ஊசி

மௌன வாளால் 
வெட்டி சாய்ப்பதைவிடவும் 
வலிக்கிறது.. 
உன் வார்த்தை ஊசிகள் 

வலி

வலியிலிருந்து 
தப்பித்து செல்ல 
ஓடி ஒளிகிறேன் இரவுக்குள்..
இரவில் கரைந்திருக்குமுன் குரல்  
என் வலியினை  
சிறிது சிறிதாய் உண்ண
வலியிருந்த இடங்களில் 
முந்தைய வலிகள் மறைந்து 
புதிய வலி பிறந்தது.. 

சக்கர வியூகம்

எந்த வித ஆயத்தமும் இல்லாமல் 
அந்த போர் மூண்டது.. 
உன் வார்த்தைகள் 
சக்கரங்களாய் சுற்றி சுழன்றன.. 
நீ வகுக்கிற வியூகங்களை 
ஒவ்வொன்றாய் தகர்த்து நிமிர்ந்தேன்.. 
சுற்றிய சக்கர வியூகத்தில் 
மீளமுடியாமல் தவிக்கிறதென் நேசம்.. 

இனிவரும் நாட்களும்

எனது 
கடந்த சில நாட்கள் 
அழகுற நகர்கின்றன..
இனிவரும் நாட்களும்
அவ்வாறே அமையுமெனும் 
ஆழ்மன நினைப்பினூடே..

ஓடிவந்து மடியில் புரளும்
செல்லப் பிராணிகளை விரட்டாமல்
அரவணைத்து
பூட்டப்பட்டிருக்கும் எதிர்வீட்டுச்
செடிகளுக்கு நன்னீர் ஊற்றி
பயணத்தில் எதிர்ப்படும்
குழந்தைக்கு ஈரமுத்தம் கொடுத்து
சிக்னல்களில் 
எரிச்சல்படாமல் நிதானிப்பது
புரியாமல் திட்டுவோர்க்கு
புன்னகையளிப்பதென
கடந்த சில நாட்கள் 
அழகுற நகர்கின்றன..
நெடுந்தவத்தில் கைவரப்பெற்ற
நீ எனக்குள்ளிருக்கையில் 
அழகுறவே அமையும் 
இனிவரும் நாட்களும்.

சுழன்றாடிய சொற்கள்

தனித்து வாழத் தெரியாதயென்
சொற்களைத் 
தொலைத்து விட்டேன்..
ஒரு மாலைப் பொழுதில் 
ஒரு உணவக விடுதியிலிருந்து 
வெளியேறிய போது..

சில நாட்கள்
தேடித் திரிந்தும்
கிடைத்தபாடில்லை..
பிறகு தேடுவதை 
நிறுத்தி விட்டிருந்தேன்..

மீண்டும் ஒருநாள்
அதே உணவகத்தில்
ஒரு பாதி அலங்கரித்தும்
மறுபாதி சிதிலமடைந்தும் 
சுழன்றாடிய சொற்கள்
அவனுக்கு அடிமையாயிருந்தன..

மீட்டெடுக்காமல்
விடைபெற்றேன்.
அடிமைப் பட்டுக் கிடக்குமென்
சொற்கள்
அவனை
ஆட்சிசெய்யக்கூடுமெனும் 
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்..

எழுது

கசப்புமிகுந்த 
கடந்தகாலத்தினை
வெட்டியெறிய 
கத்தரிக்கோலும்..

சில வெறுப்புமிக்க 
நினைவுகளை
அழித்தெடுக்க 
அழிப்பானொன்றும் 
வேண்டி நிற்கிறேன்..

இனி 
விருப்பமிக்க 
வாழ்வையெழுத 
எழுதுகோலொன்றும்.

‘வெண்ணிற இரவு’

‘வெண்ணிற இரவு’ பற்றி
நள்ளிரவில் 
பேச்சைத் துவக்கி
அதிகாலை வரை நீட்டித்தாய்..
மாறிப்போயிருந்தது
அடுத்தடுத்த 
என் இரவுகள்
வெள்ளையாக.

ப்ரியமானவனே

எப்போதும் உன் மீது 
ப்ரியங்களைப் 
பொழியக் காத்திருக்குமென் 
மேகத்தை
கலைப்பதற்காக வீசுகிறாய்..
உன் வார்த்தைகளைக் காற்றாய்..
கேள் ப்ரியமானவனே
காற்று கலைக்கும்
வேலையை மட்டும் செய்வதில்லை
பொழியத் தூண்டுவதும் அதுவே.

Thursday, September 16, 2010

அலைபேசி

இறந்து கிடக்கிறது 
என் அலைபேசி 
உன் அழைப்புக்களின்றி..
உயிர்ப்பி
ஒரு துண்டித்த அழைப்பிலாவது 

Wednesday, September 15, 2010

புன்னகை

கதறியழும் என்னை 
அடித்தாவது 
அழுகை நிறுத்த 
முயற்சிக்கிறாய் 
நீ அடிக்க அடிக்க 
அழுகிறேன்..
நான் அழ அழ 
நீ அடிக்கிறாய்.. 
கண்ணீரை துடைத்துவிடேன்,,
புன்னகைக்கிறேன்.

பழி

நசுக்கப்பட்ட 
உணர்வுகள் 
வெடித்து சிதறுகையில் 
பழி வாங்கி விடத்தான் 
தோன்றுகிறது 
சில விஷயங்களில்.. 
பொறுக்கமாட்டாமல்.

உன் நினைவு


உன்னைப்போல் 
அவ்வளவு எளிதாக..
தற்காத்து
தடுக்க முடிவதில்லை.. 
உருண்டோடிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளை.. 

நீ தரும் வலி

மிக பாதுக்காப்பாய் 
வைத்திருக்கிறேன்
நீ தரும் வலிகளை ..
எந்த வித மருந்தும் தடவாமல்.. 
வலிகள் பழகிய 
எனக்கு மட்டுமே 
கையாளத் தெரியும்.. 
யாராலும் தாங்கி கொள்ள 
முடியாத அவற்றின் 
கதறலை.. 

உன் கண்கள்

பரிச்சயமான வீட்டின் 
அனைத்து 
அறைகளுக்கும் 
சென்று திரும்பும் இருளில்
கைகளே கண்ணாகிறது..

பரிச்சயமற்ற 
என் உள்ளத்தின் 
அறைகளைத்
தொட்டுச் செல்லும் 
உன் கண்கள் கைகளாகிறது..

கண் சிமிட்டு

சண்டையில் 
தொண்டை வெடிக்க 
சுத்தும் காதல் 
சமாதானத்தில் 
கண் சிமிட்டுகையில் 
எழும் ஒலியையும் 
விஞ்சுகிறது.. 

நானும் நீயும்

எனக்குப் பிடிக்காதென்று 
பலமுறை சொல்லியும்
அதைத் தான் செய்கிறதுன் நட்பு..

உனக்கு 
பிடிக்காதென 
நீ சொல்லாமலிருந்தும்
அதைச் செய்வதில்லையென் காதல்..

உனக்குப் பிடித்தவற்றை நானும் 
எனக்குப் பிடிக்காதவற்றை நீயும்
செய்து வருகிறோம்.
இரண்டிலுமிருக்கும் 
பிடிப்பே 
நமக்கான பிணைப்பாகிறது..

உறக்கம்.

தூங்கும் நேரத்தில் 
பேசலாமென 
துண்டிக்கிறாய் இணைப்பை.. 

பேசுகிறேன்
அந்நேரத்தில் 
நாளை பேசலாமென்று 
தூங்கிப் போகிறாய்

தூங்குமுன்னை ஏக்கமாய் 
பார்த்தபடி 
விழித்திருக்கிறதென் உறக்கம்..

உன் காதலுடன்

பெரும் விபத்தில் 
மரணத்தின் வாயில் தொட்டு 
மீண்டதிலிருந்து 
வாழ்ந்து விட துடிக்கிறேன்..
மொத்தமாய் 
உன் காதலுடன்.

இடைவெளி

காதல் வந்தமர்ந்து
விளையாட வேண்டுமென்றே
விட்டு வைக்கிறோம்
உனக்கும் எனக்குமான 
இடைவெளியை

சிறு அடி

இருசக்கர வாகனத்தில் 
உன்னை ஏற்றிக் கொண்டு 
செல்லும் போது
ஏதோ பேசுகையில் 
மகிழ்வின் வெளிப்பாடாய்
உனக்கு சிறுஅடி கொடுத்துவிட்டு
வருத்தப்பட்டேன் 
வீடு திரும்பிய பின்னும்..
அந்த சிறு அடி உனக்கும் 
பிடித்திருந்தது என்றபோதுதான் 
எனக்குள் 
எடுத்து வைத்தாய்
முதல் அடியை..

அம்மாவின் சுருக்குப்பை

அம்மாவின் 
சுருக்குப்பையில் 
பணம் சேர்த்து வை.. 
சேர்த்து வைக்கும் பணத்தை 
செலவழிக்காதே.. 
அப்போதுதான் நிறைய பணம் 
வருமென்றாய்.. 
அந்த சுருக்குப்பையில் 
உன் மீதான நேசத்தை 
கொட்டி வைக்கிறேன்.. 
நிறைந்து விட்டது ஒரே நாளில்.

வெடித்தெழு

வேதனைகளை 
வேடிக்கை பார்க்கும் 
மௌனமே 
வெடித்தெழு 
சாவதற்குள் 
ஒருமுறையேனும்.... 
வரலாறு கூறும் பழிச்சொற்களில் 
ஒன்றிரண்டு குறையக்கூடும் 
உன் சந்ததிக்கு.

உன் நினைவு

உன் நினைவுகளால் 
உருமாறி வருமென் 
நிலத்தை தாக்குகிறதுன் 
சொற்கள்.. 
சில சமயம் புன்னகை மலராக.. 
சில சமயம் பூகம்ப அதிர்வாக..

Tuesday, September 14, 2010

காதலின் குரல்

என்ன செய்கிறேன் 
என்ன பேசுகிறேன்
எதுவும் தெரியவில்லை..

என்ன நடக்கிறது 
என்ன கிடக்கிறது 
எதுவும் புரியவில்லை.. 

நான் இருக்கிறேனா? 
நான் இறக்கிறேனா? 
யாரும் அறியவில்லை..

என்னைச் சுற்றி 
அழும் குரல்களில் 
காதலின் குரல் மட்டும் 
அடையாளம் தெரிகிறது.. 

என்னுயிரின் மீதம்

சொட்டு சொட்டாய்
வடிந்துகொண்டிருக்கும் 
என்னுயிரின் மீதம் 
யார் கையிலாவது கிடைத்தால் 
அவனிடம் சேர்ப்பித்துவிடுங்கள்.. 
என்னை எங்கேயாவது அவன் 
தேடி தொலைந்து போகும் முன்.

Wednesday, September 01, 2010

கால்டுவெல் முதல் தஸ்தாவெஸ்கி வரை

உன்னிடம்
எனக்கிருக்கும்
நேசத்தை
எப்போது உணர்ந்தேன்?
இரவுகளில்
தனிமையைத் தின்று தீர்க்க
ஆரம்பித்தாயே அப்போதா?
இதயத்தின் துயரங்களை
சுமக்க சம்மதித்தாயே
அப்போதா?
அருகருகே செல்கையில்
ஸ்பரிசித்துக் கொண்டோமே
அப்போதா?
கால்டுவெல் முதல் தஸ்தாவெஸ்கி வரை
மணிக்கணக்கில்
பரிமாறிக் கொண்டோமே அப்போதா?
நமக்கிடையேயான
முரண்பாடுகளிலும்
உடன்பட்டு பயணிக்கத்
தலைப்பட்டோமே அப்போதா?
இவையாவுமாகவும் இருக்கலாம்..
இதற்கும் மேலாக
முதன்முதலில்
உன்னைச் சந்தித்த
கணமிருக்கிறதே
அப்போதுதானிருக்கும்.

நொடிநேர சுதாரிப்பு

கால்பந்தில் கோல் எடுப்பது..
மட்டைப்பந்தில் விக்கெட் எடுப்பது 
இறகுப்பந்தில் புள்ளிஎடுப்பது
சதுரங்கத்தில் வெட்டி வீழ்த்துவது 
எல்லாவற்றிலும் வெற்றி தோல்வியை 
ஒருவரின் 
கண நேர பின்வாங்குதல்
அல்லது 
நொடிநேர சுதாரிப்பு 
ஏதோ ஒன்று 
தீர்மானிக்கிறது.. 
காதல் விளையாட்டில் 
மட்டும்தான் 
ஒருவரின் வெற்றி 
இன்னொருவரின் வெற்றியாகவும் 
ஒருவரின் தோல்வி 
இன்னொருவரின் தோல்வியாகவும்
மாறுகிறது.

உதைத்தாடு

இரு குழுவாக பிரிந்து 
ஒற்றைப் பந்தை 
உதைத்தாடுவதைப் போலிருக்கிறது 
ஒற்றை நேசத்தை இருவரும் 
நட்பென்றும் 
காதலென்றும் 
பந்தாடுவது

நட்புடன் உன் காதலி

உனக்கு எழுதப்படும்
கடிதம்
மகிழ்ச்சியளிக்கிறது
நட்புடன் உன் காதலி
அல்லது
காதலுடன் உன் தோழி
என கையெழுத்துடுகையில்

நான்கெழுத்து

உன் பேர் கொண்ட 
அமைச்சரிலிருந்து 
ஐந்து வயது பையன் வரை 
அனைவரையும் பிடித்துப் போகிறது 
என் நாணத்தையும் 
மகிழ்ச்சியையும் 
பூக்கச் செய்கிறது ..
உன் பெயரின் 
நான்கெழுத்துக்கள்..

தொடர்

உன்னை நேசிக்கிறேனென 
பலமுறை சொல்லிய பின்னும் 
ஏற்றுக் கொள்ள முடியாதென 
தொடர்கிறாய் 
பிடிவாதத்தினை 
தொடர்கிறேன் நானும்
எனக்கான பிடிவாதத்துடன்.